திருவாசகத் தகவல்-1
பதிகம்: திருப்பள்ளியெழுச்சி
திருப்பள்ளியெழுச்சியில் எம்பெருமான் எழுந்தருளுவது பற்றி 12 இடங்களில் குரு மாணிக்கவாசகர் குறிப்பிட்டுள்ளார். 10 இடங்களில் "பள்ளி எழுந்தருளாயே" என்றும் ஒரு இடத்தில் "பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே" என்றும் மற்றும் ஒரு இடத்தில் "எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும்" என்றும் பதிகத்தில் வருகின்றன.
எழுந்தருளாயே என்றால் பொதுவான பொருள், நாம் ஈசனை சயனத்திலிருந்து எழும்பும்படி வேண்டுகிறோம் என்பது. அவர் உறக்கம், விழிப்பு என்ற இரண்டுக்கும் அப்பாற்பட்டவர். மனிதன் போன்று ஈசன் உறங்கினால் என்னாகும் என்று சிந்தித்து பாருங்கள்.
எழுந்தருளாயே என்று நாம் பாடும்பொழுது ஈசனை நம்மில் உணர தந்தையிடம் விண்ணப்பிக்கிறோம். நாம் மாயையில் மற்றும் அஞ்ஞானத்திலிருந்து விடுபட பிரார்த்திக்கிறோம். பள்ளி எழுந்தருளாயே என பாடும் பொழுது ஈசனை எங்கள் உள்ளத்தில் எழுந்தருளுக என்று 10 இடங்களில் வேண்டுகிறோம்.
(11) பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே - இந்த வரியில், ஈசனை இந்த எளியவனின் குடிலுக்கும் வரும்படி வேண்டுகிறோம்.
(12) எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும் - தேவரும் காணா திருவடிகள் என்பொருட்டு இந்த பூமிக்கு வந்தன என்கிறார்.
திருப்பள்ளியெழுச்சி எப்பொழுது படிக்கலாம்?
தினமும் எழுந்து உடலை தூய்மை செய்து விளக்கேற்றி பின்பு படிக்கவேண்டிய முதல் பதிகம். பிரம்ம முகூர்த்தத்தில் படித்தால் மிக நன்று (அதிகாலை 4:30 - 6:00). இந்த நேரம் உங்களுக்கு அமையவில்லை என்றால் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த பதிகத்தை பாடலாம். என் தந்தை, இந்த பூமி உட்பட அண்ட சராசரங்களையும் ஆள்பவர். ஒவ்வொரு நொடியும் எங்கோ ஓரிடத்தில் விடியல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
திருப்பள்ளியெழுச்சி பதிகத்தை இல்லங்களில் பாடுவதன் பலன் என்ன?
திருப்பள்ளியெழுச்சி பாடுவதன் மூலம் தந்தையை நமது உள்ளத்திலும், இல்லத்திலும் இருக்க வேண்டுகிறோம். தந்தையும் அவ்வாறே அருள்கிறார். தந்தையின் அரவணைப்பில் இருக்கும் பொழுது நமக்கு என்ன குறை?
வேண்டத் தக்கது அறிவோய்நீ
வேண்ட முழுதும் தருவோய்நீ