OmNamaSivaya

சிவபுராணம் விளக்கவுரை

Written by Sivanmanai | Jan 10, 2026 8:30:40 AM

திருவாசகம் இறைவனிடம் முழுமையான சரணாகதியை வலியுறுத்தும் நூல் திருவாசகத்தின் மையக் கருத்து ‘சரணாகதி’—  உடலும்மனமும்ஆன்மாவும் முழுமையாக இறைவனிடம் ஒப்படைக்கப்படுதல்மனித சிந்தனைமுயற்சிஅறிவு அனைத்தும் கட்டுப்பாடுகளுடன் உள்ளது; இறைவன் அருளினாலேயே அவை நிறைவேறுமென்று இதில் விளக்கப்படுகிறது.“என்னை ஆள்வாய் அப்பா” என்ற உணர்வு பல பாடல்களில் எதிரொலிக்கும்சரணாகதியின் மூலம் தான் விடுதலைவும் ஆனந்தமும் கிடைக்கும் என்று திருவாசகம் மிக அழகாக உரைக்கிறது.

திருச்சிற்றம்பலம்

தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி 
அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே – எல்லை  
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன் 
திருவாசகம் என்னும் தேன்…. திருவாசகம் என்னும் தேன்

தொல்லை இரும் பிறவி சூழும் தளை நீக்கி – நம்மைப் பன்னெடுங்காலமாக, தொடர்ந்து வரும் இந்தப் பெரிய பிறவிச் சுழற்சிக்குக் காரணமாக இருக்கிற கட்டுகளை, பந்தங்களை நீக்குவது எது? இந்த உலகியலில் நாம் படும் துன்பங்கள், ஏக்கங்கள், கவலைகள் – இவை அனைத்தையும் நீக்கி, அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியது எது? நம்! துன்பம், துயரம், மனவேதனை, துக்கத்தை நீக்கி, பேரானந்தத்தை நமக்கு அருளியது எது? 

அது வேறு ஏதுமில்லை! "வாதவூர் எங்கோன்" – திருவாதவூரில் பிறந்த நம் மாணிக்கவாசகப் பெருமானின், "திருவாசகம் என்னும் தேன்" தான்! 

திருவாசகம் வெறும் பாடல்களின் தொகுப்பல்ல. அது மனதை உருக்கும், ஆன்மாவை நெகிழச் செய்யும், இறைவனுடன் இரண்டறக் கலக்க வைக்கும் அருள் சுரக்கும் தேனாகும். அது, எல்லை மருவா நெறி அளிக்கும்-மனித அறிவுக்கும், உலகியல் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட, எந்த ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளும் அடங்காத, முடிவில்லாத முக்தி நெறியை, பேரின்பப் பெருவாழ்வை நமக்கு அள்ளித் தருவது இந்தத் திருவாசகத் தேனாகும். 

நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க  
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க  
கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க  
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள்வாழ்க  
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 
Thiruvasagam : Sivapuranam : Lines (1-5) 

'நமச்சிவாய' என்னும் திருவைந்தெழுத்து (பஞ்சாட்சரம்) வாழ்க! இந்த ஐந்தெழுத்து மந்திரமே சிவபெருமானின் திருநாமமாக, அவரின் சக்தியாக உள்ளது. அடுத்து, எல்லாவற்றுக்கும் தலைவனாகிய (நாதன்) சிவபெருமானின் திருவடிகள் வாழ்க!  கண் இமைக்கும் நேரம்கூட என் நெஞ்சைவிட்டு (இதயத்தைவிட்டு) நீங்காமல், எப்போதும் நிறைந்து நிற்கும் அந்தப் பரம்பொருளின் திருவடிகள் வாழ்க! 

திருவாவடுதுறையில் (கோகழிஎழுந்தருளி என்னை ஆண்டருளியகுருவின் தலைவன் (குருமணிஆன சிவபெருமானின் திருவடிகள் வாழ்க
(சிவபெருமான்,குருவின் வடிவத்தில் வந்து மாணிக்கவாசகரை ஆட்கொண்ட நிகழ்வை நினைவுபடுத்துகிறது.)

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள்வாழ்க: வேதங்களுக்கு இணையாக சைவ சமயத்தின் அரிய உண்மைகளைக் கூறும் நூல்களான ஆகமங்களின் வடிவாகவே (ஆகமம் ஆகி) நிலைபெற்று, அதன்மூலம் தன்னைச் சரணடைந்தவர்க்கு அருகில் வந்து இனிப்பவன் (அண்ணிப்பான்) ஆன சிவபெருமானின் திருவடிகள் வாழ்க! 

ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க: சிவபெருமான் ஒரே ஒருவராக (ஏகன்) இருக்கிறார். அதே சமயம், அவர் எண்ணற்ற வடிவங்களில் (பல உயிர்கள், பல தோற்றங்கள்) பலவாகவும் (அநேகன்) இருக்கிறார். அவ்வாறு இருக்கும் இறைவனின் திருவடிகள் வாழ்க! 

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க  
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க  
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க  
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க  
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க 
Thiruvasagam : Sivapuranam : Lines (6-10) 

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க: அடியவர்களின் மனதிலுள்ள அவசரம், சஞ்சலம், உலகப் பற்று (வேகம்) ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி, அவர்களை ஆட்கொண்டு அருள்புரியும் இறைவனின் திருவடிகள் வெற்றி பெறுக!.  

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க: உயிர்களுக்கு மீண்டும் மீண்டும் வரும் பிறவிப் பிணியை அறவே நீக்கும், அடியார்களுக்கு முக்தியளிக்கும், சடைமுடி தரித்த (பிஞ்ஞகன்) சிவபெருமானின் வீரக்கழல்கள் (திருவடிகள்) வெற்றி பெறட்டும். 

புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க: தன்னை நினைக்காதவர்களுக்கும், ஞான மார்க்கத்திற்கு வெளியே உள்ளவர்களுக்கும் (புறத்தார்க்கு) எட்டாத தூரத்தில் (சேயோன்) இருப்பவராகிய சிவபெருமானின் அழகிய திருவடிகள் வெற்றி பெறட்டும். 

கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க:  சிவனை கண்டதும் தன்னுடைய இரு கைகளையும் குவித்து (கரம் குவிவார்) வணங்குபவர்களின் உள்ளத்திற்குள் மகிழ்ச்சி பொங்கச் செய்யும் தலைவனாகிய சிவபெருமானின் திருவடிகள் வெற்றி பெறுக! 

சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க: தன்னுடைய சிரங்களைத் தாழ்த்தி (சிரங்குவிவார் - தலையால் வணங்குபவர்) தலையை வணங்கி வழிபடும் பக்தர்களை, உயர்த்திப் பெருமை அடையச் செய்யும் (ஓங்குவிக்கும்) சிறப்புடைய இறைவனின் திருவடிகள் வெற்றி பெறுக!   

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி 
தேசன் அடிபோற்றி சிவன் சேவடிபோற்றி 
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி 
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி 
சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி 
ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி 
Thiruvasagam : Sivapuranam : Lines (11-15) 

ஈசன் அடிபோற்றி, எந்தை அடிபோற்றி: இறைவனாகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றுகிறேன். அவர் என் தந்தை போன்றவர்; எனக்கு எல்லாம் அளிப்பவர். அவருடைய திருவடிகளைப் போற்றுவதே என் கடமை.  

தேசன் அடிபோற்றி, சிவன் சேவடிபோற்றி: ஒளிமயமானவனாகவும், ஞானவடிவானவனாகவும் திகழும் இறைவனின் திருவடிகளை வணங்குகிறேன். சிவனுடைய செம்மையான திருவடிகளை நான் என்றும் போற்றி வணங்குவேன்.   

நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி: அன்பின் வடிவமாக நம் உள்ளத்தில் நிலைபெற்றுள்ள மாசற்ற (தூய்மையான) இறைவனின் திருவடிகளைப் போற்றுகிறேன். தூய்மையான அன்பு ஒன்றுதான் இறைவனை அடைய வழி. 

மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி: நிலையில்லாத இந்த உலக வாழ்க்கையாகிய மாயப் பிறவிக் கட்டுகளை அறுத்தெறியும் ஆற்றல் கொண்ட மன்னனாகிய சிவபெருமானின் திருவடிகளை நான் வணங்குகிறேன். மீண்டும் பிறவாமல் இருக்க அவர் ஒருவரே துணை. 

சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி: சிறப்பு மிக்க திருப்பெருந்துறை எனும் தலத்தில் கோவில் கொண்டிருக்கும், நம்முடைய தெய்வமாகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றுகிறேன்.  

ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி: எப்போதும் குறையாத (தீராத), பேரின்பத்தை (நித்திய ஆனந்தத்தை) நமக்கு வாரி வழங்கும் மலை போன்றவர் சிவபெருமான். அந்தப் பேரின்பத்தைத் தரும் அவருடைய திருவடிகளைப் போற்றி வணங்குவதே நம் நோக்கம்.

சிவன்அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான்.
Thiruvasagam : Sivapuranam : Lines (16-20) 

சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்: நாம் இறைவனைத் தேடிப் போவதற்கு முன்பே, அவன் நம் எண்ணத்தில் வந்து அமர்கிறான். அவன் நம்முள் புகுந்து நம்மை ஆட்கொண்டதாலேயே, அவனைப் பற்றிய எண்ணம் நமக்குத் தோன்றுகிறது. 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி: இது மிக ஆழமான வரி. ஒருவன் இறைவனை வணங்குகிறான் என்றால், அது அவனுடைய முடிவு அல்ல. "சிவன் கொடுத்த அருளைக் கொண்டே, சிவனின் திருவடிகளை வணங்கும் பாக்கியத்தைப் பெறுகிறேன்" என்கிறார் மணிவாசகர். 

சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை: உள்ளம் குளிர்ந்து, மகிழ்ச்சியில் திளைக்கும்படி, இந்த சிவபுராணத்தைப் பாடும்போது, 

முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான்: ஒருவரது பழவினைகள் (சஞ்சித கர்மம்) அனைத்தும் முற்றிலும் நீங்கிவிடும் என்கிறார் மணிவாசகர். 'ஓய' என்ற சொல் வினைகள் மெல்ல மெல்லத் தேய்ந்து அழிவதைக் குறிக்கிறது.

கண்நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல்இறைஞ்சி
விண்நிறைந்து மண்நிறைந்து மிக்காய் விளங்குஒளியாய்
எண்ணிறந்து எல்லை இலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
Thiruvasagam : Sivapuranam : Lines (21-25) 

கண்நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி: நெற்றிக்கண்ணை உடைய சிவபெருமான், தன் கருணைக்கண்ணால் அடியேனைப் பார்த்தான். அதுமட்டுமல்ல, எட்டாத உயரத்தில் இருக்கும் அவன், என்னைத் தேடி மண்ணிற்கு "வந்தெய்தி" - அதாவது ஒரு குருவாக உருவெடுத்து வந்தான். அவன் காட்டிய அந்த ஞானப் பார்வையால், நான் அவனைச் சென்றடைந்தேன். 

எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல்இறைஞ்சி: மனிதப் பேரறிவால் அல்லது சிந்தனையால் ஒருபோதும் எட்ட முடியாத, அளவிட முடியாத பேரழகு கொண்ட அவனுடைய திருவடிகளை (கழல்களை) நான் பணிந்து வணங்குகிறேன். நம்முடைய தர்க்க ரீதியான அறிவுக்கு இறைவன் பிடிபடமாட்டான்; அவன் அன்பிற்கு மட்டுமே கட்டுப்படுவான். 

விண்நிறைந்து மண்நிறைந்து மிக்காய், விளங்குஒளியாய்: இறைவன் எங்கே இருக்கிறான்? அவன் வானமாக விரிந்து கிடக்கிறான், மண்ணாகச் செறிந்து இருக்கிறான். இந்த அண்ட சராசரங்கள் அனைத்திலும் அவன் நிறைந்திருக்கிறான் ("மிக்காய்"). எல்லாவற்றையும் தாண்டி, ஒரு பெரும் ஒளிப்பிழம்பாக, பிரகாசமான அறிவாக அவன் விளங்குகிறான். 

எண்ணிறந்து எல்லை இலாதானே: உனக்கு இத்தனை வயது என்று சொல்ல முடியாது, உனக்கு இவ்வளவுதான் சக்தி என்று எல்லை வகுக்க முடியாது. நீ எண்ணற்றவன், எல்லையற்றவன். காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டவன் நீ. 

நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்: இவ்வளவு பெருமைகளைக் கொண்ட உன்னுடைய சிறப்புகளை, தீவினைகள் நிறைந்த இந்தச் சாதாரண மனிதனாகிய நான் எப்படிப் புகழ்வேன்? உன்னைப் புகழ எனக்கு வார்த்தைகளே தெரியவில்லை. "நான்" என்ற அகந்தை இருக்கும் வரை உன்னைப் பாட முடியாது, அந்த அகந்தை ஒழிந்த நிலையில் உன்னைப் புகழத் தெரியாமல் திகைத்து நிற்கிறேன்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக் 
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் 
வல்அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் 
செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்
Thiruvasagam : Sivapuranam : Lines (26-30) 

ஆன்மா தனது வினைப்பயனுக்கு ஏற்ப முதலில் ஓரறிவு கொண்ட புல்லாகவும், அதன்பின் சிறு செடிகளாகவும் (பூடு) பிறக்கிறது. பின்னர் நகரும் தன்மை கொண்ட புழுக்களாகவும், பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும் மரங்களாகவும் மாறுகிறது. தொடர்ந்து ஐந்தறிவு கொண்ட விலங்குகள் (விருகம்), வானில் பறக்கும் பறவைகள், தரையில் ஊரும் பாம்புகள் எனப் பல பிறவிகளை எடுக்கிறது. 

விலங்கு நிலைக்குப் பிறகு, ஆன்மா ஜடப்பொருளான கல்லாகவும், ஆறறிவு கொண்ட மனிதனாகவும் பிறக்கிறது. மனித நிலைக்கு அப்பால், சூட்சும உடலமைப்புக் கொண்ட பேய்களாகவும், சிவபெருமானின் தொண்டர்களான கணங்களாகவும், தீய குணங்கள் உடைய அசுரர்களாகவும் பிறக்கிறது. இறுதியாக, தவத்தில் சிறந்த முனிவர்களாகவும், வானுலகில் வாழும் தேவர்களாகவும் உயர்கிறது. 

தாவரம் (நிலையானவை) மற்றும் சங்கமம் (நகரக் கூடியவை) என இந்த உலகில் உள்ள அனைத்துப் பிரிவுகளிலும் ஆன்மா பிறந்து உழல்கிறது. இத்தனை பிறவிகளை எடுத்து, அந்த அனுபவங்களின் வாயிலாகப் பக்குவம் அடைந்த பின்னரே இறைவனை அடையும் வேட்கை பிறக்கிறது. "எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்" என்று மாணிக்கவாசகர் கூறுவதன் மூலம், இந்தப் பிறவிச் சுழற்சி மிகவும் துயரம் நிறைந்தது என்பதும், இறைவனின் திருவடியே இந்தப் பயணத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதும் புலனாகிறது.

எல்லாப் பிறப்பும் பிறந்துஇளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்அடிகள் கண்டுஇன்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி ஆழ்ந்துஅகன்ற நுண்ணியனே
Thiruvasagam : Sivapuranam : Lines (31-35) 

“எல்லாப்பிறப்பும் பிறந்துஇளைத்தேன்" என்று அவர் தொடங்கும்போது, புல், பூடு, புழு எனப் பல கோடிப் பிறவிகளை எடுத்து, அந்தச் சுழற்சியில் சிக்கி ஆன்மா அடைந்த சோர்வை வெளிப்படுத்துகிறார். "இளைத்தேன்" என்ற சொல், உலகியல் ஆசைகளில் உழன்று நாம் அடைந்த மனச்சோர்வைக் குறிக்கிறது. அந்தச் சோர்வு நீங்கும் ஒரே இடம் இறைவனின் பொன்னான திருவடிகளே. அந்தத் திருவடிகளைக் கண்ட கணமே, பிறவித் தளையிலிருந்து ஆன்மா விடுதலையை (வீடுபேறு) அடைகிறது. 

இறைவன் எங்கோ தூரத்தில் இருப்பவன் அல்ல; அவன் நம் உள்ளத்தின் உள்ளே 'ஓங்கார' (பிரணவ) நாதமாக ஒலித்துக் கொண்டிருப்பவன். அவனை "மெய்யா, விமலா, விடைப்பாகா" என்று அழைக்கிறார். அதாவது, என்றும் அழியாத மெய்ப் பொருளாகவும், மாசற்ற தூய்மையானவனாகவும், தர்மத்தின் அடையாளமான காளையை வாகனமாகக் கொண்டவனாகவும் இறைவன் விளங்குகிறான். 

வேதங்கள் யாவும் இறைவனை நோக்கி "ஐயா!" என்று வியந்து போற்றுகின்றன. அவன் மிக உயர்ந்து ஓங்கியவனாகவும், கடலை விட ஆழமானவனாகவும், அகண்டப் பிரபஞ்சத்தை விட விரிந்தவனாகவும் இருக்கிறான். அதே சமயம், மிக மிக நுண்ணிய துகளாகவும் அவன் இருக்கிறான். அதாவது, நமது சிற்றறிவுக்கு எட்டாத பிரம்மாண்டமான பரம்பொருள் அவன்.

வெய்யாய் தணியாய் இயமானனாம் விமலா
பொய்ஆயின எல்லாம் போய்அகல வந்தருளி
மெய்ஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்அறிவே
Thiruvasagam : Sivapuranam : Lines (36-40) 

மாணிக்கவாசகர் இறைவனை "வெய்யாய் தணியாய்" என்று அழைக்கிறார். அதாவது, தீயவர்களுக்குக் கதிரவன் போன்ற வெப்பமாகவும், அடியார்களுக்குத் தண்மையான குளிர்ச்சியாகவும் இருப்பவன் அவன். உலகைப் படைத்துக் காக்கும் "இயமானனாம்" தலைவனாகவும், எவ்வித அழுக்கும் இல்லாத "விமலா" தூயவனாகவும் அவன் திகழ்கிறான். 

நம் வாழ்வில் நாம் மெய் என்று நம்பிக் கொண்டிருக்கும் உலகியல் இன்பங்கள் அனைத்தும் நிலையற்றவை (பொய்). இந்தப் "பொய் ஆயின எல்லாம்" நம்மை விட்டு விலகும்படி, இறைவன் நம் உள்ளத்தில் எழுந்தருளுகிறான். அவ்வாறு வரும்போது, அவன் வெறும் உருவமாக வராமல், "மெய்ஞ்ஞானம்" எனும் உண்மையான அறிவாகவும், அந்த அறிவிலிருந்து வெளிப்படும் பிரகாசமான "மெய்ச்சுடராகவும்" விளங்குகிறான். 

"யாதொன்றும் அறியாதவன் நான்" (எஞ்ஞானம் இல்லாதேன்) என்று தம்மை எளிமைப்படுத்திக் கொள்ளும் மாணிக்கவாசகர், அத்தகைய தமக்கும் இன்பம் அளிக்கும் "இன்பப் பெருமானே" என்று உருகுகிறார். இறுதியாக, நம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் "அஞ்ஞானம்" எனும் அறியாமை இருளைப் போக்கி, உண்மையான அறிவை (நல் அறிவு) நமக்கு அருளுபவன் இறைவனே என்பதை இப்பாடல் உறுதிப்படுத்துகிறது.

ஆக்கம் அளவுஇறுதி இல்லாய் அனைத்துஉலகும் 
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் 
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின் 
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியான 
மாற்றம் மனம்கழிய நின்ற மறையோனே 
Thiruvasagam : Sivapuranam : Lines (41-45) 

இறைவன் பிறப்பு, வளர்ச்சி, இறப்பு ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவன். அதையே மாணிக்கவாசகர் "ஆக்கம் அளவு இறுதி இல்லாய்" என்கிறார். தோற்றம் (ஆக்கம்), நிலைபெறுதல் (அளவு), முடிவு (இறுதி) என எதுவும் இல்லாதவன் அவன். அவனே இவ்வுலகைப் படைக்கிறான் (ஆக்குவாய்) , காக்கிறான் (காப்பாய்) , சங்கார காலத்தில் அழிக்கிறான் (அழிப்பாய்). இவை தவிர, வினைகளை நீக்கி மறைக்கும் திரோதானமும், இறுதியில் வீடுபேறு அளிக்கும் "அருள் தருவாய்" எனும் அருளலையும் அவனே செய்கிறான். 

இறைவனிடம் அடிகள் வைக்கும் விண்ணப்பம் உருக்கமானது. "என் அறியாமையைப் போக்குவாய்; உன்னுடைய அடிமைத் தொண்டில் (நின் தொழும்பின்) என்னை ஈடுபடுத்தி உன்னுள் புகுவிப்பாய்" என்று வேண்டுகிறார். இது ஒரு ஆன்மா உலகப் பற்றிலிருந்து விடுபட்டு, இறைப் பணியில் இணைவதைக் குறிக்கிறது. 

இறைவன் மலரின் வாசனை போல நுட்பமானவன் (நாற்றத்தின் நேரியாய்) . அவன் பக்குவம் இல்லாதவர்களுக்கு வெகு தொலைவில் இருப்பவன் (சேயாய்) , ஆனால் அன்பு கொண்ட அடியார்களுக்கு மிக அருகில் இருப்பவன் (நணியானே) . சொல்லாலும் (மாற்றம்), சிந்தனையாலும் (மனம்) அளவிட முடியாதபடி கடந்து நிற்பவன் அவன். இதையே "மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே" என்று குறிப்பிடுகிறார். அதாவது, வேதங்களால் புகழப்படுபவனும், மனிதனின் வாக்குக்கும் மனதிற்கும் எட்டாத பேராற்றலாகவும் அவன் விளங்குகிறான்.

கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் 
சிறந்தஅடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று 
பிறந்த பிறப்புஅறுக்கும் எங்கள் பெருமான் 
நிறங்கள்ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த 
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
Thiruvasagam : Sivapuranam : Lines (46-50) 

"கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற்போல": பசுவிடம் இருந்து கறந்த தூய்மையான பால், அதனுடன் கலந்த கற்கண்டு (கன்னல்), மற்றும் நறுமணமிக்க நெய் ஆகிய மூன்றும் கலந்தால் எப்படிப்பட்ட ஒரு திவ்யமான சுவை கிடைக்குமோ, அந்தச் சுவையாக இறைவன் இருக்கிறான். ஆனால், இந்தச் சுவை அனைவருக்கும் கிடைப்பதில்லை. 

யார் ஒருவன் உலக விஷயங்களில் இருந்து விலகி, இறைவனிடம் சரணடைகிறானோ, அந்தச் "சிறந்த அடியார் சிந்தனையுள்" இறைவன் தேனாக ஊறுகிறான். தேன் எப்படி நாவிற்கு இனிமை தருகிறதோ, அதுபோல இறைவன் அடியார்களின் மனதிற்குள் பேரானந்தத்தை வழங்குகிறான். இந்த ஆனந்தம் வெறும் தற்காலிக மகிழ்ச்சி அல்ல; இது "பிறந்த பிறப்பு அறுக்கும்" வல்லமை கொண்டது. அதாவது, மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் இந்த வாழ்க்கைச் சக்கரத்திலிருந்து நம்மை விடுவிக்கும் மருந்தாக அவன் இருக்கிறான். 

இறைவனை "நிறங்கள் ஓர் ஐந்துடையாய்" என்று மணிவாசகர் அழைக்கிறார். இது பஞ்சபூதங்களையோ அல்லது சிவனின் ஐந்து முகங்களையோ (ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம்) குறிப்பதாகக் கொள்ளலாம். வானுலகத் தேவர்கள் எல்லாம் போற்றிப் புகழ்ந்தாலும், அவர்களுக்கு எட்டாத உயரத்தில் அவன் "மறைந்திருந்தாய்" என்று பாடப்படுகிறது. 

இவ்வளவு பெருமை வாய்ந்த பெருமான், என் போன்ற "வல்வினையேன்" (கொடிய வினைகளை உடையவன்) அறியாத வண்ணம் மறைந்திருக்கிறான். "நீ தேவர்களுக்குத் தெரிந்தவனாகவும் இருக்கலாம், ஆனால் என் போன்ற எளியவனுக்கும் உன் கருணையைச் சற்றே காட்டி, என் பிறவித் துயரை நீக்க வேண்டும்" என்பதே இப்பாடலின் சாரமான வேண்டுதல்.

மறைந்திட மூடிய மாய இருளை 
அறம்பாவம் என்னும் அரும்கயிற்றால் கட்டிப் 
புறம்தோல் போர்த்துஎங்கும் புழுஅழுக்கு மூடி,
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை 
மலங்கப் புலன்ஐந்தும் வஞ்சனையைச் செய்ய 
Thiruvasagam : Sivapuranam : Lines (51-55) 

மனித உடலின் நிலையாமையையும், அதன் அசுத்தத் தன்மையையும், நம்மைச் சூழ்ந்துள்ள மாயையையும் மிகத் தத்ரூபமாக இந்தப் பாடல் விளக்குகிறது. 

மாய இருள் - இறைவன் நம்மைப் படைக்கும்போது, ஆன்மாவைச் சுற்றியுள்ள அறியாமை என்னும் இருளை (ஆணவம்) மறைப்பதற்காகவே இந்த உடலைத் தந்துள்ளார். ஆனால், நாம் இந்த உடலையே மெய் என்று நம்பி மாயையில் மூழ்கிக் கிடக்கிறோம். 

அறம்-பாவம் எனும் கயிறு - இந்தக் குடில் (சிற்றுறைவிடம்) எதனால் பிணைக்கப்பட்டுள்ளது? நாம் செய்யும் நல்வினை (அறம்) மற்றும் தீவினை (பாவம்) ஆகிய இரு கயிறுகளால் இந்த உடல் ஆத்மாவோடு பிணைக்கப்பட்டுள்ளது. இந்த வினைகள் இருக்கும் வரை பிறவிச் சுழற்சி அறுபடாது. 

புறந்தோல் போர்த்திய அழுக்கு - மேலோட்டமாகப் பார்த்தால் உடல் அழகாகத் தெரியலாம். ஆனால், மாணிக்கவாசகர் அதன் உள்நிலையைத் தோலுரித்துக் காட்டுகிறார். புழுக்களும், அசுத்தங்களும் நிறைந்த ஒரு பொருளை, வெளியே தெரியாதபடி "புறம்தோல்" போர்த்தி மறைத்து வைத்திருக்கிறான் இறைவன். 

ஒன்பது வாயில்கள் - இந்த உடல் ஒன்பது துவாரங்களைக் கொண்டது. இந்த ஒன்பது வழிகளிலும் மலங்களும், கழிவுகளும் இடைவிடாது வெளியேறிக் கொண்டிருக்கின்றன. இவ்வளவு அசுத்தமான ஒரு கருவியைக் கொண்டுதான் நாம் பெருமை பேசிக் கொள்கிறோம். 

ஐம்புலன்களின் வஞ்சனை - இவை அனைத்திற்கும் மேலாக, கண், காது, மூக்கு, நாக்கு, மெய் ஆகிய ஐந்து புலன்களும் நம்மை நல்வழியில் செல்ல விடாமல் தடுத்து, உலக விஷயங்களில் ஆசை காட்டி வஞ்சனை செய்கின்றன. நம்மைத் திசைதிருப்பும் இந்த ஐந்து திருடர்களே நம் ஞானத்திற்குப் பெரிய தடையாக இருக்கிறார்கள். 

இந்த உடல் நிலையற்றது, அசுத்தமானது. வினைப்பயனால் கிடைத்த இந்த உடலை வெறும் போகப் பொருளாகக் கருதாமல், இதனுள் இருக்கும் இறைவனைக் காணப் பழக வேண்டும் என்பதே இப்பாடலின் சாராம்சம்.

விலங்கு மனத்தால் விமலா உனக்கு 
கலந்த அன்பாகிக் கசிந்து உள்உருகும் 
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி 
நிலந்தன்மேல் வந்தஅருளி நீள்கழல்கள் காட்டி, 
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
Thiruvasagam : Sivapuranam : Lines (56-60) 

திருவாசகத்தின் 'சிவபுராணம்' பதிகத்தில் இடம்பெற்றுள்ள இந்த மாணிக்கவாசகரின் வரிகள், இறைவனின் எல்லையற்ற கருணையையும், ஒரு பக்தனின் தன்னடக்கத்தையும் மிக உருக்கமாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.  இந்தத் திருப்பாடல், "நான் தகுதியற்றவன், ஆனால் நீயோ கருணைக்கடல்" என்ற மையக்கருத்தை உணர்த்துகிறது. 

மாணிக்கவாசகர் தன்னை நோக்கிப் பேசும்போது, "விலங்குமனத்தால்" என்று தொடங்குகிறார். விலங்குகளுக்கு அடுத்த வேளை உணவு, உறக்கம் போன்ற உடல் சார்ந்த தேவைகளைத் தவிர வேறொன்றும் தெரியாது. அதுபோல, உயர்ந்த ஆன்மீகச் சிந்தனைகள் இன்றி, ஐம்புலன்களின் பின்னே ஓடும் என் மனம் ஒரு விலங்கின் மனத்தைப் போன்றது என்று அடக்கத்துடன் கூறுகிறார். 

பொதுவாக இறைவனை அடைய "அன்பே சிவம்" என்பார்கள். ஆனால் மாணிக்கவாசகர், "விமலா! உன்னிடம் கலந்த அன்போ, உள்ளம் கசிந்து உருகும் தன்மையோ, எந்த ஒரு நற்பண்போ (நலந்தான் இலாத) இல்லாத சிறியவன் நான்" என்கிறார். உண்மையான பக்தி இல்லாத என்னிடமும் நீ அன்பு காட்டினாயே என்பதுதான் அவரது வியப்பு. 

இறைவனைத் தேடி மனிதன் ஓட வேண்டும். ஆனால் இங்கே, "நிலந்தன்மேல் வந்தருளி" - அதாவது, வானுலகில் எட்டாத உயரத்தில் இருக்கும் பரம்பொருள், தரை இறங்கி பூமிக்கு வந்து எனக்குக் காட்சி தந்தது என்கிறார். தன் "நீள்கழல்கள்" எனப்படும் நீண்ட திருவடிகளைத் தந்து, என்னை ஆட்கொண்டது இறைவனின் தனிப்பெரும் கருணை. 

தன்னை மிகத் தாழ்த்தி, "நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்கு" என்கிறார். ஒரு நன்றியுள்ள நாயை விடவும் கீழான நிலையில் இருந்த எனக்கு, ஒரு தகுதியும் இல்லாத நிலையில், நீயாக வந்து உன் பேரருளை வழங்கினாய் என்று இறைவனின் எளிமையைப் போற்றுகிறார்.

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே  
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே  
தேசனே தேனார் அமுதே சிவபுரனே  
பாசமாம் பற்றுஅறுத்துப் பாரிக்கும் ஆரியனே  
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம்கெடப்
 
Thiruvasagam : Sivapuranam : Lines (61-65) 

மாணிக்கவாசகர் இறைவனை "தாயிற்சிறந்த தயாவான தத்துவனே" என்று அழைக்கிறார். உலகில் ஈடு இணையற்ற அன்பைச் சொரிவது தாய்மை. ஆனால், ஒரு தாய் தன் குழந்தையை இந்த பிறவியில் மட்டுமே கவனிப்பாள்; இறைவன் ஒரு தாயை விடவும் மேலாக, ஆன்மாவின் வினையறுத்து முக்தியை அளிப்பதால் அவன் 'தாயிற் சிறந்தவன்' ஆகிறான். அவன் வெறும் உணர்வல்ல, உண்மையான 'தத்துவம்' (உண்மைப் பொருள்) ஆவான். 

இறைவன் "மாசற்ற சோதி" . அவனிடம் இருளோ, மலினமோ இல்லை. அவன் மலர்ந்து மணம் வீசும் சுடரைப் போன்றவன். எங்கும் பிரகாசிக்கும் அந்தத் தேஜஸ் (தேசனே), சுவைமிக்க தேன் கலந்த அமுது போன்றவன். அமுதம் எப்படி மரணமில்லா வாழ்வைத் தருமோ, அப்படியே சிவபெருமான் ஆன்மாவிற்கு அழியாத பேரின்பத்தைத் தருகிறான். 

நமது பிறவித் துன்பத்திற்கு முக்கியக் காரணம் 'பாசம்' எனப்படும் உலகப் பற்றுக்கள். "பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே" என்ற வரிகள், நம்மைப் பிணைத்துள்ள மும்மலங்களையும் (ஆணவம், கன்மம், மாயை) அறுத்து எறிந்து, நம்மைப் பாதுகாக்கும் மேலான ஆசிரியனாக (ஆரியன்) இறைவன் திகழ்வதைக் குறிக்கிறது. 

இறுதியாக, இறைவன் தன் "நேச அருளை" வழங்கி, நம் நெஞ்சில் குடி கொண்டுள்ள வஞ்சகம், பொய்மை மற்றும் தீய எண்ணங்களை வேரோடு அழிக்கிறான். மனம் தூய்மையடையும் போது அங்கே ஈசன் நிலைபெறுகிறான். 

சுருக்கமாகச் சொன்னால், இந்தப் பாடல் இறைவனின் கருணை, ஒளி வடிவம், மற்றும் அவன் நம் அறியாமையை நீக்கி ஆட்கொள்ளும் விதத்தைப் போற்றும் உன்னதமான ஒரு துதியாகும்.

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே  
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே  
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே  
நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்றானே  
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 
Thiruvasagam : Sivapuranam : Lines (66-70) 

பேராது நின்ற பெருங்கருணை: இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன். அவன் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு நகருபவன் அல்ல; மாறாக, எங்கும் "பேராது" (அசையாது) நிலைத்து நிற்பவன். அவனை ஒரு "பெருங்கருணைப் பேராறு" என்கிறார் மாணிக்கவாசகர். வற்றாத நதி எப்படித் தாகம் தீர்க்கிறதோ, அப்படி இறைவனின் கருணை நம் பாவங்களைக்கழுவி, ஆன்மாவைத் தூய்மைப்படுத்துகிறது.

ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே: தெவிட்டாத அமுதம் அவன். உலகியல் இன்பங்கள் ஒரு கட்டத்தில் சலிப்பைத் தரும், ஆனால் இறைவனின் பேரின்பம் எப்போதும் திகட்டாதது (ஆரா அமுது). அவன் எல்லையற்றவன்; அளக்க முடியாத பெருமையுடையவன். 

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே: இது இப்பாடலின் மிக முக்கியமான பகுதி. 'ஓராதார்' என்பது இறைவனைத் தேடாதவர்களைக் குறிக்கும். தன்னைத் தேடாதவர்களின் உள்ளத்தில் அவன் ஒரு ரகசிய ஒளியாக மறைந்திருக்கிறான். அதாவது, அவன் அங்கும் இருக்கிறான், ஆனால் அவர்கள் அறியும் வண்ணம் வெளிப்படுவதில்லை. தேடுபவனுக்கு மட்டுமே அவன் வெளிச்சமாகிறான். 

நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே: கல்லாய் இருந்த மனதை அன்பினால் நீராய் உருகச் செய்பவன் இறைவன். உடல் வேறு, உயிர் வேறு என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும்போது, "உயிர்க்கும் உயிராய்" அவன் கலந்து நிற்பதை மாணிக்கவாசகர் உணர்த்துகிறார். 

இன்ப துன்பம் கடந்தவன்: இறுதியாக, இறைவன் இன்பமும் துன்பமும் இல்லாதவன், அதேசமயம் அவற்றுள் உறைபவன். அவன் மாயைகளுக்கு அப்பாற்பட்டவன், ஆனால் எல்லாப் பொருட்களிலும் இருப்பவன்.  

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்  
சோதியனே துன்இருளே தோன்றாப் பெருமையனே  
ஆதியனே அந்தம் நடுஆகி அல்லானே  
ஈர்த்துஎன்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே  
கூர்த்தமெய்ஞ் ஞானத்தால் கொண்டு உணர்வார் தங்கருத்தில் 
Thiruvasagam : Sivapuranam : Lines (71-75) 

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்: இறைவன் தன்னை நேசிக்கும் பக்தர்களுக்கு மிக எளியவனாக, அன்பே உருவானவனாக இருக்கிறான். அவன் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களுமாக (யாவையுமாய்) இருக்கிறான். அதே சமயம், அந்தப் பொருட்கள் எதிலும் சிக்காமல், அவற்றுக்கு அப்பாற்பட்டவனாகவும் (அல்லையுமாய்) இருக்கிறான். 

சோதியனே துன்இருளே தோன்றாப் பெருமையனே: அவன் பேரொளியாகத் திகழ்கிறான்; அதே சமயம் மனித அறிவுக்கு எட்டாத அடர்ந்த இருளாகவும் (மறைபொருளாகவும்) இருக்கிறான். அவன் கண்களுக்குப் புலப்படாத, அளவிட முடியாத பெருமைகளை உடையவன். 

ஆதியனே அந்தம் நடுஆகி அல்லானே: அவனே உலகின் தொடக்கம் (ஆதி), நடு மற்றும் முடிவு (அந்தம்). காலம் மற்றும் இடத்தைக் கடந்தவன் என்பதால், இந்த மூன்று நிலைகளுமாக இருந்தும், உண்மையில் இந்த எல்லைகளுக்குள் கட்டுப்படாதவனாக இருக்கிறான். 

ஈர்த்துஎன்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே: காந்தம் ஊசியை இழுப்பதைப் போல, எளியவனான என்னை அவனது பேரருளால் கவர்ந்து இழுத்து, தனது அடிமையாக ஆட்கொண்டவன் என் தந்தையாகிய இறைவன். 

கூர்த்த மெய்ஞ் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்: இத்தகைய இறைவனை சாதாரண அறிவால் அறிய முடியாது. மிகக் கூர்மையான மெய்யறிவின் மூலமாக மட்டுமே அவனது இருப்பை உணர முடியும். அத்தகைய ஞானம் கொண்டவர்களின் இதயத்தில் (கருத்தில்) அவன் நீங்காமல் வீற்றிருக்கிறான்.

நோக்குஅரிய நோக்கே நுணுக்கரிய நுண்உணர்வே  
போக்கும் வரவும் புணர்வும்இலாப் புண்ணியனே  
காக்கும்எம் காவலனே காண்பரிய பேர்ஒளியே  
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக்காய் நின்ற  
தோற்றச் சுடர்ஒளியாய்ச் சொல்லாத நுண்உணர்வாய் 
_Thiruvasagam : Sivapuranam : Lines (76-80)

நோக்குஅரிய நோக்கே நுணுக்கரிய நுண்உணர்வே: இறைவனை ஊனக்கண்களால் கண்டு தரிசிக்க இயலாது. அவன் அறிவால் மட்டுமே உணரத்தக்க ஒரு பெரும் 'பார்வையாக' இருக்கிறான். சாதாரணச் சிந்தனைக்கு எட்டாத, மிக நுட்பமான ஞானமே (நுண்உணர்வு) அவன் வடிவம். 

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே: மனிதர்களுக்கு பிறப்பு (வருதல்), இறப்பு (போகுதல்) மற்றும் உறவு (புணர்வு) எனும் மாற்றங்கள் உண்டு. ஆனால், இறைவன் இம்மாற்றங்கள் ஏதுமற்றவன். எக்காலத்திலும் அழியாத, தூய புண்ணிய வடிவமானவன் அவன். 

காக்கும்எம் காவலனே காண்பரிய பேர்ஒளியே: உலகத்து உயிர்கள் அனைத்தையும் காக்கும் ஒப்பற்ற தலைவன் அவன். சூரிய ஒளியைக் கண்களால் காண்பது போலன்றி, மனதின் ஆழத்தில் மட்டுமே உணரக்கூடிய எல்லையற்ற 'பேரொளியாக' அவன் திகழ்கிறான். 

ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக்காய் நின்ற: தடையின்றிப் பெருகி வரும் பேரின்பப் பெருக்காக இறைவன் இருக்கிறான். "அத்தா" என அன்போடு அழைக்கப்படும் தந்தையாகவும், எல்லாவற்றிற்கும் மேலான பரம்பொருளாகவும் அவன் விளங்குகிறான். 

தோற்றச் சுடர்ஒளியாய்ச் சொல்லாத நுண்உணர்வாய்: கண்ணுக்குத் தெரியும் உலகப் பொருட்கள் அனைத்திலும் ஒளியாகத் தோன்றுபவன் அவனே. அதே சமயம், வார்த்தைகளால் விவரிக்க முடியாத மௌன நிலையில் உணரப்படும் 'சொல்லாத' நுட்பமான உணர்வாகவும் அவன் இருக்கிறான்.

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்  தேற்றனே தேற்றத் தெளிவே என்சிந்தனையுள் 
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே 
வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப 
ஆற்றேன் எம்ஐயா அரனேஓ என்றுஎன்று

_Thiruvasagam : Sivapuranam : Lines (81-85)

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்: இந்த உலகம் நிலையற்றது; கணந்தோறும் மாற்றமடைந்து கொண்டே இருப்பது. இத்தகைய 'மாற்றமாம் வையகத்தில்', இறைவன் பல வேறுபட்ட உருவங்களாகவும், தன்மைகளாகவும் வந்து நமக்குக் காட்சி தருகிறான். நமது அறிவிற்கு எட்டும் வண்ணம் அவன் பல நிலைகளில் வெளிப்படுகிறான் என்பதை இது குறிக்கிறது. 

தேற்றனே தேற்றத் தெளிவே என்சிந்தனையுள்: குழப்பங்கள் நிறைந்த மனித மனதிற்குத் தெளிவைத் தருபவன் இறைவன். 'தேற்றன்' என்றால் தெளிவுபடுத்துபவன் என்று பொருள். என் சிந்தனையில் உதிக்கும் மாசற்ற தெளிவான அறிவாகவும், அந்த அறிவின் முதிர்ச்சியாகவும் நீயே இருக்கிறாய் என அடிகள் போற்றுகிறார். 

ஊற்றான உண்ணார் அமுதே உடையானே: இறைவன் உள்ளத்தின் ஆழத்தில் சுரக்கும் வற்றாத இன்ப ஊற்று போன்றவன். நாவால் சுவைக்கத் தேவையின்றி, மனதால் நுகரப்படும் 'உண்ணார் அமுதம்' அவன். என்னை ஆட்கொண்ட எஜமானனே (உடையானே) என்று அவனிடம் சரணடைகிறார். 

வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப: 'விடக்குடம்பு' என்பது தசை மற்றும் புலன்களால் ஆன இந்த ஊன் உடலைக் குறிக்கும். இது பல்வேறு விகாரங்களுக்கும் (மாற்றங்களுக்கும்), ஆசைகளுக்கும் உட்பட்டது. இத்தகைய அநித்தியமான உடலுக்குள் சிறைப்பட்டுக் கிடப்பதை எண்ணி வருந்துகிறார். 

ஆற்றேன் எம்ஐயா அரனேஓ என்றுஎன்று: "இறைவா! இந்தப் பிறவித் தளையிலும், உடல் பந்தத்திலும் சிக்கித் தவிப்பதை என்னால் இனியும் பொறுத்துக்கொள்ள இயலாது (ஆற்றேன்)" என்று கதறுகிறார். "அரனே! சிவபெருமானே!" என்று ஓயாமல் அழைத்து, இந்தப் பிறவித் துயரிலிருந்து தமக்கு விடுதலை அளிக்க வேண்டுகிறார். 

மீட்டுஇங்கு வந்து வினைப்பிறவி சாராமே 
கள்ளப் புலக்குரம்பைக் கட்டுஅழிக்க வல்லானே  
நள்இரு ளில் நட்டம் பயின்றுஆடும் நாதனே 
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே  
_Thiruvasagam : Sivapuranam : Lines (86-90)

போற்றிப்புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்: இறைவனின் திருநாமங்களை இடைவிடாது துதித்து, அவனைப் போற்றிப் புகழ்ந்து வணங்குபவர்களின் உள்ளத்தில் ஒரு மாற்றம் நிகழ்கிறது. அவர்கள் அதுவரை 'நான், எனது' என்று கருதிய உலகியல் மாயைகளை (பொய்) விடுத்து, அழியாத பரம்பொருளை மட்டுமே உண்மையானது (மெய்) என்று உணர்கிறார்கள். புற இருள் நீங்கி அக ஒளியைப் பெற்றவர்கள் இவர்கள். 

மீட்டுஇங்கு வந்து வினைப்பிறவி சாராமே: இப்படி மெய்யுணர்வு பெற்ற அடியார்கள், மீண்டும் இந்தப் பூமிக்கு வந்து பிறவிப் பெருங்கடலில் விழுவதில்லை. நல்வினை, தீவினை எனும் இருவினைகளும் அற்றுப்போவதால், அவர்கள் மறுபிறவி எனும் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுகிறார்கள். இறைவனோடு இரண்டறக் கலப்பதே இதன் நோக்கம். 

கள்ளப் புலக்குரம்பைக் கட்டுஅழிக்க வல்லானே: நமது உடல் ஐம்புலன்களால் ஆனது. இந்தப் புலன்கள் நம்மை எப்போதும் உலக ஆசைகளில் திசைதிருப்பி ஏமாற்றுவதால், அவற்றை 'கள்ளப் புலன்கள்' என்கிறார் மாணிக்கவாசகர். இந்த உடலாகிய சிறைக்கூடத்தின் (குரம்பை) கட்டுகளை அவிழ்த்து, ஆன்மாவை விடுவிக்கும் வல்லமை படைத்தவன் அந்த சிவபெருமான் ஒருவனே. 

நள்இருளில் நட்டம் பயின்றுஆடும் நாதனே: நள்ளிருள்' என்பது அறியாமை என்ற இருளையும், ஊழிக்காலத்து இருளையும் குறிக்கும். உலகம் ஒடுங்கிய அந்தப் பேரிருளிலும், உயிருக்கு உயிராக நின்று ஆனந்தத் தாண்டவம் ஆடுபவன் இறைவன். அவன் ஆடும் அந்த நடனம் தான் பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு ஆதாரமாக அமைகிறது. 

தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே: அண்டசராசரங்களையும் இயக்கும் அந்தப் பெருமான், அடியார்களுக்கு அருள் புரியும் பொருட்டு சிதம்பரம் எனும் தில்லையம்பலத்தில் திருநடனம் புரிகிறான். அவன் எங்கும் நிறைந்திருப்பவன் என்றாலும், 'தென்பாண்டி நாட்டானே' என விளிப்பதன் மூலம், மதுரையிலும் பாண்டிய நாட்டிலும் அவன் நிகழ்த்திய திருவிளையாடல்களையும், அடியார்கள் மீது அவன் கொண்ட கருணையையும் மாணிக்கவாசகர் நெகிழ்ச்சியுடன் நினைவுபூர்வமாகக் குறிப்பிடுகிறார். 

அல்லல் பிறவி அறுப்பானே ஓஎன்று  
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்  
சொல்லிய பாட்டின் பொருள்உணர்ந்து சொல்லுவார்  
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன்அடிக்கீழ்ப்  
பல்லோரும் ஏத்தப் பணிந்து  
_Thiruvasagam : Sivapuranam : Lines (91-95) 

அல்லல்பிறவி அறுப்பானே ஓஎன்று: "அல்லல்" என்றால் துன்பம். இப்பூமியில் பிறப்பதே பிறப்பு, இறப்பு, நோய் எனப் பல துன்பங்களுக்குக் காரணியாகிறது. இந்தப் பிறவிச் சுழற்சியை வேரோடு அறுக்க வல்லவன் சிவபெருமான் ஒருவனே. "ஓ" என்பது ஒரு ஆன்மா தன் ஆற்றாமையால், இறைவனை நோக்கி எழுப்பும் உருக்கமான அபயக் குரல். "இறைவா, இந்தத் துன்பப் பிறவியிலிருந்து என்னை விடுவி!" என்று கதறி அழைப்பதைக் குறிக்கிறது. 

சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்: இறைவன் என்பவன் சொல்லால் விவரிக்க முடியாதவன்; நம் அறிவிற்கும் எட்டாதவன். அதனால்தான் "சொல்லற்கு அரியான்" எனப்படுகிறார். இருப்பினும், மாணிக்கவாசகர் அந்தப் பரம்பொருளைத் தன் பாடல்களால் துதித்து, நம்மை அவரது திருவடி நிழலுக்கு அழைத்துச் செல்கிறார். சொல்ல முடியாதவனைச் சொல்லால் போற்றுவது பக்தியின் உச்சம். 

சொல்லிய பாட்டின் பொருள்உணர்ந்து சொல்லுவார்: இது மிக முக்கியமான வரி. இந்தப் பாடல்களை ஏதோ ஒரு இயந்திரம் போலப் பாராயணம் செய்யாமல், அதன் ஒவ்வொரு சொல்லின் ஆழமான பொருளையும், தத்துவத்தையும் உணர்ந்து மனமுருகிச் சொல்ல வேண்டும். உணர்வும், அறிவும் இணையும் போதுதான் பக்தி முழுமையடைகிறது. 

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன்அடிக்கீழ்ப்: இப்படிப் பொருள் உணர்ந்து துதிப்பவர்கள் "செல்வர்" என்று அழைக்கப்படுகிறார்கள். இது அழியும் உலகச் செல்வத்தைக் குறிப்பதல்ல, அழியாத "அருட்செல்வத்தைக்" குறிக்கிறது. அவர்கள் மரணத்திற்குப் பிறகு மீண்டும் பிறவாமல், இறைவனின் இருப்பிடமான சிவபுரத்திலேயே தங்கும் பேறு பெறுவார்கள். 

பல்லோரும் ஏத்தப் பணிந்து: சிவபுரத்தை அடைந்த அந்த அடியார்களை, அங்குள்ள தேவர்களும் ஏனைய முனிவர்களும் போற்றிப் புகழ்வார்கள். அவர்கள் சிவபெருமானின் திருவடிகளிலேயே எப்போதும் பணிந்து கிடக்கும் நித்யமான பேரின்ப நிலையை (முக்தி) அடைவார்கள் என்று இப்பாடல் முற்றுப் பெறுகிறது.