hero-img1

திருவாசகத்தின் திருத்தகவல்கள்

0 Comments

திருவாசகத் திருத்தகவல் - 01
எழுதியவர்: வெங்கடேஷ் நாராயணன் IRAS (Retd.), சிவன்மனை அறக்கட்டளை

பதிகம்: திருப்பள்ளியெழுச்சி
திருப்பள்ளியெழுச்சியில் எம்பெருமான் எழுந்தருளுவது பற்றி 12 இடங்களில் குரு மாணிக்கவாசகர் குறிப்பிட்டுள்ளார். 10 இடங்களில் "பள்ளி எழுந்தருளாயே" என்றும் ஒரு இடத்தில் "பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே" என்றும் மற்றும் ஒரு இடத்தில் "எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும்" என்றும் பதிகத்தில் வருகின்றன.

எழுந்தருளாயே என்றால் பொதுவான பொருள், நாம் ஈசனை சயனத்திலிருந்து எழும்பும்படி வேண்டுகிறோம் என்பது. அவர் உறக்கம், விழிப்பு என்ற இரண்டுக்கும் அப்பாற்பட்டவர். மனிதன் போன்று ஈசன் உறங்கினால் என்னாகும் என்று சிந்தித்து பாருங்கள்.

எழுந்தருளாயே என்று நாம் பாடும்பொழுது ஈசனை நம்மில் உணர தந்தையிடம் விண்ணப்பிக்கிறோம். நாம் மாயையில் மற்றும் அஞ்ஞானத்திலிருந்து விடுபட பிரார்த்திக்கிறோம். பள்ளி எழுந்தருளாயே என பாடும் பொழுது ஈசனை எங்கள் உள்ளத்தில் எழுந்தருளுக என்று 10 இடங்களில் வேண்டுகிறோம்.

(11) பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே - இந்த வரியில், ஈசனை இந்த எளியவனின் குடிலுக்கும் வரும்படி வேண்டுகிறோம்.

(12) எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும் - தேவரும் காணா திருவடிகள் என்பொருட்டு இந்த பூமிக்கு வந்தன என்கிறார்.

திருப்பள்ளியெழுச்சி எப்பொழுது படிக்கலாம்?
தினமும் எழுந்து உடலை தூய்மை செய்து விளக்கேற்றி பின்பு படிக்கவேண்டிய முதல் பதிகம். பிரம்ம முகூர்த்தத்தில் படித்தால் மிக நன்று (அதிகாலை 4:30 - 6:00). இந்த நேரம் உங்களுக்கு அமையவில்லை என்றால் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த பதிகத்தை பாடலாம். என் தந்தை, இந்த பூமி உட்பட அண்ட சராசரங்களையும் ஆள்பவர். ஒவ்வொரு நொடியும் எங்கோ ஓரிடத்தில் விடியல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

திருப்பள்ளியெழுச்சி பதிகத்தை இல்லங்களில் பாடுவதன் பலன் என்ன?
திருப்பள்ளியெழுச்சி பாடுவதன் மூலம் தந்தையை நமது உள்ளத்திலும், இல்லத்திலும் இருக்க வேண்டுகிறோம். தந்தையும் அவ்வாறே அருள்கிறார். தந்தையின் அரவணைப்பில் இருக்கும் பொழுது நமக்கு என்ன குறை?
வேண்டத் தக்கது அறிவோய்நீ
வேண்ட முழுதும் தருவோய்நீ

ஓம் நமச்சிவாய


Sivanmanai Charitable Trust

நித்திய அன்னதானம் | திருமுறை நிகழ்ச்சிகள் | திருக்கைலாய வாத்திய சேவை
Mobile: 9003059000
Email: sivanmanai.ct@gmail.com

Click to join Thiruvasagam Group
https://chat.whatsapp.com/K7jcdR6EkuZ0sgmIWIec2M?mode=hqr  


திருவாசகத் தகவல் - 02
எழுதியவர்: வெங்கடேஷ் நாராயணன் IRAS (Retd.), சிவன்மனை அறக்கட்டளை

திருச்சிற்றம்பலம்
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறைஉறை சிவபெருமானே
பதிகம்: திருப்பள்ளியெழுச்சி

திருப்பள்ளியெழுச்சி பதிகத்தில் மாணிக்கவாசக பெருமான், நாம் ஈசனை எவ்வாறெல்லாம் வணங்கலாம் என்று மேற்கண்ட பாடல் மூலம் உணர்த்துகிறார்.
(1) ஒருபக்கம் சிவனடியார்கள் இசைக்கருவிகள் கொண்டு நாதத்தின் மூலம் அவரை வழிபடுகின்றனர். திருக்கைலாய வாத்தியம் இசைத்து ஈசனை வழிபடுவதும் இதில் அடங்கும். இசை மூலம் ஈசனை வழிபடுவதை முதலாவதாக கூறுகிறார்.
(2) ஒருபக்கம் வேத மந்திரங்கள் முழங்க வழிபடுகின்றனர்.
(3) ஒருபக்கம் பக்தி பாடல்கள் பாடி (திருமுறைகள் - தேவாரம், திருவாசகம், ...) வழிபடுகின்றனர்.
(4) ஒருபக்கம் நறுமணம் கமழும் மலர்களை மாலையாக தொடுத்து சிவபெருமானை அலங்கரிக்கின்றனர்.
(5) ஒருபக்கம் அடியார்கள் தங்கள் கரத்தை கூப்பி தொழுகின்றனர். மற்றும் சிலர் தங்கள் கரங்களை தலைக்கு (சென்னி) மேலே கூப்பி (அஞ்சலி முத்திரை) அவனை சரணடைகின்றனர்.
(6) ஒருபக்கம் ஐயாறன் மேல் உள்ள அன்பின் மிகுதியால் கண்ணீர் தாரையாக வார்த்து போற்றுகின்றனர்.
(7) ஒருபக்கம் உணர்ச்சி மேலிட்ட அடியார்கள் தங்கள் உடல் நெகிழ்ந்து போய் துடிக்கின்றனர் மற்றும் ஆடுகின்றனர்.
இதுவே சப்தவித பக்தி (சிவபெருமானை வழிபடும் ஏழு முறைகள்) எனப்படும்.

ஓம் நமச்சிவாய

Sivanmanai Charitable Trust
நித்திய அன்னதானம் | திருமுறை நிகழ்ச்சிகள் | திருக்கைலாய வாத்திய சேவை
Mobile: 9003059000
Email: sivanmanai.ct@gmail.com
 

Click to join Thiruvasagam Group
https://chat.whatsapp.com/K7jcdR6EkuZ0sgmIWIec2M?mode=hqr 


திருவாசகத் தகவல் - 03
எழுதியவர்: வெங்கடேஷ் நாராயணன் IRAS (Retd.), சிவன்மனை அறக்கட்டளை

இரண்டு சிவபுராணங்கள் – ஓர் அறிமுகம்
சைவ சமயத்தில் சிவபுராணம் என்ற பெயரில் இரண்டு சிறப்புமிக்க நூல்கள் உள்ளன. ஒன்று மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம். மற்றொன்று பதினெட்டு மகாபுராணங்களில் ஒன்றான வடமொழி சிவபுராணம். இரண்டும் சிவபெருமானின் பெருமையையும், அவருடைய திருவருளையும், உயிர்கள் இறைவனை அடையும் வழியையும் எடுத்துரைக்கின்றன.
 
1-மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம்
தமிழ் சைவத் திருமுறை – திருவாசகம், முதல் பதிகம்
 
திருவாதவூரில் அவதரித்த மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் முதல் பதிகம் சிவபுராணம் ஆகும். இவர் எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று பொதுவாகக் கருதப்படுகிறார். சிவபெருமானின் திருவருளால் அமைச்சராக இருந்த நிலையிலிருந்து சிவனடியாராக மாறி, இறைவன் மீது கொண்ட பேரன்பைத் தனது பாடல்களில் வெளிப்படுத்தியவர். திருவாசகத்தில் மொத்தம் 658 பாடல்கள், 51 பதிகங்களாக விளங்குகிறது.
 
சிவபுராணம் என்பது இறைவனின் திருவடிகளைப் போற்றுதல், உயிர்களின் பிறவித்துன்பம், வினைப்பயன், இறைவனின் கருணை, ஆன்மாவின் விடுதலை ஆகியவற்றை விளக்கும் அற்புதமான பக்திப் பாடலாகும். இதனைப் பாராயணம் செய்வதால் மனத்தூய்மை, சிவபக்தி, மன அமைதி, இறைநம்பிக்கை ஆகியவை பெருகும். சிவபெருமானின் திருவருளைப் பெற்று பிறவிப் பிணியிலிருந்து விடுபடுவதற்கான ஆன்மிக வழியாகவும் இது போற்றப்படுகிறது.
 
2-வடமொழி சிவபுராணம் – பதினெட்டு மகாபுராணங்களில் ஒன்று
சமஸ்கிருத மகாபுராணம் – சைவ சமயத்தின் முக்கிய நூல்.
 
வடமொழியில் எழுதப்பட்ட சிவபுராணம் (24,000 ஸ்லோகங்கள்) இந்து சமயத்தின் பதினெட்டு மகாபுராணங்களில் ஒன்றாகும். இதன் ஆசிரியராக மரபுவழியில் வேதவியாசர் (கிருஷ்ண துவைபாயனர்) போற்றப்படுகிறார். சிவபெருமானே முதலில் இந்தப் புராணத்தை அருளியதாகவும், பின்னர் வேதவியாசர் அதனைத் தொகுத்துச் சுருக்கியதாகவும் புராண மரபு கூறுகிறது.
 
இந்நூல் ஏழு சம்ஹிதைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை வித்யேஸ்வர சம்ஹிதை, ருத்ர சம்ஹிதை, சதருத்ர சம்ஹிதை, கோடிருத்ர சம்ஹிதை, உமா சம்ஹிதை, கைலாச சம்ஹிதை மற்றும் வாயவீய சம்ஹிதை ஆகும். இதில் சிவபெருமானின் திருவிளையாடல்கள், சிவலிங்கத்தின் பெருமை, பார்வதி தேவியின் அவதாரம், முருகப்பெருமானின் தோற்றம், சிவபூஜை முறைகள், சிவராத்திரியின் மகிமை, சிவபக்தி மற்றும் முக்தி நெறி ஆகியவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
 
சிவபுராணத்தைப் பக்தியுடன் படிப்பதும் கேட்பதும் பாவங்கள் நீங்கவும், சிவபக்தி வளரவும், ஞானம் பெறவும், இறுதியில் சிவபெருமானின் திருவடியை அடையவும் வழிவகுக்கும்.
 
இரு சிவபுராணங்களின் சிறப்பு - மாணிக்கவாசகர் அருளிய தமிழ் சிவபுராணம் பக்தியின் வழியாக இறைவனை அடையும் ஆன்மிகப் பாதையை உணர்த்துகிறது. வேதவியாசர் தொகுத்த வடமொழி சிவபுராணம் சிவபெருமானின் பெருமையையும், அவருடைய அவதாரங்களையும், வழிபாட்டு முறைகளையும் விரிவாக எடுத்துரைக்கிறது.
 
இரண்டின் நோக்கமும் சிவபெருமானின் திருவருளைப் பெற்று, பிறவிப் பெருங்கடலைக் கடந்து, சிவானந்த நிலையை அடைவதே ஆகும்.
 
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!

ஓம் நமச்சிவாய

Sivanmanai Charitable Trust
நித்திய அன்னதானம் | திருமுறை நிகழ்ச்சிகள் | திருக்கைலாய வாத்திய சேவை
Mobile: 9003059000
Email: sivanmanai.ct@gmail.com
 

Click to join Thiruvasagam Group
https://chat.whatsapp.com/K7jcdR6EkuZ0sgmIWIec2M?mode=hqr 


திருவாசகத் தகவல் - 04
எழுதியவர்:
வெங்கடேஷ் நாராயணன் IRAS (Retd.), சிவன்மனை அறக்கட்டளை

பசி விளக்கம்
இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களிடத்தும் சிவன் சீவனாய் (உயிர் அல்லது ஆன்மாவாக) விளங்குகிறார். எனவே அனைத்து உயிர்களும் சிவனடியார்கள் என்றே உணர்வோம். நாம் காணும் உலகியல் பேதங்கள் (ஜாதி, மத, மொழி, சடங்குகள், சம்பிரதாயங்கள்...) யாவும் மனிதன் மாயையின் தாக்கத்தால் தனக்கு தானே கற்பித்தவை. பசி ஒன்றே எல்லா உயிர்களிலும் ஏற்படும் ஒரு  அன்றாட நிகழ்வு. 
"பசி கொள்ளாத பொருளை உயிரென்று சொல்வதில்லை;
உயிர் இல்லாத பொருளுக்குப் பசியும் வருவதில்லை"
 
ஆக்கம் அளவுஇறுதி இல்லாய் அனைத்துஉலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பில்

-சிவபுராணம்
 
சிவபெருமானே ஆன்மாவை இந்த உடல் எனும் கருவியில் இட்டு (ஆக்குவாய்) இந்த பூவுலகிற்க்கு அனுப்பினார். அப்படி இங்கு வந்த இந்த உடலும், உயிரும் ஜீவிக்கும் (பிழைத்திருக்கும்) பொருட்டு பசியை தோற்றுவிப்பதும் (காப்பாய்) சிவனே. எனவே பசி என்பது எல்லா உயிர்களிடத்தும் உறைந்திருக்கும் சிவபெருமானின் வெளிப்பாடு. இங்கு உணவு கேட்பவரும் சிவனே, உண்பவரும் சிவனே. பசி கொண்டிருக்கும் உயிர்களுக்கு உணவிடுவது சிவபெருமானுக்கு செய்யப்படும் நைவேத்தியம். அந்த உணவு நேரே சிவபெருமானையே சென்று சேரும்.
 
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி .

-திருக்குறள்: 226 – ஈகை அதிகாரம்.
 
பொருள்: வறுமையால் வாடி, கொடிய பசியால் துன்பப்படுபவர்களின் பசியைப் போக்குவதே ஒருவர் தாம் சேர்த்த செல்வத்தைப் பாதுகாப்பாக வைக்கும் சிறந்த வழியாகும்.

பசித்தோர் முகம்பார் பரம்பொருள் அருள்கிட்டும்.strong>
-வல்லநாடு சாது சிதம்பர ஸ்வாமிகள்

ஓம் நமச்சிவாய

Sivanmanai Charitable Trust
நித்திய அன்னதானம் | திருமுறை நிகழ்ச்சிகள் | திருக்கைலாய வாத்திய சேவை
Mobile: 9003059000
Email: sivanmanai.ct@gmail.com

Click to join Thiruvasagam Group
https://chat.whatsapp.com/K7jcdR6EkuZ0sgmIWIec2M?mode=hqr 

Written by Sivanmanai

உங்கள் பகுதியில் உள்ள திருக்கோவில்களில் இலவச கைலாய வாத்திய சேவை மற்றும் சிவபுராணம் விளக்கவுரை நிகழ்ச்சியை நடத்த விரும்பினால், தயவுசெய்து 900-305-9000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் - செல்வி காயத்ரி மு, மேலாளர், சிவன்மனை, சென்னை.

Leave a Reply