OmNamaSivaya

31-Thiruvasagam-Kandapathu

Written by Sivanmanai | Sep 10, 2026, 6:42:30 AM

திருச்சிற்றம்பலம்

இந்திரிய வயம்மயங்கி இறப்பதற்கே காரணமாய்
அந்தரமே திரிந்துபோய் அருநரகில் வீழ்வேற்குச்
சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அந்தம்இலா ஆனந்தம் அணிகொள் தில்லைகண்டேனே. (4)

இந்திரியவயம்மயங்கி இறப்பதற்கே காரணமாய் அந்தரமேதிரிந்துபோய் அருநரகில் வீழ்வேற்குச்: ஐம்பொறிகளின் வழியே மனம் மயங்கி, பிறவித் துன்பத்தில் அகப்பட்டு அழியுமளவுக்குக் காரணமாய், பற்றுக் கோடின்றி வீணே திரிந்து சென்று, கொடிய நரகத்தில் வீழத் தகுந்த நிலையிலிருந்த எளியேனுக்கு;

சிந்தைதனைத்தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட: என் அஞ்ஞானச் சித்தத்தைத் தெளிவித்து, ஆணவ மலத்தை நீக்கி, என்னைச் சிவமயமாக்கிப் பொன்னம்பலத்தில் தடுத்தாட்கொண்டருளிய;

அந்தம்இலா ஆனந்தம் அணிகொள் தில்லைகண்டேனே: எல்லையற்ற சிவானந்தப் பெருக்காய் விளங்கும் ஒப்பற்ற அழகிய சிதம்பரம் திருத்தலத்தில் அடியேன் அக்கூத்தப்பெருமானைக் கண்டுகொண்டேனே!

வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டுத்
தனைச்சிறிதும் நினையாதே தளர்வுஎய்திக் கிடப்பேனை
எனைப்பெரிதும் ஆட்கொண்டு என்பிறப்புஅறுத்த இணைஇலியை
அனைத்துலகும் தொழும் தில்லை அம்பலத்தே கண்டேனே. (8)

வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டுத் தனைச்சிறிதும் நினையாதே தளர்வுஎய்திக் கிடப்பேனை: நல்வினை, தீவினை என்னும் இருவினைகளால் தொடரும் பிறவித் துன்பத்தில் சிக்குண்டு, இறைவனைச் சிறிதளவும் சிந்தியாமல், ஆற்றாமையாலும் சோர்வாலும் தளர்ச்சியடைந்து கிடந்த எளியேனை;

எனைப்பெரிதும் ஆட்கொண்டு என்பிறப்புஅறுத்த இணைஇலியை அனைத்துலகும் தொழும் தில்லை அம்பலத்தே கண்டேனே: என் தகுதியையும் பொருட்படுத்தாமல் பெரிதும் கருணை கூர்ந்து என்னை ஆட்கொண்டு, என் பிறவிப் பிணியை அடியோடு அறுத்த ஒப்பற்ற பரம்பொருளை, அகில உலகங்களும் போற்றி வணங்கும் சிதம்பரம் திருஅம்பலத்தே அடியேன் கண்டுகொண்டேனே!

உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்துஎன் உளம்மன்னிக்
கருத்துஇருத்தி ஊன்புக்குக் கருணையினால்ஆண்டுகொண்ட
திருத்துருத்தி மேயானைத் தித்திக்கும் சிவபதத்தை
அருத்தியினால் நாய்அடியேன் அணிகொள் தில்லைகண்டேனே. (12)

உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்துஎன் உளம்மன்னி: தாயின் கருவில் என் உடம்பு ஓர் உருவமாகக்கூட உருப்பெறாத தொடக்கக் காலத்திலேயே, இறைவன் என் உள்ளத்தினுள்ளே புகுந்து நிலையாக எழுந்தருளி;

கருத்துஇருத்தி ஊன்புக்குக் கருணையினால்ஆண்டுகொண்ட: தன் அருள் எண்ணத்தை என் சிந்தனையில் பதித்து, வளரும் என் உடம்பிலும் வியாபித்து, அளப்பரிய கருணையினால் என்னை ஆட்கொண்டருளிய;

திருத்துருத்தி மேயானைத் தித்திக்கும் சிவபதத்தை: திருத்துருத்தி என்னும் திருத்தலத்தில் வீற்றிருப்பவனும், நுகருந்தோறும் தித்திக்கும் சிவஞான அனுபவமாகிய திருவடிப் பேற்றினை அருள்பவனுமாகிய பரம்பொருளை;

அருத்தியினால் நாய்அடியேன் அணிகொள் தில்லைகண்டேனே: நாய் போன்ற எளியேனாகிய யான், பெருவேட்கையோடும் பேரன்போடும் அழகு மிளிரும் சிதம்பரம் திருத்தலத்தில் கண்டுகொண்டேனே!

கல்லாத புல்அறிவிற் கடைப்பட்ட நாயேனை
வல்லாளனாய் வந்து வனப்புஎய்தி இருக்கும்வண்ணம்
பல்லோரும் காண என்தன் பசுபாசம் அறுத்தானை
எல்லோரும் இறைஞ்சுதில்லை அம்பலத்தே கண்டேனே. (16) 

கல்லாத புல்அறிவிற் கடைப்பட்ட நாயேனை: மெய்ஞ்ஞான நூல்களைக் கற்றறியாத, அற்பமான சிற்றறிவுடைய, இழிந்த நாய் போன்ற அடியேனை;

வல்லாளனாய் வந்து வனப்புஎய்தி இருக்கும்வண்ணம்: எல்லாம் வல்ல பேராற்றல் உடையானாய் வந்து, ஆன்ம பொலிவும் அழகும் எய்து மாறு;

பல்லோரும் காண என்தன் பசுபாசம் அறுத்தானை: உலகத்தவர் அனைவரும் கண்டு வியக்கும்படி, எனது ஆன்மக் கட்டுகளாகிய பசுத்துவத்தையும் பாச மலங்களையும் அடியோடு அறுத்தருளியவனை;

எல்லோரும் இறைஞ்சுதில்லை அம்பலத்தே கண்டேனே: யாவரும் போற்றி வணங்கும் சிதம்பரம் திருஅம்பலத்தே அடியேன் கண்டுகொண்டேனே!

சாதிகுலம் பிறப்புஎன்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதம்இலி நாயேனை அல்லல்அறுத்து ஆட்கொண்டு
பேதைகுணம் பிறர்உருவம் யான்எனதுஎன் உரைமாய்த்துக்
கோதிஇல் அமுதானானைக் குலாவுதில்லை கண்டேனே. (20)

சாதிகுலம் பிறப்புஎன்னும் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதம்இலி நாயேனை: சாதி, குலம், பிறப்பு என்னும் உலகியல் வேறுபாடுகளாகிய சுழலிலே அகப்பட்டுத் தடுமாறுகின்ற, ஒரு நற்பயனும் இல்லாத நாய் போன்ற எளியேனை;

அல்லல்அறுத்து ஆட்கொண்டு: இப்பிறவித்துன்பங்கள் அனைத்தையும் அடியோடு போக்கி என்னை ஆட்கொண்டு;

பேதைகுணம் பிறர்உருவம் யான்எனதுஎன் உரைமாய்த்து: அறியாமை நிறைந்த அறிவற்ற குணங்களையும், பிறர் உருவங்களைப் பார்த்து மயங்கும் தன்மையையும், 'யான்' என்னும் அகந்தையையும், 'எனது' என்னும் மகாரத்தையும் முற்றிலும் அழித்து;

கோதிஇல் அமுதானானைக் குலாவுதில்லை கண்டேனே: குற்றமற்ற தூய சிவஞான அமுதமாய் விளங்கும் பரம்பொருளை, விளங்குகின்ற தில்லை மாநகரின் கனகசபையிலே அடியேன் கண்டுகொண்டேனே!

பிறவிதனனை அறமாற்றிப் பிணிமூப்புஎன்ற இவைஇரண்டும்
உறவினொடும் ஒழியச்சென்று உலகுடைய ஒருமுதலைச்
செறிபொழில்சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம்பலம் மன்னி
மறையவரும் வானவரும் வணங்கிடநான் கண்டேனே. (24)

பிறவிதனை அறமாற்றிப் பிணிமூப்புஎன்ற இவைஇரண்டும் உறவினொடும் ஒழியச் சென்று: அடியேனுடைய பிறவித்துன்பத்தை வேரோடு முற்றிலும் நீக்கி, உடம்பைப் பற்றி நிற்கும் நோய், முதுமை ஆகிய இரண்டும் அதற்குரிய பற்றுக்களோடும் அழியும்படிச் செய்து;

உலகுடைய ஒருமுதலைச் செறிபொழில்சூழ் தில்லைநகர்த்: எல்லா உலகங்களையும் தனக்கு உடைமையாகக் கொண்ட ஒப்பற்ற முதற்பொருளாகிய சிவபெருமானை, அடர்ந்த சோலைகள் சூழ்ந்த தில்லை நகரில்;

திருச்சிற்றம்பலம் மன்னி மறையவரும் வானவரும் வணங்கிட நான் கண்டேனே: திருச்சிற்றம்பலத்தே நிலைபெற்று எழுந்தருளியிருந்து, தில்லை வாழ அந்தணர்களும் தேவர்களும் போற்றி வணங்கும் காட்சிக்கு இடையே அடியேன் அக்கூத்தப்பெருமானைக் கண்டுகொண்டேனே!

பத்திமையும் பரிசும்இலாப் பசுபாசம் அறுத்தருளிப்
பித்தன்இவன் எனஎன்னை ஆக்குவித்துப் பேராமே
சித்தம்எனும் திண்கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த
வித்தகனார் விளையாடல் விளங்குதில்லை கண்டேனே. (28)

பத்திமையும் பரிசும்இலாப் பசுபாசம் அறுத்தருளிப்: இறைவனிடம் செலுத்தும் பக்தி உணர்வும், அதற்குரிய நற்பண்புகளும் சிறிதும் இல்லாத எளியேனுடைய ஆன்மக் கட்டுகளாகிய 'பசு'த் தன்மையையும் 'பாச' மலங்களையும் அடியோடு அறுத்தருளி;

பித்தன்இவன் எனஎன்னை ஆக்குவித்துப் பேராமே: உலகத்தவர் அனைவரும் 'இவன் சிவப் பைத்தியம்' என்று சொல்லும்படி என்னை மாற்றி, அச்சிவ அன்பிலிருந்து சற்றும் விலகாதபடி;

சித்தம்எனும் திண்கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த: என் மனம் என்னும் உறுதியான கயிற்றினால் அவனுடைய திருவடிகளைச் பிணித்துக் கட்டுமாறு செய்தருளிய;

வித்தகனார் விளையாடல் விளங்குதில்லை கண்டேனே: அனைத்து வல்லமைகளும் உடைய சதுரனான இறைவனின் பேரருள் திருவிளையாடலை, ஒளிவிளங்கும் தில்லை மாநகரின் கனகசபையிலே அடியேன் கண்டுகொண்டேனே!

அளவுஇலாப் பாவகத்தால் அமுக்குண்டுஇங்கு அறிவுஇன்றி
விளைவுஒன்றும் அறியாதே வெறுவியனாய்க் கிடப்பேனுக்கு
அளவுஇலா ஆனந்தம் அளித்துஎன்னை ஆண்டானைக்
களவுஇலா வானவரும் தொழும்தில்லை கண்டேனே. (32)

அளவுஇலாப்பாவகத்தால் அமுக்குண்டுஇங்கு அறிவுஇன்றி: எல்லையற்ற உலகியல் விகாரங்களாலும் பாசக் கற்பனைகளாலும் அமுக்கப்பட்டு, உண்மைப் பொருளை உணரும் மெய்ஞ்ஞான அறிவின்றி;

விளைவுஒன்றும்அறியாதே வெறுவியனாய்க் கிடப்பேனுக்கு: என் வினைகளால் பின்னாளில் வரக்கூடிய பிறவித்துன்பங்களின் விளைவுகளைப் பற்றிச் சிறிதும் சிந்தியாமல், ஆன்மீகப் பேறுகள் எதுவுமில்லாத அற்பனாய் வீணே கிடந்த எளியேனுக்கு;

அளவுஇலா ஆனந்தம் அளித்துஎன்னை ஆண்டானைக்: எல்லையற்ற சிவஞானப் பேரின்பத்தை அடியேனுக்கு அள்ளி வழங்கி, என்னை விரும்பித் தடுத்தாட்கொண்டவனும்;

களவுஇலா வானவரும் தொழும்தில்லை கண்டேனே: கள்ளமில்லாத தூய நெஞ்சம் கொண்ட தேவர்களும் போற்றி வணங்கும் சிதம்பரம் திருத்தலத்தில் அடியேன் அக்கூத்தப்பெருமானைக் கண்டுகொண்டேனே!

பாங்கினொடு பரிசுஒன்றும் அறியாத நாயேனை
ஓங்கிஉளத்து ஒளிவளர உலப்புஇலா அன்புஅருளி
வாங்கிவினை மலம்அறுத்து வான்கருணை தந்தானை
நான்குமறை பயில்தில்லை அம்பலத்தே கண்டேனே. (36)

பாங்கினொடு பரிசுஒன்றும் அறியாத நாயேனை: இறைவனை வழிபடும் நல்வழி முறைகளையும், அதற்குரிய ஆன்மீகப் பக்குவத்தினையும் சிறிதும் அறியாத நாய் போன்ற எளியேனை;

ஓங்கிஉளத்து ஒளிவளர உலப்புஇலா அன்புஅருளி: என் உள்ளத்தினுள்ளே சிவஞான ஒளி உயர்ந்து வளரும்படியாக, என்றுமே குறையாத பெருக்கமுடைய பேரன்பை அருளிச்செய்து;

வாங்கிவினை மலம்அறுத்து வான்கருணை தந்தானை: என்னைப் பிணித்திருந்த வல்வினைகளையும் மும்மலங்களையும் அடியோடு அகற்றிப் போக்கி, மேலான திருவருள் பேற்றினைத் தந்தருளியவனை;

நான்குமறை பயில்தில்லை அம்பலத்தே கண்டேனே: நான்கு வேதங்களும் இடையறாது ஓதப்பெறும் சிதம்பரம் திருஅம்பலத்தே அடியேன் கண்டுகொண்டேனே!

பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப்
பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமில்லாப் பெருமையனைக்
கேதங்கள் கெடுத்துஆண்ட கிளர்ஒளியை மரகதத்தை
வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே. (40)

பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப்: நிலம், நீர், தீ, வளி, வெளி ஆகிய பஞ்சபூதங்களாகவும், அவற்றால் உணரப்படும் ஐம்புலன்களாகவும், உலகப் பொருட்கள் அனைத்துவடிவாகவும் தன்னுள் கலந்து நின்று,

பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமில்லாப் பெருமையனைக்: அனைத்து வேறுபாடுகளாகவும் தாமே விளங்கி, அதேவேளையில் தான் எதனோடும் தோய்வின்றித் தனித்து நிற்கும் அத்துவிதக் கலப்பால் யாதொரு பேதமும் இல்லாத பேரொளிப் பெருமையனை,

கேதங்கள் கெடுத்துஆண்ட கிளர்ஒளியை மரகதத்தை: என் பிறவித்துன்பங்களை அடியோடு போக்கி ஆட்கொண்டருளிய கிளர்ந்தெழும் சுடரொளியானவனை, மரகதக் குன்றினைப் போன்ற அருளுருவினனை,

வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே: ஆதி வேதங்கள் அனைத்தும் சிரமேற்கொண்டு போற்றித் துதிக்கும், பேரொளி விளங்கும் சிதம்பரம் திருஅம்பலத்தே அடியேன் கண்டுகொண்டேனே!