திருச்சிற்றம்பலம்
தரிக்கிலேன் காய வாழ்க்கை
சங்கரா போற்றி வான
விருத்தனே போற்றி எங்கள்
விடலையே போற்றி ஒப்பில்
ஒருத்தனே போற்றி உம்பர்
தம்பிரான் போற்றி தில்லை
நிருத்தனே போற்றி எங்கள்
நின்மலா போற்றி போற்றி. (8)
தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி: அழிந்துபோகும் இப்புலால் உடம்போடு கூடிய உலகியல் வாழ்க்கையை அடியேனால் இனிமேலும் தாங்கிக் கொள்ள முடிவதில்லை! இன்பங்களை அள்ளித் தரும் சங்கரனே, உனக்கு மங்களம்! உன்னைப் போற்றுகின்றேன்!
வான விருத்தனே போற்றி எங்கள் விடலையே போற்றி: தேவர்களுக்கெல்லாம் மேலான தொன்மையான ஆதிப் பரம்பொருளாய் விளங்குபவனே போற்றி! அதேசமயம் எக்காலத்தும் மூப்படையாத என்றும் இளமையான எங்களது காளையே போற்றி!
ஒப்பில் ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான் போற்றி: தனக்கு நிகராகச் சொல்வதற்கு வேறு எந்தவொரு பொருளுமில்லாத ஒப்பற்ற தனிப்பெரும் பொருளே போற்றி! விண்ணுலகில் வாழும் தேவாதி தேவர்களுக்கெல்லாம் இறைவனே போற்றி!
தில்லை நிருத்தனே போற்றி எங்கள் நின்மலா போற்றி போற்றி: தில்லைச் சிற்றம்பலத்திலே ஆனந்தத் தாண்டவமாடும் நடராஜப் பெருமானே போற்றி! எவ்வித குற்றமும் இல்லாத பரிசுத்தமான எங்கள் நின்மலனே, உனக்கு அரஹரா போற்றி! போற்றி!
போற்றிஒ நமச்சி வாய
புயங்கனே மயங்கு கின்றேன்
போற்றிஒ நமச்சி வாய
புகலிடம் பிறிது ஒன்றுஇல்லை
போற்றிஒ நமச்சி வாய
புறம்எனைப் போக்கல் கண்டாய்
போற்றிஒ நமச்சி வாய
சயசய போற்றி போற்றி. (16)
போற்றிஒ நமச்சி வாய புயங்கனே மயங்கு கின்றேன்: "நமச்சிவாய" என்னும் திருவைந்தெழுத்தின் வடிவமாய் விளங்குபவனே போற்றி! தோளில் பாம்பை அணிகலனாக அணிந்த புயங்க மூர்த்தியே போற்றி! இச்சம்சார உலகியல் மாயையில் சிக்கி அடியேன் மிகவும் மயங்குகின்றேன்!
போற்றிஒ நமச்சி வாய புகலிடம் பிறிது ஒன்றுஇல்லை: "நமச்சிவாய" என்னும் மந்திர மூர்த்தியே போற்றி! பிறவித் துயரிலிருந்து தப்பிப் பிழைக்க எனக்கு உன்னுடைய திருவடிகளைத் தவிர வேறு எந்தவொரு புகலிடமும் இல்லை!
போற்றிஒ நமச்சி வாய புறம்எனைப் போக்கல் கண்டாய்: "நமச்சிவாய" பெருமானே போற்றி! உனது திருவருள் வட்டத்திற்கு வெளியே எளியேனைத் தள்ளிவிடாதே! உனது அடைக்கலத்திலிருந்து என்னை விலக்கிவிடாதே!
போற்றிஒ நமச்சி வாய சயசய போற்றி போற்றி: "நமச்சிவாய" இறைவனே போற்றி! வெற்றி வேந்தனே எக்காலத்தும் உன்னுடைய பொன்னார் திருவடிகளுக்கே அரஹரா போற்றி! போற்றி!
போற்றிஎன் போலும் பொய்யர்
தம்மை ஆட்கொள்ளும் வள்ளல்
போற்றிநின் பாதம் போற்றி
நாதனே போற்றி போற்றி
போற்றிநின் கருணை வெள்ளப்
புதுமதுப் புவனம் நீர் தீக்
காற்று இயமானன் வானம்
இருசுடர்க் கடவுளானே. (24)
போற்றிஎன் போலும் பொய்யர் தம்மை ஆட்கொள்ளும் வள்ளல்: மெய் உணர்வும் பக்தியும் இல்லாத, என்னைப்போன்ற பொய்யர்களையும் அருள்கூர்ந்து தடுத்தாட்கொள்ளும் கருணை வள்ளலே, உனக்கு போற்றி!
போற்றிநின் பாதம் போற்றி நாதனே போற்றி போற்றி: அகில உலகங்களுக்கும் நாதனாக விளங்கும் எம்பெருமானே! உன்னுடைய பொன்னார் திருவடிகளுக்கே போற்றி! போற்றி! உனக்கே அரஹரா போற்றி!
போற்றிநின் கருணை வெள்ளப் புதுமதுப்: அடியார்களின் உள்ளத்தில் ஊறுகின்ற, பரவசத்தைத் தருகின்ற கருணை வெள்ளமாகிய புதிய தேனே உன்னுடைய பேரருளுக்கு போற்றி!
புவனம் நீர் தீக் காற்று இயமானன் வானம் இருசுடர்க் கடவுளானே: பிரிதொன்றும் இல்லாதபடி நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களாகவும், யாகம் செய்யும் ஆன்மாவாகவும் சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரு சுடர்களாகவும் திகழும் அட்டமூர்த்தியே! உனக்கு போற்றி!
கடவுளே போற்றி என்னைக்
கண்டுகொண்டு அருளு போற்றி
விடவுளே உருக்கி என்னை
ஆண்டிட வேண்டும் போற்றி
உடல்இது களைந்திட்டு ஒல்லை
உம்பர்தந்து அருளு போற்றி
சடையுளே கங்கை வைத்த
சங்கரா போற்றி போற்றி. (32)
கடவுளே போற்றி என்னைக் கண்டுகொண்டு அருளு போற்றி: எல்லைகளை எல்லாம் கடந்து நிற்கும் பரம்பொருளாகிய கடவுளே போற்றி! எளியேனாகிய என்னை உனது கருணை நிறைந்த அருணோக்கத்தால் பார்த்தருள வேண்டும் போற்றி!
விடவுளே உருக்கி என்னை ஆண்டிட வேண்டும் போற்றி: துன்பங்கள் நிறைந்த பிளவுபட்ட இப் பிறவிப் பெருங்குழியிலே அகப்பட்டுத் தவிக்கும் என் மனதை அன்பினால் உருகப்பண்ணி, என்னை முற்றுமாகத் தடுத்தாட்கொள்ள வேண்டும் போற்றி!
உடல்இது களைந்திட்டு ஒல்லை உம்பர்தந்து அருளு போற்றி: அழிந்துபோகும் இயல்புடைய இப்புலால் உடம்பை விரைவாக நீக்கி விரைவிலேயே மேலான சிவலோகப் பேற்றினைத் தந்தருள வேண்டும் போற்றி!
சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி: தன் அடர்ந்த சடாபாரத்தினுள்ளே வேகமாய் வந்த கங்கா தேவியின் பெருக்கெடுத்த அலைகளை அடக்கி வைத்த சங்கரனே போற்றி! மங்களங்களை அளிக்கும் எம்பெருமானே, உனக்கு அரஹரா போற்றி! போற்றி!
சங்கரா போற்றி மற்றுஓர்
சரண்இலேன் போற்றி கோலப்
பொங்கரா அல்குற் செவ்வாய்
வெண்நகைக் கரிய வாள்கண்
மங்கைஓர் பங்க போற்றி
மால்விடை ஊர்தி போற்றி
இங்கிஇவ்வாழ்வு ஆற்றகில்லேன்
எம்பிரான் இழித்திட்டேனே. (40)
சங்கரா போற்றி மற்றுஓர் சரண்இலேன் போற்றி: இன்பங்களை அள்ளித் தரும் சங்கரனே போற்றி! பிறவித் துயரிலிருந்து தப்பிப் பிழைக்க உன்னைத் தவிர வேறு எந்தவொரு புகலிடமும் இல்லாத எளியேன் நான், உன்னைப் போற்றுகின்றேன்!
கோலப் பொங்கரா அல்குற் செவ்வாய் வெண்நகைக் கரிய வாள்கண் மங்கைஓர் பங்க போற்றி: அழகிய பாம்பின் படத்தை போன்ற நிதம்பத்தையும், பவளம் போன்ற சிவந்த வாயையும், வெண்மையான புன்னகையையும், கூர்மையான வாள் போன்ற கரிய கண்களையும் உடைய உமாதேவியை தன் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு விளங்கும் அம்மையப்பனே போற்றி!
மால்விடை ஊர்தி போற்றி: திருமாலே காளை வடிவம் எடுத்துத் தாங்க, அதன்மீது ஏறி எழுந்தருளும் விடைவாகன மூர்த்தியே போற்றி!
இங்கிஇவ்வாழ்வு ஆற்றகில்லேன் எம்பிரான் இழித்திட்டேனே: என் தலைவனே! இப்பூவுலகில் அமையும் துயரம் நிறைந்த இச்சம்சார வாழ்க்கையை அடியேனால் இனிமேலும் சகித்துக்கொள்ள முடியாது! அதனால் இப் புலாலுடம்பு வாழ்வை முற்றிலுமாக வெறுத்து ஒதுக்கிவிட்டேன்!
இழித்தனன் என்னை யானே
எம்பிரான் போற்றி போற்றி
பழித்திலேன் உன்னை என்னை
ஆளுடைப் பாதம் போற்றி
பிழைத்தவை பொறுக்கை எல்லாம்
பெரியவர் கடமை போற்றி
ஒழித்திடு இவ்வாழ்வு போற்றி
உம்பர்நாட்டு எம்பிரானே. (48)
இழித்தனன் என்னை யானே எம்பிரான் போற்றி போற்றி: "தகுதியற்ற இப் பிறவி வாழ்க்கையை வாழ்ந்தேனே" என்று என்னை நானே இழிவாகக் கருதி வெறுத்து ஒதுக்கிவிட்டேன்! என் எம்பெருமானே, உனக்கு அரஹரா போற்றி! போற்றி!
பழித்திலேன் உன்னை என்னை ஆளுடைப் பாதம் போற்றி: "எனக்கு இன்னும் முக்தி தரவில்லையே" என்று உன்னை ஒருபோதும் நான் குறை கூற மாட்டேன்! அடியேனைத் தன் உடைமையாகக் கொண்டு ஆட்கொண்ட உன்னுடைய பொன்னார் திருவடிகளுக்கே போற்றி!
பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி: அறியாமையினால் அடியேன் செய்த பிழைகள், குற்றங்கள் எல்லாவற்றையும் பொறுத்துக் காப்பது பெரியோராகிய உன்னுடைய பெருந்தன்மைக்கு அழகன்றோ கருணைக் கடலே போற்றி!
ஒழித்திடு இவ்வாழ்வு போற்றி உம்பர்நாட்டு எம்பிரானே: தேவர்கள் வாழும் மேலான சிவலோகத்திற்குத் தலைவனே! துயரம் நிறைந்த இப் புலாலுடம்பு உலகியல் வாழ்க்கையை அடியேனுக்கு முடித்து வைத்தருள வேண்டும் உனக்கு போற்றி!
எம்பிரான் போற்றி வானத்து
அவர்அவர் ஏறு போற்றி
கொம்பரார் மருங்குல் மங்கை
கூறவெண்ணீற போற்றி
செம்பிரான் போற்றி தில்லைத்
திருச்சிற்றம் பலவ போற்றி
உம்பரா போற்றி என்னை
ஆளுடை ஒருவ போற்றி. (56)
எம்பிரான் போற்றி வானத்து அவர்அவர் ஏறு போற்றி: எங்களை எப்போதும் தாங்கி நிற்கும் தலைவனே போற்றி! விண்ணுலகில் வாழும் தேவர்கள் அந்தந்த உலகங்களில் தலைவர்களாய் விளங்கினாலும், அவர்களுக்கெல்லாம் தலைவனாய் விளங்கும் பெருமைமிக்க சிங்கமே போற்றி!
கொம்பரார் மருங்குல் மங்கை கூறவெண்ணீற போற்றி: பூங்கொடி போன்ற மெல்லிய இடையைக் கொண்ட உமாதேவியை தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவனே போற்றி! திருமேனி முழுதும் வெண்மையான திருநீற்றைப் பூசியிருக்கும் பரிசுத்த மூர்த்தியே போற்றி!
செம்பிரான் போற்றி தில்லைத் திருச்சிற்றம் பலவ போற்றி: செம்மைச் சுடராய் விளங்கிக் கருணை பொழியும் செம்பிரானே போற்றி! தில்லை மாநகரில் அமைந்துள்ள திருச்சிற்றம்பலத்திலே ஆனந்தக் கூத்தாடும் நடராஜப் பெருமானே போற்றி!
உம்பரா போற்றி என்னை ஆளுடை ஒருவ போற்றி: தேவாதி தேவர்களுக்கெல்லாம் மேலான பரம்பொருளே போற்றி! எவ்விதத் தகுதியும் இல்லாத எளியேனாகிய என்னைத் தன் அடிமையாகக் கொண்டு ஆட்கொண்ட ஒப்பற்ற தனிப்பெரும் பொருளே! உனக்கு அரஹரா போற்றி! போற்றி!
ஒருவனே போற்றி ஒப்புஇல்
அப்பனே போற்றி வானோர்
குருவனே போற்றி எங்கள்
கோமளக் கொழுந்து போற்றி
வருகஎன்று என்னை நின்பால்
வாங்கிட வேண்டும் போற்றி
தருகநின் பாதம் போற்றி
தமியனேன் தனிமை தீர்த்தே. (64)
ஒருவனே போற்றி ஒப்புஇல் அப்பனே போற்றி: ஈடில்லாத ஒப்பற்ற தனிப்பெரும் பொருளாக விளங்கும் ஒருவனே போற்றி! தனக்கு நிகராகச் சொல்வதற்கு வேறு எந்தவொரு பொருளுமில்லாத இணையற்ற தந்தையே போற்றி!
வானோர் குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்து போற்றி: விண்ணுலகில் வாழும் தேவாதி தேவர்களுக்கெல்லாம் மேலான ஞான குருவாக விளங்குபவனே போற்றி! மென்மை நிறைந்த கொழுந்து போன்ற இளமையும் அழகும் கொண்ட எங்கள் பெருமானே போற்றி!
வருகஎன்று என்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி: இச்சம்சாரப் பிறவித் துயரில் அகப்பட்டுத் தவிக்கும் எளியேனை, "அஞ்சேல், என் அருகில் வருக!" என்று அன்போடு அழைத்து, உன்னுடைய அருள் திருவடி நிழலிலே சேர்த்துக் கொள்ள வேண்டும் போற்றி!
தருகநின் பாதம் போற்றி தமியனேன் தனிமை தீர்த்தே: துணையேதும் இன்றித் தனியனாய்த் தவிக்கும் அடியேனின் பிறவித் தனிமையைப் போக்கி, உனது மேலான திருவடி நிழலையே எனக்குப் புகலிடமாகத் தந்தருள வேண்டும்! உனக்கு அரஹரா போற்றி! போற்றி!
தீர்ந்த அன்பாய அன்பர்க்கு
அவரினும் அன்ப போற்றி
பேர்ந்துஎன் பொய்ம்மை ஆட்கொண்டு
அருளிடும் பெருமை போற்றி
வார்ந்தநஞ்சு அயின்று வானோர்க்கு
அமுதம்ஈவள்ளல் போற்றி
ஆர்ந்தநின் பாதம் நாயேற்கு
அருளிட வேண்டும் போற்றி. (72)
தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப போற்றி: உலகியல் பற்றுகள் அனைத்தும் நீங்கி, முழுமையான பக்தி கொண்ட அடியார்களுக்கு, அவர்கள் காட்டும் அன்பைக் காட்டிலும் மேலான பேரன்பைக் காட்டும் எம்பெருமானே போற்றி!
பேர்ந்துஎன் பொய்ம்மை ஆட்கொண்டு அருளிடும் பெருமை போற்றி: அடியேனிடம் குடிகொண்டிருக்கும் வஞ்சனையையும் பொய்யையும் அடியோடே அகற்றி, என்னை உனது அடிமையாக ஏற்று ஆட்கொள்ளும் உனது பெருந்தன்மைமிக்க பெருமைக்கே போற்றி!
வார்ந்தநஞ்சு அயின்று வானோர்க்கு அமுதம்ஈவள்ளல் போற்றி: பாற்கடலிலிருந்து பெருகி வந்த கொடிய ஆலால நஞ்சினைத் தான் உண்டு விண்ணில் வாழும் தேவர்களுக்குச் சாவா மருந்தாகிய அமுதத்தை அள்ளி வழங்கிய பரங்கருணை வள்ளலே போற்றி!
ஆர்ந்தநின் பாதம் நாயேற்கு அருளிட வேண்டும் போற்றி: நிறைந்த மேன்மையுடைய உனது பொன்னார் திருவடிகளை, நாயினும் கடையனான எளியேனுக்கும் தந்து அருள வேண்டும்! உனக்கு அரஹரா போற்றி! போற்றி!
போற்றி இப்புவனம் நீர் தீக்
காலொடு வானமானாய்
போற்றி எவ்வுயிர்க்குந் தோற்றம்
ஆகிநீ தோற்றம் இல்லாய்
போற்றி எல்லாவுயிர்க்கும்
ஈறாய் ஈறின்மை ஆனாய்
போற்றி ஐம்புலன்கள் நின்னைப்
புணர்கிலாப் புணர்க்கை யானே. (80)
போற்றி இப்புவனம் நீர் தீக் காலொடு வானமானாய்: உலகமாகிய நிலம், நீர், தீ, காற்று ஆகாயம் என்னும் ஐம்பூதங்களாகவும் நீயே விரிந்து நிற்பவனே, உனக்கு போற்றி!
போற்றி எவ்வுயிர்க்குந் தோற்றம் ஆகிநீ தோற்றம் இல்லாய்: உலகில் வாழும் அனைத்து உயிர்களும் தோன்றுவதற்குக் காரணமான ஆதிப் பொருளாக இருந்து, ஆனால் தனக்கு என்று ஒரு தோற்றமும் இல்லாத சுயம்பூவாக விளங்குபவனே போற்றி!
போற்றி எல்லாவுயிர்க்கும் ஈறாய் ஈறின்மை ஆனாய்: அனைத்து உயிர்களுக்கும் இறுதி முடிவாக இருந்து, ஆனால் தனக்கு என்று எவ்வித முடிவும் இல்லாத நித்தியப் பொருளாகத் திகழ்பவனே போற்றி!
போற்றி ஐம்புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கை யானே: மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களாலும் அறிய முடியாதவாறு அவற்றிற்கு அப்பற்பட்டு நின்றும், அதேசமயம் அடியார்களின் உணர்வுக்குள் கலந்திருக்கும் விந்தையான புணர்ச்சி உடையவனே உனக்கு அரஹரா போற்றி! போற்றி!