OmNamaSivaya

சிவன்மனை செய்திகள்

Written by Sivanmanai | Nov 16, 2026, 4:25:23 AM

திருக்கைலாய வாத்தியம்: சில குறிப்புகள்

1-திருக்கைலாய வாத்தியம் இசைக்கும் அனைவரும் திருக்கைலாய வாத்திய பரம்பரையைச் சார்ந்தவர்கள்.

2-திருக்கைலாய வாத்தியம் இசைக்கும் அனைவரும் திருவேடத்தில் இருக்கவேண்டும் என்பது மரபு.
திருநீறு உருத்திராட்சம் வேட்டி-நாபிக்கட்டு இம்மூன்றும்
திருக்கைலாய கணங்களின் திருவேடமாம்

3-திருக்கைலாய வாத்தியம் தொடங்கும்பொழுது மகுட மந்திரத்தை குழுவில் உள்ள அனைவரும் பாடி துவங்கவேண்டும். பிறகு மகுட நடையை முதல் நடையாக இசைப்பது மரபு.

4-வீதி உலா / புறப்பாடு நிகழ்ச்சிகளின் பொழுது முதல்வரிசை-வாசி வாத்தியங்கள்; இரண்டாம் வரிசை-திருஉடல்கள்; மூன்றாம் வரிசை-பிரம்ம தாளங்கள் என்ற அமைப்பில் ஒரேகுழுவாக நடக்கவேண்டும்.

5-திருக்கைலாய வாத்தியம் நிறைவு செய்யும் பொழுது மகுட நடையை இறுதி நடையாக இசைப்பது மரபு.

6-திருக்கைலாய வாத்திய நிகழ்ச்சியின் நிறைவாக வாத்தியங்களை கரங்களில் சுமந்தவாறே கந்த புராணத்தின் வாழ்த்துப்பாடலை பாடி நிறைவு செய்வோம்.

7-சிவனடியார்கள் / கோவில் நிர்வாகம், சிவன்பால் உள்ள அன்பின் மிகுதியால் நமக்கு தம்மால் இயன்ற சன்மானம் வழங்குகிறார்கள். சன்மானத்தை பெரும்பொழுது வணக்கத்துடன் பெற்று திருமதி கலாமணி அம்மாவிடம் ஒப்படைக்கவும்.

8-ஒரு சிலர், நம் குழுவில் இசைப்பவர்களுக்கு இடையூறாக நடந்தால் அதனை முறைப்படி கண்டிக்க அல்லது கோவில் நிர்வாகத்திடம் முறையிட ஒருபொழுதும் தயங்க வேண்டாம். அத்தகைய சூழல் எழுந்தால், திருமதி மஹேஸ்வரி அவர்களிடம் முறையிடவும்.

9-நாம் திருக்கைலாய வாத்தியம் இலவசமாக இசைப்பது சிவனையும், சிவனடியார்களையும் மகிழ்விக்கவே அன்றி வேறு எந்த எதிர்பார்ப்புடனும் அல்ல. சில கோவில்களில் திருக்கைலாய வாத்தியம் இசைத்த பின் சிறந்த மரியாதை செய்திருக்கிறார்கள். சில கோவில்களில் ஒன்றுமே இராது. சமயங்களில் அவமரியாதை கூட ஏற்படலாம். ஈசன்பால் நமக்கிருக்கும் அன்பால் இரண்டையும் ஒன்றாகவே பாவிப்போம். ஆரத்தி காண்பிப்பது, பூ / பழம் கொடுப்பது, மாலை / சால்வை அணிவிப்பது இவையாவும், நமக்கு ஈசன் அளிக்கும் அருளுக்கு முன் நிகராகா. ஈசனை புறத்தே தேடாமல், நம் அகத்தே அறிவோம்.

10-நமது குழுவில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சிவனடியார்களே. ஒவ்வொருவரும் தத்தம் நேரத்தை ஒதுக்கி சிவபக்தியால் உந்தப்பட்டு திருக்கைலாய வாத்தியம் இசைக்கின்றனர். இது ஈசன் உளம் குளிரும் மிகப்பெரிய சேவை. ஒவ்வொருவரும், ஏனைய குழு உறுப்பினர்களிடம் மிகுந்த மரியாதையுடனும், பொறுமையுடனும் நடந்து கொள்ளவேண்டும். குழுவில் உள்ள குழந்தைகளுக்கும் அவர்கள் விளையாட்டாக, தவறாக பேசும்பொழுதும், தவறான செயல்களை செய்யும்போதும் அத்தவறை சுட்டிக்காட்டி அன்புடன் அவர்களை நல்வழிப்படுத்தவேண்டும்.