திருவாசகம் என்பது மாணிக்கவாசகர் அருளிய, பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாகப் போற்றப்படும் அருட்பெருநூல். இறைவனின் திருவருளால் உள்ளம் உருகி, ஆன்மா சிவத்துடன் ஒன்றிடும் பேரனுபவத்தை எளிமையான, ஆழமான தமிழில் வெளிப்படுத்தும் அரிய பொக்கிஷமாகத் திருவாசகம் விளங்குகிறது. மனிதனின் உலகப் பற்றுகள், அகப்பற்றுகள், ஆசைகள், துன்பங்கள் ஆகியவற்றிலிருந்து அவனை விடுவித்து, சிவப்பற்றை வளர்த்து, இறையருளை நாடி, இறுதியில் வீடுபேறு அடையும் ஆன்மிகப் பயணத்தைத் திருவாசகப் பாடல்கள் உணர்த்துகின்றன.
திருக்குறள் எவ்வாறு வாழ்வியல் உண்மைகளையும் அறநெறிகளையும் குறள்களின் வழியாகச் சுருக்கமாகவும் செறிவாகவும் எடுத்துரைக்கிறதோ, அதுபோல திருவாசகத்தின் ஆழ்ந்த ஆன்மிகக் கருத்துகளைச் சுருக்கமான குறள் வடிவில் எடுத்துரைக்கும் முயற்சியே “திருவாசககுறள்”. இம்முயற்சியின் நோக்கம் திருவாசகத்தின் மூலப்பாடல்களுக்கு மாற்றாக அமைவது அல்ல; அவற்றின் மையப் பொருளை எளிதில் நினைவில் கொள்ளவும், சிந்திக்கவும், அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கவும் உதவும் வகையில் குறள் வடிவில் வழங்குவதே ஆகும்.
“அகப்பற்றும் புறப்பற்றும் அற்றிடச் சிவப்பற்றே / சிந்தையில் பற்றிடல் வீடு” போன்ற திருவாசககுறள்கள், இறைவனைப் பற்றிய பக்தியை மட்டுமல்லாது, மனிதன் தன் உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக் கொண்டு இறைநெறியில் வாழ வேண்டிய வழியையும் எடுத்துரைக்கின்றன.
திருவாசகத்தின் அருட்பொருளைத் திருக்குறளின் செறிவில் சிந்தித்து, சிவப்பற்றை உள்ளத்தில் வளர்ப்போம் — இதுவே திருவாசககுறளின் நோக்கம்.
ஓர்பற்றாம் சிவபற்றே பற்றிடில் பிறப்பறுக்கும்
முக்கண் அடிபற்றான் தொடர்பிறப்பே.
பொருள்: உலகப் பற்றுகள் அனைத்தையும் விடுத்து, சிவபெருமானையே ஒரே பற்றாகக் கொண்டு, முக்கண்ணனின் திருவடிகளைப் பற்றிக் கொண்டால், உயிரைத் தொடர்ந்து வரும் பிறவித் துன்பங்கள் நீங்கும். சிவபற்றே உயர்ந்த பற்றாகும்; அந்தப் பற்றின் மூலம் இறையருளைப் பெற்று, பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட்டு பேரின்ப நிலையை அடையலாம்.
அகப்பற்றும் புறப்பற்றும் அற்றிடச் சிவப்பற்றே
சிந்தையில் பற்றிடல் வீடு.
பொருள்: அகப்பற்று, புறப்பற்று எனப்படும் உலகியல் ஆசைகளையும் பந்தங்களையும் மனத்திலிருந்து முற்றிலும் நீக்க வேண்டும். அவற்றிற்குப் பதிலாக சிவபெருமானின் திருவடிகளையே ஒரே பற்றாகச் சிந்தையில் நிலைநிறுத்த வேண்டும். இவ்வாறு சிவப்பற்றுடன் வாழும்போது மனம் தூய்மை பெற்று, இறையருள் பெருகி, பிறவிப் பிணைப்புகள் நீங்கி, இறுதியில் வீடுபேறு எனும் பேரின்ப நிலையை உயிர் அடையும்.
மனமகிழ்ந்து சிவபுராணம் சொல்வார் வினையற்று
இனிதே வாழ்வார் சிவனருளால்.
பொருள்: மனமகிழ்ச்சியுடனும் பக்தியுடனும் சிவபுராணத்தைச் சொல்லி ஓதுபவர்கள், சிவபெருமானின் திருவருளால் வினைப்பிணைப்புகளிலிருந்து (சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம்) விடுபட்டு வாழ்வார்கள். அவர்களின் மனம் தூய்மை பெற்று, துன்பங்கள் நீங்கி, இறைநினைவு பெருகும். சிவனருளைத் துணையாகக் கொண்டு வாழ்வதால், பிறவித் தளைகள் நீங்கி, ஆன்மிக அமைதியும் பேரின்பமும் பெற்று, சிவபெருமானின் திருவடிகளை அடையும் பேறு கிட்டும்.
மனமகிழ்ந்து சிவபுராணம் சொல்வார் வினையற்று
இனிதே வாழ்வார் இறையருளால்.
பொருள்: மனமகிழ்ச்சியுடனும் பக்தியுடனும் சிவபுராணத்தைச் சொல்லி ஓதுபவர்கள், சிவபெருமானின் திருவருளால் வினைப்பிணைப்புகளிலிருந்து (சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமியம்) விடுபட்டு வாழ்வார்கள். அவர்களின் மனம் தூய்மை பெற்று, துன்பங்கள் நீங்கி, இறைநினைவு பெருகும். சிவனருளைத் துணையாகக் கொண்டு வாழ்வதால், பிறவித் தளைகள் நீங்கி, ஆன்மிக அமைதியும் பேரின்பமும் பெற்று, சிவபெருமானின் திருவடிகளை அடையும் பேறு கிட்டும்.