hero-img1

Sathguru Srimath Ponnambala Swamigal

0 Comments

சற்குரு ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் சத்சரிதம்

ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் திருஅவதாரம்

தொண்டை வளநாடு சான்றோர் உடைத்து என்ற முதுமொழிக்கு ஏற்ப நம் தொண்டை வள நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம் தற்போதைய திருப்போரூர் வட்டம், செம்பாக்கம் என்ற சிற்றூரில் திருச்சிற்றம்பல முதலியார் சொக்கம்மாள் ஆகிய இருவரும் இல்லறத்தில் நல்லறம் புரிந்து வாழ்ந்து வந்தனர்.

 திருச்சிற்றம்பல முதலியார் வேளாண்மையோடு நெசவுத் தொழில் மேற்கொண்டு நித்யதவ ஒழுக்கத்தோடு சிவசிந்தனையுடன் வாழ்க்கை நடத்திவரும் காலத்தில் திருமணமாகி பல வருடங்கள் கழித்தும் மகப்பேறு வாய்க்காதது பெரும் குறையாக இருந்து வந்தது.

தம்பதிகள் இருவரும் எல்லாம்வல்ல அழகாம்பிகை உடனாய ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலை வலம் வந்து பிரார்த்தனை செய்து வணங்கி வரும் காலத்தில், திருப்போரூர் திருகிருத்திகை தினத்தையொட்டி பல்வேறு பகுதியில் இருந்து சந்நியாசிகளும், சித்தர்களும் பாதயாத்திரையாக நடந்து வந்து செம்பாக்கத்தில் வீடுதோறும் “பவதி பிச்சாந்தேகி" என்று பிச்சை எடுத்து உண்டு திண்ணையில் படுத்துறங்கி செல்வது வழக்கம். அதுபோல் ஒருமாத கிருத்திகை தினத்தன்று ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலில் வலம் வந்து வணங்கி வரும் போது ஒரு அதிதீவிர சிவசந்நியாசி ஒருவர் கோயிலில் அமர்ந்து தியானத்தில் இருந்தார்

அவரைப் பார்த்த சிற்றம்பல முதலியாருக்கு மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி உண்டானது. அவர் தியானத்தில் இருந்து விழித்ததும் அவரை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவு படைத்து அருள்பெற வேண்டும் என நினைத்து காத்திருந்தார். தியானத்தில் இருந்து விழித்த சந்நியாசியிடம் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து தாங்கள் உணவு உண்ணவில்லை என நினைக்கிறேன். தாங்கள் என் வீட்டிற்கு எழுந்தருளினால் உணவு படைத்து தங்களின் பசியாற்றிய பெரும் சிவபுண்ணியம் செய்த பாக்கியம் கிடைக்க அருள்புரிய வேண்டும் என வேண்டினார்.

அதற்கு அந்த சந்நியாசி அப்பா நான் தினம் உணவு உண்ணும் பழக்கம் அற்றவன். வாரத்தில் ஒருநாள் ஒரு வேளை உணவு மட்டுமே அருந்துவேன். அதுவும் மற்றவர்கள் சமைத்து கொடுத்த உணவை உண்பது வழக்கமல்ல. நானே சமைத்து உண்பதுதான் என் வழக்கம். ஆகையால் உனக்கு சிவபுண்ணிய பலனை அளிப்பது என்னால் முடியாது என்று கூறி எழுந்து புறப்பட சிற்றம்பல முதலியார் காந்தத்திடம் ஈர்த்த இரும்பை போல மனம் அவரின் பின் தொடர்ந்தது.

மறுமுறையும் அவரிடம் சென்று வணங்கி "சுவாமிகள்" தாங்களே சமைத்து சாப்பிடுங்கள் உங்களுக்கு வேண்டிய அரிசியை நானே தருகிறேன் இங்கேயே சமைத்து உண்ணுங்கள் என்று கெஞ்சினார். இதை கண்ட சிவ சந்நியாசி மனம் இறங்கி சரி என ஒப்புக்கொண்டு தாங்கள் சிவாலயத்திலேயே இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு வீட்டிற்கு விரைந்தார்.

தன் மனைவி சொக்கம்மாளிடம் நடந்தவற்றைச் சொல்லி மகிழ்ந்து தன் வீட்டில் இருக்கும் அரிசியை தன் துண்டில் முடிந்து கொண்டு தன் வீட்டில் இருந்த சிறிய மண்பானை ஒன்றையும் எடுத்துக் கொண்டு ஒரு மணிநேரம் கழித்து கோவிலுக்கு வரும்படி கூறி கோயிலுக்கு விரைந்தார்

கோயிலில் அமர்ந்திருந்த சிவசந்நியாசியிடம் அரிசியும், மண்பானையும் கொடுத்து உணவு சமைத்து உண்ணும்படி கேட்டுக் கொள்ள, அகழி குளத்தில் பானையில் நீர் முகர்ந்து அரிசியை களைந்து கழுவி உலைநீர் விட்டு கல்லை அடுப்பாக்கி காய்ந்தசருகு கிளைகளை ஒடித்து சமையலுக்கு சிற்றம்பல முதலியார் உதவி செய்ய சிவசந்நியாசி சாதம் சமைத்து உப்பில்லாமல் சாப்பிடும் நேரத்தில் சொக்கம்மாள் அங்கு வர இருவரும் வணங்கி நிற்க.

சிவசந்நியாசி மகிழ்ந்து உண்ணும் சாதத்தில் ஒரு பிடியை கொடுத்து இதை சாப்பிடம்மா என்று கூறி கிருத்திகைக்கு நெல்குத்தி அரிசியாக்கி வைத்துள்ளதை தனக்கு என்று சிறிதும் எடுக்காமல் கணவன் கேட்டதும் எடுத்து கொடுத்த சொக்கத்தங்கம்! உனக்கு "பொன்னம்பலம்" தருகிறேன் பெற்றுக்கொள் என்று கூறிதர அதை வாங்கிய சொக்கம்மாள் சிவப்பிரசாதமாக உண்டு மகிழ்ந்தாள்.

சிற்றம்பல முதலியாரின் ஆத்ம பக்குவம் கருதி சிவசந்நியாசி சிவ தீட்சை செய்வித்து உயிர் உடலை விடும் மட்டும் சிவநாம ஜெபம் செய்து சிவபதம் அடைவாய் என்று அனுக்கிரஹம் செய்து பிரியா விடைபெற்று திருப்போரூர் விரைந்தார் சிவசந்நியாசி.

இன்நிகழ்ச்சி நடந்த சில மாதத்திலேயே சொக்கம்மாள் மணிவயிறு வாய்த்து 10-வது மாதம் ஒரு நன்னாளில் ஆண்மகவு பிறந்தது. சிற்றம்பல முதலியாருக்கும், சொக்கம்மாளுக்கும் சிவசந்நியாசியின் திருவருளால் பிறந்த குழந்தை என்பதை உணர்ந்து மகிழ்ச்சியில் களித்து சிவனருள் கொண்டு மலர்ந்த தாமரை மலர் போன்ற பேரழகுடன் பிறந்த ஆண் மகவை தாய் தந்தை மரபு என்ற இரு மரபினை சார்ந்த உற்றார் உறவினர் மிகவும் மகிழ்ச்சி கொண்டு சிவசந்நியாசி குறிப்பிட்டது போல குழந்தைக்கு “பொன்னம்பலம்” என்று நாமகரணம் செய்து அகம் மகிழ்ந்து அழைக்கலாயினர்.


இன்னல் களைகின்ற பூவடி (அது) செம்பை
ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகளின் சேவடி


ponnambalam png

ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள்


சிதம்பரம் பயணம்

பிறந்த பிள்ளைகளை முதன்முதலில் கோயிலுக்கு எடுத்துச் சென்று வழிபடுவது வழக்கம் . அவ்வாறே பிறந்த ஓராண்டில் பொன்னம்பல சுவாமிகளை அவருடைய தந்தை சிற்றம்பல முதலியாரும் , தாய் சொக்கம்மாளும் சிதம்பரம் சென்று தன் குலதெய்வமான சிற்சபையில் ஆனந்த தாண்டவமாடும் நடராச பெருமானை வழிப்பட்டு வெளிப்பிரகாரம் திருவலம் வரும்போது திருசிற்றம்பலம் என்று அழைத்து அவரின் பின்தோளின் மீது திருக்கரத்தினால் தொட்டு அருளிட மெய்சிலிர்க்க சிற்றம்பல முதலியாரும் அவர்தம் குடும்பத்தினரும் திரும்பி பார்க்க செம்பாக்கம் வந்த சிவசன்யாசி என அறிந்து பரவசமுற்றனர் .           “பொன்னம்பலம் கிடைத்ததா ” என்று கேட்டு குழந்தையை வாங்கி கொஞ்சி மகிழ்ந்து " திருநீற்றுகாப்பிட்டு " உனக்கு சித்த புருஷன் அவதரித்துள்ளான் கருத்தோடு வளர்ந்து உலகத்திற்கு உபகாரம் செய்வாய் என்று விரைவாய் நீங்கி அருளினார் . சிற்றம்பல முதலியாரும் குடும்பத்தினர் சிவபெருமானின் கருணை திறத்தை வியந்து கண்ணீர் மல்க செம்பாக்கம் திரும்பினர் .


" தவம் செய்வார்க்கு அவம் ஒருநாளுமில்லை "

                                                                  - ஒளவையார் 


கல்வி கற்றல்

பொன்னம்பல சுவாமிகளுக்கு கல்வியானது தம் தந்தையார் மூலமே தொடங்கப்பட்டது. இவரின் அறிவுதிறமும், பக்குவ நிலையும், சிவபக்தியும், உலகத்தினை அவர் பார்த்து புரிந்து கொள்ளும் விதமும், கல்லாதுணரவும், சொல்லாதுணர்த்தவும் வல்லவரென்று உணர்ந்த சிற்றம்பல முதலியார் கற்பிப்பதை கைவிட்டார். சுவாமிகள் எப்பள்ளியிலும் தனியே பயின்றதில்லை. வேறு இடத்திலும் பயின்றதில்லை. கற்க வேண்டியவை எதுவோ அதை இறைவனிடமே கற்றார்.

முற்பிறப்புகளிலேயே சரியை, கிரியை, யோகங்களை முடித்து இப்பிறப்பில் ஞானத்தில் நின்று சித்தி பெறுவதற்கென்றே பிறந்த சாமுசித்தராய் இளமையிலேயே ஓதாதுணரப் பெற்றார். "ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவருக்கு எழுமையும் ஏமாப்புடைத்து” என்னும் குறள்மொழி பொன்னம்பல சுவாமிகளுக்கு முற்றும் பொருந்தும். ஒன்றாக காண்பதே காட்சி: புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரமாம் - என்றாலும் சாவாமல் கற்பதே கல்வி: தனைப்பிறார் ஏவாமல் உண்பதே ஊண். என ஒளவையார் உறைத்த "சாகாகல்வியை கற்று சமாதி நிலையிலும், சகஜ நிலையிலும் வாழவாங்கு வாழ்ந்தார், வாழ்கிறார் நமது சுவாமிகள்”.


தந்தைக்கு உபதேசித்த தனயன்

ஒருமுறை சிற்றம்பல முதலியார் சிவாலயம் சென்று தன் இருகரத்தை சிரத்தில் குவித்து மனமுருகி தன் மகனின் அறிவுக கூர்மையையும், மனத தெளிவையையும், சிவஞானத்தையும் கண்டு பேருவகை அடைந்து பொன்னம்பலத்தை எந்த மாயை திரையும் மூடாமல் இருக்க இறைவனை மனம் உருகி அழுது தொழுது பிரார்த்தனை செய்து வலம் வந்து வணங்கி வருந்திய மனதோடு வீடு வந்து சேர்ந்தார்.

அப்போது சிறுவனாகிய பொன்னம்பலமும் வீதியில் சிறுவர் களோடு விளையாடிவிட்டு வீட்டினுள் நுழைந்து தந்தையின் விளையாடி விட்டு மனவருத்தத்தினை ஞானத்தால் அறிந்து "என்னை பற்றி கவலை வேண்டாம்! எக்காரணத்தாலும் என் ஞானத்தினை தைரோகித காற்றால் மாயை என்ற திரை என்மீது விழாது! உலக மாயையாகிய தண்ணீரில் வெண்ணெய் போல ஒட்டாமல் வாழ்வோம்!" என்று உறுதிப்பட உரைத்தார். இதைக கேட்ட சிற்றம்பல முதலியார் ஆச்சயமுற்று நான் சிவாலயம் சென்று பிரார்த்தித்துக் கொண்ட விஷயம் வீதியில் விளையாடி கொண்டிருக்கும் உனக்கு எப்படி தெரியும்? என்று கேட்டு சுவாமிகளின் தொலைவில் உணர்தல் சக்தியை வியந்து "திரிகால ஞானி இவன்" என்பதை உணர்ந்து கொண்டார்.

நாம் இவன் உடலுக்குத்தான் தந்தை ஆனால் சிவபெருமானோ இவன் உயிருக்கு தாய்-தந்தை, இனிநாம் இவனைப்பற்றி கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று தெளிவு பெற்றார். தாயின் கருவில் இருக்கும் குழந்தைக்கு முக்காலமும் தெரியும். இந்த பிறவியிலாவது நாம் ஞானம் பெற்று முக்தியை அடைந்துவிட வேண்டும். எனத்தீர்மானம் செய்யும் ஆனால் பூமியில் பிறந்த மறு கணத்திலேயே தைரோகிதம் எனும் ஜடமாயை காற்று முழுவதுமாக மறைத்துவிடும் அதன் பின்னர் ஒன்றும் தெரியாத சாதாரணக் குழந்தையாகத்தான் இருக்கும். இதை அப்படியே உமாபதி சிவாச்சாரியார் "அம்மாயக்கால் தான் மறைப்ப நல்ல அறிவு ஒழிந்து நன்குதீது - ஒல்லையுறா அக்காலம் தன்னில் பசியை அறிவித்து அழுத்து உக்காவி சோரத்தாய் உள்நடுங்கி” என்று கூறுகிறார்.


குருவின் அடிபணிந்து கூடுவ தல்லார்க்கு
அருள்வாய் நிற்கும் சிவம். (ஒளவைக் குறள்)


வீரசைவ தீட்சை பெறுதல்

ஸ்ரீ பொன்னம்பல சுவாமிகள் தன் தந்தையிடத்திலேயே சைவசமய தீட்சையைப் பெற்றார். பின்நாளில் மெய்கண்ட சந்தானம் திருக்கயிலாய பரம்பரை துறையூர், திருவண்ணாமலை, விருத்தாசலம், ஸ்ரீகுமாரதேவர் திருமடத்தின் வீரசைவானுபூதி பெற்று நிஷ்டை கூடி சிவமாம் தன்மை பெற்ற ஸ்ரீமத் முத்தையா சுவாமிகள் சென்னை மைலாப்பூர் தெற்கு மாடவீதியில் உள்ள ஸ்ரீ குமாரதேவர் திருமடத்தில் தங்கி அருட்சிவமாய் வீற்றிருந்து அருளினார்கள்.

அப்போது திருமயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் நடைபெறும்போது செம்பாக்கத்திருந்து வீரசைவர்கள் சென்று ஸ்ரீலஸ்ரீ குழந்தைவேல் சுவாமிகளின் மடத்தின் அருகில் வீரசைவ ஆசார மண்டபத்தில் தங்கு தடையில்லாமல் அங்கலிங்க பூஜைகள் செய்து முத்தையா சுவாமிகளின் வீரசைவானுபூதி விஷயத்தை கேட்டு தெளிவு பெற்று அருள் உபதேசம் பெறுவது வழக்கம். அதுபோல ஒரு ஆண்டு பங்குனி உத்திர பிரம்மோர்சவத்தின்போது சிற்றம்பல முதலியார் தன் மகனான பொன்னம்பலத்தை அழைத்துக் கொண்டு மயிலாப்பூர் விழாவைக் கண்டு சேவித்து மகிழ திருமடத்திலேயே தங்கினார்.

அப்போது ஒருநாள் முழுவதும் முத்தையா சுவாமிகள் நிஷ்டைகூடி நிர்மலமாய் வீற்றிருந்தருளினார். அவ்வப்போது முத்தையா "இவன் நம் அடிமை அதிதீவிரபக்குவன் ஆகையால் நீ சிவலிங்கதாரணமும் சிவதீட்சையும் செய்தருள்க!" என சிவபரம்பொருள் ஞானாதீதத்தில் உணர்த்தியதை சிரமேற்கொண்டு நிஷ்டை நீங்கி சிற்றம்பல முதலியாரையும் பொன்னம்பலத்தையும் அழைத்து இறைவன் திருவாணையை உரைத்து பொன்னம்பலத்திற்கு வீரசைவ தீட்சையும் செய்வித்து ஞாமார்க்கத்தை போதித்து அருள் செய்தார்.

அதன்பிறகு ஸ்ரீ பொன்னம்பல சுவாமிகள் தன் தந்தையிடத்திலேயே சைவசமய தீட்சையைப் பெற்றார். பின்நாளில் மெய்கண்ட சந்தானம் திருக்கயிலாய பரம்பரை துறையூர், திருவண்ணாமலை, விருத்தாசலம், ஸ்ரீகுமாரதேவர் திருமடத்தின் வீரசைவானுபூதி பெற்று நிஷ்டை கூடி சிவமாம் தன்மை பெற்ற ஸ்ரீமத் முத்தையா சுவாமிகள் சென்னை மைலாப்பூர் தெற்கு மாடவீதியில் உள்ள ஸ்ரீ குமாரதேவர் திருமடத்தில் தங்கி அருட்சிவமாய் வீற்றிருந்து அருளினார்கள்.

அப்போது திருமயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் நடைபெறும்போது செம்பாக்கத்திருந்து வீரசைவர்கள் சென்று ஸ்ரீலஸ்ரீ குழந்தைவேல் சுவாமிகளின் மடத்தின் அருகில் வீரசைவ ஆசார மண்டபத்தில் தங்கு தடையில்லாமல் அங்கலிங்க பூஜைகள் செய்து முத்தையா சுவாமிகளின் வீரசைவானுபூதி விஷயத்தை கேட்டு தெளிவு பெற்று அருள் உபதேசம் பெறுவது வழக்கம். அதுபோல ஒரு ஆண்டு பங்குனி உத்திர பிரம்மோர்சவத்தின்போது சிற்றம்பல முதலியார் தன் மகனான பொன்னம்பலத்தை அழைத்துக் கொண்டு மயிலாப்பூர் விழாவைக் கண்டு சேவித்து மகிழ திருமடத்திலேயே தங்கினார். அப்போது ஒருநாள் முழுவதும் முத்தையா சுவாமிகள் நிஷ்டைகூடி நிர்மலமாய் வீற்றிருந்தருளினார்.

அவ்வப்போது முத்தையா "இவன் நம் அடிமை அதிதீவிரபக்குவன் ஆகையால் நீ சிவலிங்கதாரணமும் சிவதீட்சையும் செய்தருள்க!" என சிவபரம்பொருள் ஞானாதீதத்தில் உணர்த்தியதை சிரமேற்கொண்டு நிஷ்டை நீங்கி சிற்றம்பல முதலியாரையும் பொன்னம்பலத்தையும் அழைத்து இறைவன் திருவாணையை உரைத்து பொன்னம்பலத்திற்கு வீரசைவ தீட்சையும் செய்வித்து ஞாமார்க்கத்தை போதித்து அருள் செய்தார். 

அதன்பிறகு பொன்னம்பல சுவாமிகள் அவ்வப்போது மயிலாப்பூர் சென்று சுவாமிகள் மூலம் சைவ ஆகமமாகிய சித்தாந்த சாத்திரத்தையும் பேரூர் சாந்தலிங்க சாமிகள் மற்றும் அவர்தம் சீடராகிய விருத்தாசலம் ஸ்ரீ குமாரதேவர் அருளிய நூல்களையும் போதித்து ஒழிவில் ஒடுக்கம், சின்மய தீபிகை போன்ற நூல்களையும் ஞானத்தையும் போதித்து அருளினார்கள். இறுதியாக மாணிக்கவாசக பெருமான் திருவாய் மலர்ந்தருளி திருஞான தாழிசையை போதித்து, தான் சாமுசித்தராய் இருப்பது அறிந்தும் குரு அறிவிக்க அறிந்த பொன்னம்பல சுவாமிகளை ஞானத்தின் உச்சியில் வீற்றிருக்கச் செய்தார் ஸ்ரீமத் முத்தையா சுவாமிகள்.

ஸ்ரீமத் முத்தையா சுவாமிகள் திருக்கைலாய பரம்பரை துறையூர் திருமுதுகுன்ற வீரசைவ ஆச்சாரிய பரம்பரையில் 20-ஆம் பட்டமாக வீற்றிருந்த சொக்கலிங்க, சிவப்பிரகாச சுவாமிகளுக்கு சிறுவயதில் தீட்சை செய்வித்தார் என்பது ஸ்ரீ குமாரதேவர் மடத்தின் வரலாற்று சான்று. இவரது காலம் கி.பி.1800-ம் நூற்றாண்டின் ஆரம்பம், ஸ்ரீ முத்தையா சுவாமிகளின் சிவசாயுச்சிய சமாதிகாலம் என அறிய முடிகிறது) ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் சிவஞானம் என்பது கடையில் வாங்கும் கடைச்சரக்கு அன்று என்பதை தெளிவாய் உணர்ந்து உழைத்தாலன்றி சேராத பெருஞ்செல்வம் சிவஞானம் என்பதை தெளிந்து



                                 "கற்க கசடற கற்பவை கற்றபின்                                                           நிற்க அதற்கு தக"


என்ற திருக்குறளுக்கு ஏற்ப நிஷ்டயானுபூதி செல்வமாய் சகஸ்ராரசித்தி அடைந்து அஷ்டமாசித்துக்களும் கைவரப்பெற்றார். தகராலய ரகசியத்தை அறிந்து சிவயோகத்திலேயே திளைத்தார். தானே சிவமாம் தன்மை பெற்றார். ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகளின் திருவுருவப் படத்தில் வீரசைவ லிங்காயதம் இல்லாமல் ருத்திராட்ச மாலையோடு காணப்படுகிறது. இது பின்நாளில் ஓவியமாக வரையப்பட்டது. அவர் கழுத்தில் அணிந்திருந்த தெச்சை தற்போதும் திரு.நடனசேகர் அவர்கள் தனது ஆத்மார்த்த பூசையில் வைத்துள்ளார் என்பது இதற்குச் சான்று.


                          "பேசும் எழுத்தூரில் பேசா எழுத்துடன்
                           ஆசான் பர நந்தியாம்"
                                                                                                                                                                                                                  (ஒளவையார்)


சுவாமிகள் நெசவுத் தொழில் மேற்கொள்ளல்

சிற்றம்பல முதலியார் விவசாயத் தொழிலை மேற்பார்வையிட்டும் உயிருக்கு தீங்கற்ற நெசவுத் தொழிலை தானே முன்னின்று நடத்தியும் வந்தார். ஞானநிலை அடைந்தவர் தொழிலை மேற்கொள்வது தவறு என்று நினைக்கும் அக்கால வழக்கிற்குவேறாய் வாழ்ந்தவர்கள் கபீர்தாஸர் என்ற ஞானி நெசவுத் தொழிலை மேற்கொண்டு ஞான மோனத்திலே இருந்தார். மீராபாயின் குரு ராய்தாஸ் சக்கிலி தொழிலையும், துக்காராம் விவசாய தொழிலையும் செய்து வாழ்ந்து வந்தனர். பாபாஜியின் சீடர் லகரிமகாசயர் போஸ்ட்மேன் தொழிலை செய்து ஞான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அதுபோல நம் பொன்னம்பல சுவாமிகள் தந்தையாரின் நெசவுத் தொழிலை தானும் மேற்கொண்டு வந்தார். தான் மட்டும் வேலை செய்வதன்றி தன் நெசவாலையில் ஊர்மக்கள் சிலரையும் சேர்த்து நியமத்தோடு நடத்தி பொருளீட்டி ஞானவாழ்க்கை மேற்கொண்டு வந்தார்.

ஞானம் அடைய உடல்தேவை ஊனை கொண்டுதான் உயிரை (ஆன்மாவை) அறிய முடியும். தன்னை அறிந்தால்தான் தலைவனை (சிவனை) அறிய முடியும். உள்ளம்பெரும் கோயில், ஊன் உடம்பு ஆலயம், ஜீவன், சிவலிங்கம் என்ற அற்புதத்தை உணர உடல் தேவை, உடலுக்கு உணவு தேவை, உணவுக்கு பிற உயிரை அழிக்கா நெசவுத் தொழிலை தான் செய்து பொருளீட்டி, தானும், தன்னை நம்பினாரையும், தன்னை அண்டினாரையும் விருந்தோம்பிட, ஞானியானாலும் உழைத்து உண் என,உலகத்திற்கு வாழ்ந்து காட்டினார் சுவாமிகள்.


பொன்னம்பல சுவாமிகளின் திருமணம்

பொன்னம்பல சுவாமிகள் அவ்வப்போது நிஷ்டையில் பல மணி நேரங்கள் தொடர் தவத்தை கண்டு தந்தையர் மகிழ்ந்த போதிலும் தாய் சொக்கம்மாள் மனதில் மகன் துறவு கொண்டு விடுவானோ என்ற அச்சம் இருந்தது. அதனால் தன் கணவனிடம் மகனுக்கு திருமணம் செய்விக்க வேண்டும் என வருந்தி கொண்டே இருந்தார்.

இருவரும் பொன்னம்பல சுவாமிகளிடம் திருமணம் விஷயம் பற்றி கூற சுவாமிகளோ தனக்கு துறவறமே சிறந்தது தாங்கள் திருமணம் பற்றி பேச வேண்டாம் எனக்கூறி விட்டார். அப்போது சொக்கம்மாளின் யோசனையின் பேரில் மைலாப்பூர் சென்று ஸ்ரீ முத்தையா சுவாமிகளிடம் சுவாமியின் திருமணம் பற்றி கூறினர்.

அப்போது ஸ்ரீ முத்தையா சுவாமிகள் சிறிது மௌனமாய் கண்மூடி தியானித்து பொன்னம்பல சுவாமிகளிடம் இல்லறத்திலிருந்து துறவு கொள்வதே சிறந்தது மேலும் சுந்தரர் அவருடைய இருபது வயதிற்குள் இருமனைவியாருடன் வாழ்ந்து சிவபேறு பெற்றதை உலகமறியும்.

திருமூலர் தன் திருமூலத்தில்
யோகமும் போகமும் யோகியர்க் காருமால்
யோகஞ்சிவ ரூபம் உற்றிடும் உள்ளத்தோர்
போகம் புவியிற் புருடார்த்த சித்தியே
தாகும் இரண்டும் அழியாத யோகிக்கே.
என்று நிறுவி இருக்கிறார்.

முற்றும் துறந்த பட்டினத்தாரும் திருவிடை மருதூர் மும்மணிக் கோவையிலும் இல்லறத்திலிருந்தே துறவு கொள்வதை வலியுறுத்தி இருக்கிறார்கள். அவர்கள் வழியில் நீயும் ஒருவனாக ஆவாய்! என்று ஸ்ரீ முத்தையா சுவாமிகள் கூறினார்.

குருவார்த்தை மீறுவது பஞ்சமாபாதகத்திற்கு சமம் அதனால் நான் திருமணம் செய்து கொள்கிறேன். ஆனால் எனக்கு ஒரேயொரு வரம் வேண்டும். தருவதாக சொன்னால் திருமணத்திற்கு சம்மதிப்பதாக உரைத்தார்.

அதன்படி திருமணமாகி முதல் குழந்தை பிறந்த உடனே யான் இல்லறத்திலிருந்து கொண்டே துறவறம் மேற்கொள்வேன். இதற்கு மணமகள் உட்பட யாரும் தடைவிதிக்கக் கூடாது எனக்கூறி திருமணத்திற்கு சம்மதித்தார்.

சென்னை சைதாப்பேட்டையில் வளர்ந்த அமிர்தம்மாள் என்ற நங்கையே சுவாமிகளுக்கு பொருத்தமானவள் என்று உணர்ந்து அவர்களையே திருமணம் செய்து வைத்தனர்.

இரண்டாண்டுகளுக்கு பிறகு ஒரு ஆண்மகவும் பிறந்தது. அந்த குழந்தைக்கு சிவலிங்கம் என்ற நாமகரணம் செய்து வைத்தனர். சுவாமிகளும் அதுநாள் முதல் இல்லறத்தமிலிருந்தே துறவு வாழ்க்கை கைகொண்டு தன் குடும்பத்தையும், தன் தந்தையின் நெசவுத் தொழிலையும் மேற்கொண்டு பற்றற்ற நிலையில் வாழ்ந்து வந்தார்.

 


தந்தைக்கு சமாதி செய்தல்

தன் மகன் பொன்னம்பல சுவாமிகளிடம் சிவயோக ரகசியம் கேட்டுணர்ந்து, தவவாழ்வை மேற்கொண்டு தன் மகனையே குருவாக ஏற்று வாழ்ந்தார்.

அப்போது ஒரு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபூசை முடித்து எழுந்து வந்து அமர்ந்தபோது பிராணன் உடலை விட்டு நீங்கி சிவகதி பெற்றார். அப்போது தமக்கு ஊரின் வெளிப்புறத்திலே வடமேற்கு திசையில் சமாதி அமைக்க வேண்டும் என்று கூறினார்.

சுவாமிகளும் அவர் கூறிய இடத்தில் அவருக்கு வேண்டிய இறுதி கடனை நிறைவேற்றி சமாதி அமைத்து வணங்கினார்.

தனது ஞானவாழ்க்கைக்கு மிகவும் உறுதுணையாக இருந்த தந்தையின் அன்பை கருதி மனம் வியந்தார். அதோடு இல்லாமல் தான் ஞானம் அடைய இந்த ஊன் உடலை தந்த நன்றி கடனை இப்பிறவியிலே தீர்க்க தான் தினந்தோறும் பூசை செய்து வணங்கி வந்தார் சுவாமிகள்.


               உடம்பினை பெற்ற பயனாவ தெல்லாம்
               உடம்பினுள் உத்தமனைக் காண.

                                                                            (ஒளவை குறள்)


ஸ்ரீ மாதா அன்னபூரணியின் இன்னருள்

ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் பொருள் பற்று அற்றவர். தானே நெசவு செய்து பொருளீட்டி, அன்றாட வாழ்க்கை மேற்கொள்வார். இதற்கிடையே சிறிய மழையையும் தாங்காத சிதலமடைந்த வீடு இதை இடித்து புதிய வீடு கட்ட வேண்டும் என்று மேற்கொள்வார். இதற்கிடையே சிறிய மழையையும் தாங்காத சுவாமிகளின் மனைவிக்கு விருப்பம், எத்தனை முறை சுவாமிகளிடம் சொல்லியும் சுவாமிகள் பதிலேதும் சொல்லாமல் மௌனமாய் இருந்தார்.

இதனால் தன் தந்தையிடம் தெரிவிக்க தன் பெண் ஓட்டை ஒழுகல் வீட்டில் குடும்பம் பண்ணக்கூடாது. என்று எண்ணி தன் மாப்பிள்ளையாகிய சுவாமிகளிடம் வீடு சிதலமாய் இருப்பதால் தற்போதுள்ள வீட்டை இடித்துவிட்டு புதிய வீட்டை கட்டி கொள்ளலாமே என தெரிவிக்க சுவாமிகள் தன்னிடம் உள்ள பணத்தில் வீடு கட்டுவது மிகவும் கடினம். பணப் பற்றாக்குறை ஏற்பட்டு பாதியில் நின்று விடும் ஆகையால் இப்போது வீடு கட்டுவது பற்றி எந்த எண்ணமும் இல்லை என்று கூற, அதற்கு சுவாமிகளின் மாமனார் கையில் இருக்கும் ரூபாயை வைத்து வீட்டு வேலையை ஆரம்பிக்க சொல்ல அதைகேட்டு சுவாமிகளின் மனைவியும் வற்புறுத்தி சுவாமிகளை புதிய வீடு கட்ட சம்மதிக்க வைத்தனர்.

எல்லாம் சிவன் செயல் என்று எண்ணி தன் பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்டிக்கொண்டே வரும்போது பணம் இல்லாமல் வேலை நிற்க, அப்போது சுவாமிகளின் மாமனார் சொன்னபடி தானே முன்வந்து 250 ரூபாய் (அந்த காலத்தில் இலட்சம் ரூபாய்க்கு சமம்) கொடுக்க சுவாமிகள் அதை வாங்க மறுத்தார் உங்கள் பணத்தை வைத்து நான் வீடு கட்டி கொள்வது தவறு பணம் வேண்டாம் என்று சுவாமிகள் கூற சுவாமிகளின் மாமனார் சரி நீங்கள் இந்த பணத்தை கடனாக கொண்டு வீட்டை கட்டிக் கொள்ளுங்கள். என்று தன்மகளிடம் கொடுக்க வீடு கட்டி நல்ல முறையில் கிரகபிரவேசம் செய்வித்தார்.

சுவாமிகள் சிவயோகத்தில் திளைத்து நின்றதால் உடல் மென்மை தன்மை அடைந்து அதனால் உடல் உழைப்பு மிகக் குறைந்தது. தினம் அரைநாள் நெசவும், அரைநாள் தவமும் செய்து வந்தார். இதை தன் மகளின் மூலம் அறிந்து கொண்ட மாமனாருக்கு கோபம் மூண்டது. உடனே அவர் சுவாமிகளின் வீட்டிற்கே வந்து வீடு கட்டிய 250 ரூபாய் கடனிருக்க தவம் என்ன வேண்டி கிடக்குது. "சாமி என்ன வடை பாயாசத்தோடு சோறு போடுமா" என்று சுவாமிகளை மிகவும் கடிந்து கொண்டார்.

சுவாமிகள் இதைக்கேட்டதும் மனம் கஷ்டப்பட்டாலும் மௌனமாய் பூசை அறைக்குள் சென்று கதவை தாள்போட்டு தவத்தில் ஆழ்ந்தார். வெளியே வராமலா போவார் வரட்டும் பேசி கொள்ளலாம் என்று மாமனார் மற்றும் உள்ள உறவினர்கள் எல்லாம் அமர்ந்திருக்க சுவாமிகள் மாதா அன்னபூரணி அம்மையை பிராத்திக்க (அறுசுவை உணவோடு வடை பாயாசத்தோடு பெரிய தலை வாழை இலையில் சித்திர அன்னங்களோடு அன்னபூரணி மாதா கொடுக்க சில நிமிடங்களில் வீடு முழுவதும் மூக்கை துளைக்கும் வாசனை வீச அறையை திறந்து வடை பாயாசத்தோடு அன்னத்தை சுற்றி இருந்த உறவினருக்கும் தன் மாமனாருக்கும் காண்பித்து "சாமியென்ன வடை பாயாசத்தோடு சோறு போடுமான்னு கேட்டிங்களே இப்ப என்ன சொல்கிறீர்கள்" என்று கூறினார். அனைவரும் பயம் கலந்த ஆச்சரியத்தில் மூழ்கினார்கள்.

அன்னபூரணியின் அருள் இறைவனை உள் அன்போடு தியானித்தால் உலகில் அடைய முடியாததில்லை என்று கூறி, விரைவில் உங்கள் கடனை தறிநெய்து அடைத்து விடுவேன் என சுவாமிகள் கூறிட தன் தவறுக்கு வருந்தி மனம் திருந்தி சென்றனர்.


தந்தை சமாதியருகே தவக்குடில் அமைத்தல்

சுவாமிகள் ஒருநாள் நள்ளிரவில் உள்ளிருளைத் துரத்தி கருயிருளை விலக்கி ஆன்ம ஒளியைப் பரப்பி ஓர் ஒளிப்பிழம்பாக இருந்தார். அப்போது உறக்கத்தில் இருந்து விழித்த சுவாமிகளின் மனைவி அறையின் உள்ளே பெரிய ஒளி வெள்ளம் நிரம்பி கதவின் சாவி துவாரம் வழியே ஒரு ஒளிகீற்று விழுவதை கண்டு கதவை திறந்தார். உள்ளே சுவாமிகள் நிஷ்டையில் ஞானயொளி பரப்பி தேஜா மண்டலமாக நெருப்பு பிழம்பாக மாறியதை கண்டதும் கொள்ளிவாய் பிசாசு போலும் என்று அஞ்சி அங்கேயே மூச்சையானார். சுவாமிகள் தன் மனைவி அஞ்சிய செயலை உணர்ந்து நிஷ்டை நீங்கி மனைவியை எழுப்பி தேற்றி உறங்கச் செய்தார். விடிந்ததும் நம்மால் ஒருவர் ஏன் வீண் அச்சம் அடைந்து கலங்க வேண்டும். என்று நினைத்து வேறிடத்திற்கு சென்று விடுவோம் என்று எண்ணியவராய் அம்மனையை விட்டு நீங்கி சில நாட்களிலேயே தன் தந்தை சிற்றம்பல முதலியார் சமாதி அருகே சிறிய தவக்குடில் அமைத்து நிஷ்டை மேற்கொண்டார்.

அவர் நிஷ்டை செய்யும் இடுகாட்டினை உறவினர் அனைவரும் அடைந்து சுவாமி! நாங்கள் தங்கட்குச் செய்த தவறு யாது? தாங்கள் ஏன் வீட்டை விட்டு இடுகாட்டில் வந்து அமர்ந்து விட்டீர்கள்? என்று வருந்தி அழுது தொழுது கேட்டும் பலனின்றி நின்று கொண்டிருந்தனர்.

நீவிர் உள்ளம் வருந்தாதீர்! எனக்கு எல்லா இடமும் உரிமை உடையது. அதனினும் இவ்விடம் ருத்திர பூமியாம். இவ்விடத்தில் நிஷ்டை மேற்கொண்டால் மிகுந்த நற்பலன் கிடைக்கும். ஆகையால் அவ்வபோது வீடு வந்து தங்குவோம் என்று உறுதி அளித்ததின் பேரில் சுவாமிகளை எதிர்கேள்வி கேட்க பயந்து கொண்டு வீடு திரும்பினர்.


சிவபரத்துவத்தை நிலைநாட்டல்

அந்நாளில் செம்பாக்கத்தை அடுத்த அச்சரபாக்கத்தில் அக்ரஹாரத்தில் வீர வைணவ பிராமணர்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். சுயம் ஆச்சார்ய பரம்பரையில் இருந்தே ஒரு பிராமண பெரியவர் அப்பகுதி மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் துளசி தீர்த்தம் கொடுத்து அப்பிரச்சனைகளை தீர்பார்.

ஆயினும் அவருக்கு சிறிது செவிட்டுத்தனமும், முரட்டுத்தனமும் உண்டு. அதனால் மக்கள் அப்பிராமணரிடம் செல்ல தயங்கி செம்பாக்கம் பொன்னம்பல சுவாமிகளிடம் வருவது உண்டு. அதனால் ஆத்திரம் அடைந்த அந்த செவிட்டு பிராமணர் மனதில் சைவ சமய பகையாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

இதனால் செம்பாக்கத்தில் உள்ள வீர சைவர்களை கண்ணால் கண்டால் தகாத வார்த்தையால் சிவனையும், சைவத்தையும் இகழ்ந்து காரி உமிழ்வார். அதுகண்ட வீர சைவர்கள் பொன்னம்பல சுவாமிகளிடம் புகார் கொடுக்க சுவாமிகளும் அந்த வீர வைணவரை அழைத்து அறிவுரை கூறியும் பயனில்லை. அதனால் மேலும் அந்த வைணவர் ஆத்திரம் அடைந்து ஆஞ்சநேய சுவாமிகளை மாந்தீரிகத்தால் பொன்னம்பல சுவாமிகள் நிஷ்டையில் இருக்கும்போது ஏவல் செய்ய, ஆஞ்சநேய சுவாமிகளும் பொன்னம்பல சுவாமிகள் முன் பராக்கிரமமாக நின்று கர்ஜித்தார்.

சுவாமிகள் நிஷ்டை நீங்கி நடந்த எல்லாவற்றையும் ஞானத்தால் உணர்ந்து ஆஞ்சநேயரை இதோடு நீர் இவ்விடம் வரக்கூடாது. சிவத்தில் சைவத்தில் பரத்துவம் இல்லையானால் வைஷ்ணவர்களை அவ்வூரிலேயே வாழ' வை! சைவத்தில் சிவத்தில் பரத்துவம் உண்டெனில் வீரவைணவ பிராமணர்களை ஊரை விட்டே துரத்து எனக்கூற அப்போது முதல் சிறிது சிறிதாக வீர வைணவப்பிராமண குடும்பம் வெளியேறி இன்று ஒருவரும் இல்லை என்பது கண்கூடு.

அதோடு பல வருடங்களுக்கு பிறகு ஸ்ரீ பொன்னம்பல சுவாமிகள் மடத்தருகில் ஆஞ்சநேயருக்கு கோயில் எழுப்ப முயன்றும் முடியாமல் இன்றளவும் பாழடைந்து உள்ளது என்பது நாம் அறிந்ததே!


"ஏக இறைவனே எல்லாம் புரிகிறார்
எல்லாம் அவன் செயல்"
"அவனன்றி ஓர் அணுவும் அசையாது"


பிடாரி செல்லியம்மன் மூக்கை உடைத்தது

முதலாம் குலோத்துங்க சோழன் காலம் முதற்கொண்டு திருப்போரூர் கந்தசாமி கோயில் பிரம்மோற்சவ விழாவின் முதல்நாள் விழாவை பரகேசரிநல்லூர் என்ற செம்பாக்கம் கிராமத்தார்கள் செய்விக்க வேண்டும் என திருப்போரூர் கோயில் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. அவ்வழியே இவ்விழாவை காலங்காலமாக செம்பாக்கம் கிராமத்தார்கள் மூலமே செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஸ்ரீ பொன்னம்பல சுவாமிகள் காலத்தில் ஒருமுறை மாசிமாதம் வளர்பிறையில் வரும் பிரம்மோற்சவத்தின் முதல்நாள் துவஜஆரோகணம் எனப்படும் கொடியேற்று விழாவை செய்விக்க சைவ செங்குந்த உறவின்முறை தலைவர் என்ற முறையில் சுவாமிகள் தலைமையில் முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தது. அதுசமயம் ஏரி, குளம், குட்டையெல்லாம் நீர்வளத்தோடு இருந்தது ஆகையால் நெற்பயிர் விளைவித்ததற்கு நன்றி தெரிவிக்காமல் செல்லுவதை கண்டதும் செல்லியம்மனுக்கு கோபம் மூண்டது. பயிர் வைப்பதற்கு முன்னால் முளை நெல்லை மூட்டை கட்டி என்னிடம் வேண்டிக்கொண்டு அகழி குளத்திலே முளை கட்டுவார்கள். காலமெல்லாம் நடுநிசியில் ஊரைக் காத்து மழை பொழிவித்து, மண்வளம் பெருக்கி, நெல்வளம் குவித்து, குடிவளம் காத்து, மக்கள் நோய்களைத் தீர்த்து காப்பாற்றும் என்னைப் பற்றிய நினைவு யாருக்கும் வருவதில்லை. தலையாரிக்கு படிநெல், நாவிதர்க்கு படிநெல், வண்ணானுக்கு படிநெல் வழங்கப்பட்டது.

ஆனால் எனக்கு ஒருபிடி நெல்கூட வழங்கவில்லை எனக் கொதித்து எழுந்ததால் அவ்வருடம் நெல் அறுவடை செய்த கூலி தொழிலாளிகள் மற்றும் நிலத்துக்கு சொந்தகாரர் என ஊரே நோய்வாய் பட்டனர். சிலருக்கு கை, கால் வீங்கியது, சிலருக்கு வயிறு உப்பி பெரிதாகியது, சிலருக்கு விஷக்காய்ச்சல், சிலருக்கு கண் சொருகி மேல்நோக்கி பார்வையும், சொரனை அற்ற உடலும் இருந்தது. சிலருக்கு வயிற்றில் கால் உதறல் என ரோகங்கள். கால்நடைகள் இரத்தம் வந்தது. ஊர் தாங்கமுடியாத வலி, சிலருக்கு கை, வைத்தியத்திற்கு அடங்காத நானாவித எல்லாம் பால் கரந்தால் பாலுக்கு பதில் முழுவதும் இக்கலவரம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது. அதுவும் நெல் அறுவடை செய்தவர்கள் வீட்டில் மட்டும் இந்நிலை இருப்பதை அறிந்து சுவாமிகளிடத்தில் எல்லோரும் முறையிட்டு ஊருக்கு என்ன? கேடு வருமோ? தெரியவில்லை என பயந்து முறையிட்டனர்.

சுவாமிகள் சிறிது நேரம் புறக்கண்ணை மூடி அகக் கண்ணை திறந்து மௌனியாய் இருந்தார். இது கிராம தேவதை பிடாரி செல்லியம்மனின் அளவுக்கு மீறிய கோபத்தால் விளைந்த விபரீதம் என்பதை உணர்ந்து தக்க தருணம் வரும்வரை காத்திருப்போம் என்று எண்ணியவராய் வைத்தியத்தால் தீராத நானாவித வியாதிகளுக்கு ஒரே மருந்தாக ஊரில் உள்ள அனைவருக்கும் விபூதியை கொடுத்து நோய் வாய்ப்பட்டவர்களின் உடலில் பூசி உள்ளுக்கு சாப்பிட சில நாட்களில் நோய் நீங்கி நலம் அடைந்தனர். கால்நடைகளும் பால் சுரந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அனைவரும் சுவாமிகளின் அருளாற்றலை வியந்து நன்றி தெரிவித்தனர். அவ்வருட அறுவடை அமோக விளைச்சலினால் அனைவரும் கொடியேற்று விழாவிற்கான தலைக்கட்டு வரியை மகிழ்வுடன் கட்டினர்.

சில வாரங்கழித்து திருப்போரூர் கந்தசாமி கோயில் மாசி மாத பிரம்மோற்சவ விழாவிற்கு முதல்நாள் கொடியேற்று விழாவிற்கு கொடிகயிறு திரிக்க தலைக்கட்டுக்கு ஒருவராய் எல்லா குடும்பத்தினரும் ஒன்றுகூடி கொடி கயிறு திரித்தனர். பின்னர் கொடியேற்று விழாவிற்கான முன்னேற்பாடுகளை செய்வித்தனர்.

அதுசமயம் கொடியேற்று விழா அன்று அதிகாலை 4-00 மணிக்கெல்லாம் ஒரு பெரிய பிரம்பு தட்டில் கொடிகயிற்றை வைத்து மலர்தூவி தூபம், தீபம், நைவேத்தியம் காண்பித்து பூஜித்து வெள்ளை ஆடையில் மறைத்து வருடா வருடம் தலைகட்டிற்கு ஒருவர் என முறைப்படுத்தி அவ்வருட தலைக்கட்டின் நபருக்கு அறிவித்து மடியாய் இருந்து விரதம் மேற்கொண்டு இருக்க சொல்லி அவருக்கு தம்கையால் விபூதி பூசி மாலை அணிவித்து சிரசில் கொடிகயிற்றை ஏற்றி வைத்து பிரம்மதாளம் கொட்ட, திருச்சின்னம் முழங்க, சங்கம் முழங்க, தீவட்டி ஏந்தி கிராமத்தை வலமாக வந்து ஏரிக்கரை பிடாரி அம்மன் கோயில் வழியாய் ஸ்ரீ பொன்னம்பல சுவாமிகள் முன்னே செல்ல பின்னே மக்கள் பின்தொடர்ந்து நடந்தபோது ஆர்ப்பரிக்கும் சப்தமாய் எல்லோரும் அலரும் படியாய் கொக்கரித்து ஒசன் என்ற செல்லியம்மன் பூசாரி மீது அருள் வந்து ஆடி "என்னை மதிக்காமல் வணங்காமல் என் சன்னதியை தாண்டி செல்கிறீர்கள், அதனால் ஊர் எல்லையை தாண்டும்போதே கொடிக்கயிற்றை சுமந்து செல்பவன் மரணம் அடைவான்" எனக்கூறி ஆர்பரிக்க மக்கள் பயந்தனர். அதை கேட்ட சுவாமிகள் மருளாடும் ஓசனைப் பார்த்து விபூதி தூவி மலையேற்றி செல்லியம்மனை சுற்றி விபூதியால் கட்டி வைத்து விழா முடிந்து திரும்பும்போது கட்டை அவிழ்ப்பேன் எனக்கூறி பயணத்தை தொடர்ந்தார்கள் சுவாமிகளும் மற்றுமுள்ள ஊர்மக்களும்.

திருப்போரூர் கந்தசாமி கோயில் கொடியேற்று விழாவை ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் தலைமையில் கொடியேற்றி, அந்நாள் முழுவதும் விழாவை முடித்து மறுநாள் ஏரிக்கரை வழியாய் வரும்போது பிடாரி செல்லியம்மனின் கட்டை அவிழ்த்து ஊரை காக்க வேண்டிய நீயே உன்னை வணங்காமல் சென்றால் அவர்களின் உயிரை எடுக்கும் அளவிற்கு உனக்கு க்கின்மேல் கோபம் வருகிறதா? "வேலியே பயிரை மேய்வது தவறு" உன்னை வணங்காமல் சென்ற எவ்வளவு பேருக்கு நீ பொல்லாத வியாதியை கொடுத்தாய், எவ்வளவு பசுக்களுக்கு பாலுக்கு பதில் இரத்தம் வந்தது, இதற்கு எல்லாம் நீதான் காரணம் என்றால் ஊர்மக்கள் உன்னை விட்டு விலகி விடுவார்கள். உன்னை ஊரை காக்கும் தெய்வமாக அல்லாமல் ஊரை அழிக்கும் பேயாக என்னி உன்னை நாடி வரமாட்டார்கள். ஆகையால் நீ கோபம் அற்றவள் என்பதை ஊர்மக்களும் இந்த உலகம் உள்ள மட்டும் உணர உன் மூக்கை பின்னம் செய்கிறேன் என்று சொல்லி கூர்மையான மூக்கை உடைத்தார் சுவாமிகள். உன்னை வணங்காதவரை விட்டு உன்னை சரண் அடைந்து வரம் கேட்டவர்க்கு கேட்டதை கொடுக்கும் சொல்லின் செல்வியாய் செல்லியம்மனாய் இந்த ஊரை காத்து ரட்சிப்பது உன்கடன் என சுவாமிகள் கூறிட.

என்ஊர் மக்கள் என்னை மதிக்கவில்லையே என்ற கோபத்தினால் தவறாக நடந்து கொண்டேன். இனி என்னை வணங்கினோரை அண்டி காப்பேன். விலகினாரை விலகிநிற்பேன் என்று சொல்லி உறுதி செய்தாள் செல்லியம்மன். பிறகு ஸ்ரீ பொன்னம்பல சுவாமிகள் வீட்டிற்கு சென்று திண்ணையில் அமர்ந்தது தான் தாமதம், உடனே சல்லியம்மன் சுவாமிகளை பின் தொடர்ந்து அவரின் வீட்டு வாயிற்படி அருகில் நின்று கொண்டு நான் மிகவும் பசியாய் இருக்கிறேன், இத்தனைநாள் கோபத்தினால் அன்ன ஆகாரம் உண்ணாமல் தவிர்த்தேன். இப்போது மனசாந்தி அடைந்ததால் பசி தாங்க முடியவில்லை என்று கூற, சுவாமிகள் தன் வீட்டிலேயே செல்லியம்மனுக்கு அன்னப்பாவாடை என்ற பேருண்டி படைத்து ஆராதனை செய்து வழியனுப்பினார் சுவாமிகள்.



                    "குருவின் அடிபணிந்து கூடுவ தல்லார்க்கு
                      அருவாய் நிற்கும் சிவம்'


இறந்தவனைப்போல் நடித்தவனை இறக்க வைத்தது

க்ஷய ரோகத்தில் இறக்கும் தருவாயில் கிடந்தவனை எழுப்பியதை அறிந்து, ஊனமனம் கொண்ட ஈனர்கள் சிலர் ஒன்று சேர்ந்து பொன்னம்பல சுவாமிகளின் அருளனுபவத்தை ஏற்றுக்கொள்ள மனமில்லாது அவரின் மீது ஏதேனும் களங்கம் சுமத்த வேண்டி தன்னில் ஒருவனை இறந்தவனைப்போல மூச்சை அடக்கி நடிக்க வைத்து அவனை வேறொருவன் தோளின்மீது சுமந்து வந்து பொன்னம்பல சுவாமிகளின் வீட்டு வாயிலில் கிடத்தி காப்பாற்றும்படி கதறி அழுது பாசாங்கு செய்தனர். அவர்கள் மீது மனமிறங்கி ஆறுதல் சொல்வதை போல் சுவாமிகள் திருநீற்றை அள்ளி எடுத்து இறந்தவனைப் போல் பாசாங்கு செய்யும் தீயவன்மீது தூவி இவனுக்கு இனிவரும் காலம் இறந்தகாலம். இவன் இனி பிரயோசனம் அற்றவன் இறந்து விட்டான் என்று கூறினார்!

திடீரென்று அழுவது போல பாசாங்கு செய்தவர்கள் ஆணவம் தலைக்கேறி சிரித்துக் கொண்டே அவனை எழுப்ப முயற்சி செய்தனர். அவன் கண்விழித்த பாடில்லை. அதில் ஒருவன் நாடி பிடித்து பார்த்தான். வேறொருவன் இதயத்தின்மீது தன் காதை வைத்து இதயத்துடிப்பை அறிய முற்பட்டான். இதனால் கலக்கம் அடைந்த ஈனர்கள் சுவாமிகளின் காலில் விழுந்து கதறி அழுது அறியாமையால் உங்கள்மீது பொறாமை கொண்டு இவ்வாறு செய்து விட்டோம். என மன்னிப்பு கேட்க, பொன்னம்பல சுவாமிகள் திருநீற்றை அள்ளித்தூவி "பிழைத்து போ" எனக்கூற இறந்தவன் அலறி எழுந்தான். இவர்கள் பின்நாளில் சுவாமிகளை தூஷித்த பாவத்தினால் தீரா வியாதியால் துன்பமுற்று அழிந்ததாக சொல்லப்படுகிறது.


இறக்கும் தருவாயில் இருந்தவனை எழுப்பியது

ஒருநாள் பொன்னம்பல சுவாமிகள் வடக்கு மாடவீதியில் பாவு போட்டு கொண்டிருந்தார். அப்போது ஒருவன் படுத்திருக்க அனைவரும் அவனை தூக்கிக்கொண்டு அழுது கொண்டே ஓடி வந்தனர். ஸ்ரீ பொன்னம்பல சுவாமிகளின் காலில் விழுந்து கதறி அழுதனர். பெண்ணொருத்தி என் கணவரை காப்பாற்ற வேண்டும் நீங்களே கதி! எலும்புருக்கி என்னும் க்ஷய நோய் உண்டாகி எந்த மருந்துக்கும் நோய் தீரவில்லை. நோய் முற்றி இறக்கும் தருவாயில் இருப்பதாகவும், நாடி ஒடுங்கி விட்டது என்றும் மருத்துவர்கள் கூறி விட்டனர் என்று சுவாமிகளின் காலில் விழுந்து அழுதாள். தெரு ஜனம் அனைவரும் கூடிவிட்டனர். முன்வினை பயன் என உணர்த்தி சுவாமிகள் தன் கையில் விபூதியை அள்ளி நோயாளியின் நெற்றியில் பூசி தன் மேலாடை துண்டினால் முகத்தை மூடி நிமிடத்தில் திறந்திட, தூங்கியவன் கண் விழித்ததுபோல தெளிவடைந்தான். சுவாச கதி உண்டானது நாளை சூரிய உதயத்திற்குள் பூரண நலம் அடைவான் என்று ஆசி கூறிட நோயுற்றவனே எழுந்து சுவாமிகளை வணங்கிட அனைவரும் வியந்து கைகூப்பினார்கள். சுவாமிகளின் அருள்நிலையால் இறக்கும் தருவாயில் இருந்து எழுப்பிய இவ்வதிசயம் அப்போது ஊரில் பரவலாக பேசப்பட்டு வந்தது.


வாராகி பக்தனை முருகபக்தனாக மாற்றியது

செம்பாக்கம் கிராமத்தில் நடுத்தெருவில் கோட்டை கன்னியம்மாள் என்ற மூதாட்டி இருந்தார்கள். அவருடைய மூதாதையருள் ஒருவர் மாந்திரீக மந்திர சாஸ்திரங்களை கற்பதில் பெரும் ஆர்வம் உள்ளவர்.மாந்திரீக சாஸ்திரம் கற்பவர்கள் பெரும்பாலும் மிகவும் துடிப்பான காளி, பைரவர், அனுமார், சரபர், வாராகி தெய்வத்தையே உபாசிப்பார்கள். அவ்விதமாக இவர் வாராகி தேவியை உபாசிக்க வேண்டும் என்று எண்ணி ஒரு மாந்திரீக குருமூலம் வாராகி உபாசனையினைப் பெற்றார். அதிலும் இவர் கருடோகம், சிவோகம் போல கருமுறை மாந்திரிகத்தால் தன்னை வாராகியாக நினைத்து மூல மந்திரத்தை செபிக்க வாராகியின் சூக்கும மந்திர சரீரம் உபாசகனின் சரீரத்துள்ளே புகுந்தது. தன்னைத்தானே வாராகி என்ற பாவனை முற்றி விட்டது.

மாலை 5-00 மணிக்குமேல் இவரின் நடை, உடை, பாவனை எல்லாம் வாராகியின் வீரபாவம் ஏற்பட்டு வாராகியின் ஆயுதமாகி உலக்கையை கையில் எடுத்துக்கொண்டு இரவு 12-00 மணிக்கு கொக்கரித்துக் கொண்டு ஊரையே வலம் வருவார். அப்போது நடுத்தெருவின் மையத்தில் பெரிய மரங்கள் இருக்கும். மரத்தின்மீது ஏறி அமர்ந்து கொள்வார். தனியே தெருவில் யாரேனும் வந்தால் அவர்முன் கொக்கரித்து குதிப்பார். கண்ணை உருட்டி விழிப்பார்.

அகப்பட்டவன் பாவியானால் உலக்கையால் நையப்புடைப்பார். தன் எதிரில் செருப்பு அணிந்து யாரேனும் வருவாராயின் அவர் அறியாவண்ணம் வாராகிக்கு முன்னாலேயே மரியாதை இன்றி செருப்பணிவாயோ? என்று மறித்து தள்ளுவார். கிழங்கு வகைகளை உண்டு களிப்பார்.

பசிபசி என்று எப்போதும் சொல்லி படையல் கேட்பார். அதிலும் பஞ்சமி, அஷ்டமி திதிகளில் வாராகி உபாசனை உச்சம் கொண்டு வீட்டில் உள்ளவர்களை அச்சத்தில் ஆழ்த்தி விடுவார். காலை பொழுது விடிய விடிய சாதாரண மனித நிலைக்கு திரும்புவார்.உடல் நலமின்றி படுத்த படுக்கையில் கிடப்பார். ஏதும் அரியதவராக இருக்கும் இவர் இரவில் ஏன் இப்படி செய்கிறார் என்று செய்வது அறியாது கலங்கிய, அவரது குடும்பத்தினர் ஸ்ரீமத் பொன்னபல சுவாமிகளிடத்தில் முறையிட்டனர். அவர் வாராகி சதாசிவ அம்சம், காலம் விரைவில் கனியும் என்றார். பின்னர் ஒருநாள் நள்ளிரவில் வாராகியின் அட்டகாசம் உச்சநிலைக்கு போய் பன்றியைப் போல உருமினார். வீட்டில் உள்ளவர்களைக் கடித்து ரத்தம் சுவைத்தார். இதற்குமேல் இவரை விடக்கூடாது என்று எண்ணி பலரும் கஷ்டப்பட்டு தாம்பு கயிற்றினால் கட்டி பொன்னம்பல சுவாமிகளின் வீட்டு திண்ணையில் உள்ள தூணில் கட்டிப்போட்டனர். சுவாமிகள் வெளிவந்தார்.

வாராகி உபாசகன் முன்னாலே போய் நின்று தன் கண்களால் அவரின் கண்களை உற்று நோக்கினார். வாராகியும் சுவாமியின் கண்களை உற்று நோக்கினாள். சிறிது நேரத்திற்கெல்லாம் வாராகி கர்ஜித்து உருமி அமர்களம் செய்து இரத்த வாந்தி எடுத்து மூர்ச்சையானார். சில நிமிடங்களில் மனசாந்தி ஏற்பட்டது. தன் கரத்தால் விபூதியை தூவி பூசி துடியான தெய்வ மாந்திரிக மந்திரங்கள் உயிருக்கு ஆபத்தானது, அதனால் உனக்கு சடாக்ஷ்சர மந்திரம் உபதேசிக்கிறேன் காலையில் வா என்று உரைத்தார். மறுநாள் காலை நீராடி திருநீறு பூசி வந்த வாராகி உபாசகனுக்கு சடாட்ச்சர மந்திரம் உபதேசம் அருள் செய்தார். அவர்தம் வாழ்நாளில் வாராகி கருமுறை மாந்திரிகம் தலை தூக்காமல் இருந்தது. முருகன் அருள் பெற்ற உத்தமர் ஆனார். அதனால் ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகளை அவரது ஜீவசமாதி மடத்தில் சென்று வணங்கி பணிபவர்களுக்கு மாந்திரிக சக்திகள் செய்வினை முதலானவை யாதொரு தீங்கும் செய்யாது நீங்கும்.


சற்குருவின் அருள்பெற்ற சீடன் கதிர்வேல்

சிவத்தலங்களில் கிரிவலப்பெருமை மிக்க திருத்தலங்கள் மூன்று. 1. திருவண்ணாமலை, 2. திருக்கழுக்குன்றம் - வேதமலை, 3.விருத்தாச்சலம் இறைவனே மலையாக வீற்றிருக்கும் திருத்தலம் இம்மூன்றும் தொன்மை காலம் முதற்கொண்டு கிரிவல பெருமை மிக்கது. அதில் திருக்கழுக்குன்றம்-வேதமலையை கிரிவலம் வருவோரின் எண்ணிக்கை அந்த காலத்திலேயே அதிகம்.

அக்காலகட்டத்தில் கதிர்வேல் என்ற சிவபக்தர் நீண்ட காலமாய் தனக்கு ஏற்பட்டுள்ள தீராத வயிற்று வலியின் கொடுமையில் இருந்து தன்னை காப்பாற்றும்படி வேதகிரீசரை வணங்கி தினம் தோறும் கிரிவலம் வருவது வழக்கம்.

அதன்படி திருவடி பூங்கோயில் அருகில் இறைவனை வணங்கி மனம் கசிந்து அழுது தொழுது வணங்கி கொண்டு இருந்தார். அப்போது ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகளின் அருள்பெற்ற திருக்கழுக்குன்றத்து சீடர்கள் பலரும் கூடி தனது குருநாதரின் மகிமைகளையும் தங்கள் அனுபவங்களையும் திருவடி பூங்கோயில் அருகில் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது தீடீரென வயிற்றுவலி அதிகமாகியது. வலிதாங்காமல் வலிக்கிறதே வயிறு வலிக்கிறதே என்று கத்தியவாறு துடிதுடித்து கிரிவல பாதையில் விழுந்து உருள ஆரம்பித்தார்.

அப்போது நமது சுவாமிகளின் சீடர்கள் அனைவரும் அவரின் நிலைகண்டு வருந்தி ஓடிச்சென்று, தங்கள் குருநாதராகிய செம்பாக்கம் ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகளை நினைத்து இவரை காப்பாற்றும்படி வேண்டி ஒருவர் தன் இடுப்பில் சொருகி வைத்திருந்த விபூதியை எடுத்து அவர் வயிற்றில் பூசிட உடனே வலியின் கொடுமை குறைந்தது. பிறகு அவர் கதிர்வேலிடம் இது எனது குருநாதர் செம்பாக்கம் பொன்னம்பல சுவாமிகளின் கரத்தினால் தரப்பட்ட விபூதி, சிறிது விபூதியை சுவாமியை வேண்டி நீரில் கலந்து பருகினால் உன் வயிற்று வலியின் கொடுமை அறவே நீங்கிவிடும் எனக்கூறி கொடுத்து அனுப்பினார். இதை கண்ணும் கருத்துமாய் தினம் அருந்திவர சில நாட்களிலேயே உடல் நலம் அடைந்தார். சிவபக்தர் கதிர்வேல் செம்பாக்கம் சென்று ஸ்ரீ பொன்னம்பல சுவாமிகளை சந்தித்து நன்றி தெரிவித்து அவரிடமே சிவதீட்சையும் பெற்றுக் கொள்ள வேண்டும். என்ற உறுதி கொண்டவராய் திருக்கழுக்குன்றத்தில் இருந்து அதிகாலையிலேயே கிளம்பினார். காலைவேளை செம்பாக்கம் பொன்னம்பல சுவாமிகள் வீட்டின் விலாசம் விசாரித்து சுவாமிகளின் வீட்டை அடைந்தார். அப்போது சுவாமிகள் கைதிரி நெசவு செய்து கொண்டிருந்தார்.

கதிர்வேல் சுவாமிகளை கண்டதும் விழுந்து வணங்கி தொழுதார். தாங்கள் விபூதியால் என் பல வருட வயிற்று வலியை சில வாரத்தில் தீர்ந்து நலம் பெற்றேன். உடல் எனக்கு சிவ தீட்சை செய்விக்க நலம் தேறியதுபோல் தங்கள் அருளால் ஆத்ம நலமும் அடைய வேண்டும் எனக்கூற ஸ்ரீ பொன்னம்பல சுவாமிகள் தறிக்கால் குழியில் நின்றவாறே தீட்சை தானே இப்போதே தருகிறேன் என் அருகில் வா என்று கூற சுவாமிகளுக்கு அருகில் போய் நிற்க நூல் சுற்றிய தாரை தண்ணீரில் ஊற வைத்துள்ள மண்பானைக்குள் தனது வலது உள்ளங்கையை விட்டு தார் ஊறிய தண்ணீரை அள்ளி இதுதான் உனக்கு முக்தி கொடுக்கவல்ல அமுதமாகும் இதை அருந்தினால் ஞானநிலை தித்திக்கும் என்று சொல்லி கதிர்வேலின் புறங்கையில் தீர்த்தம் சிந்தாவண்ணம் சாதாரண தார் ஊற வைத்துள்ள பானை தண்ணீரை தீர்த்தம் என்பதா? இது ஞானம் தரவல்லதா? இது அழுக்கு தண்ணீர் தானே என்று எண்ணியவராய் குடிப்பதுபோல் பாவணை செய்து உள்ளங்கை தண்ணீரை தன் துண்டில் நழுவ விட்டார்.

சுவாமிகள் அறியாவண்ணம் அத்துண்டை மடித்து தோளில் போட்டுக் கொண்டார். தனக்கு தீட்சை செய்வித்ததற்கு வெற்றிலை பாக்கு, வெல்லம், தம்பிடிகாசு குருதட்சணையாக கொடுத்து நமஸ்கரித்து தெரியாமல் செம்பாக்கத்திற்கு வந்து இவரை குருவாக கொண்டது மனதிற்கு திருப்தி அளிக்கவில்லை. தீட்சை என்றால் மந்திரங்களை காதில் ஓதிதீட்சை தருவார் என்று நினைத்தது தவறானது. வயிற்றுவலி நீங்கியதே போதும், என்று தீர்மானம் செய்து விரைவாய் திருக்கழுக்குன்றம் சென்று தன்வீட்டின் திண்ணையில் அந்த துண்டை தூக்கி எரிந்து விட்டு பிரயாண களைப்பு நீங்க படுத்து உறங்கினார்.

அவ்வேளை தெருவில் தினந்தோறும் பிச்சை எடுக்கும்
பழக்கமான சன்யாசி ஒருவன் அம்மா! தாகமாக இருக்கு குடிக்க தண்ணீர் வேண்டும் எனக் கேட்க அந்த வீட்டு பெண்மணி வெளியே வந்து மடித்து வைத்திருந்த கைத்துண்டை கையில் எடுத்துக கொண்டே பானை தண்ணீர் கொண்டு வரேன் இங்கு உட்கார் என்று சொல்லி வீட்டிற்கு உள்ளே போனாள் குளத்தில் இருந்து கொண்டு வந்த தண்ணிரை மடித்து வைத்துள்ள கைதுண்டை விரித்து சிறிய பானையில் கட்டி அதில் குளத்து நீரை வடிகட்டி ஒருபானை நிறைய தண்ணீர் கொடுக்க அந்த பிச்சைக்கார சன்யாசி அதை வாங்கி அருந்தினார்.

உடனே சன்யாசியின் பார்வை மேல்நோக்கி புருவமைத்தியை உணர ஆரம்பித்தது. அவ்விடத்திலேயே பத்மாசனம் போட்டு சித்தம் சிவன்பால் ஒடுங்கி நிற்க சிவயோகத்தில் திளைக்க ஆரம்பித்தார். தன்னை மறந்து பலமணி நேரம் அசைவற்ற தீபம்போல உடலும் உள்ளமும் நிலைத்தது. அந்த பெண்மணியோ சன்யாசி தண்ணீர் அருந்துவதற்கு முன் இருந்த நிலையும் தற்போத  உள்ள நிலையும் பார்த்து பயந்து போய் உறங்கும் தன் கணவன் கதிர்வேலை எழுப்ப அலுத்துக்கொண்டே எழுந்த அவர் பிச்சைக்கார சன்யாசியின் சிவயோகத்தை பார்த்ததும் ஆச்சர்யம் ஏற்பட்டது.

தான் பலமுறை தியானம் செய் என்று சொல்லியும் செய்யாத சன்யாசி இப்போ பெரிய யோகி மாதிரி அமர்ந்துள்ளதை அறிந்து ஆச்சர்யம் அடைந்தார். இது எப்படி நடந்தது என தன் மனைவியை கேட்க, தங்கள் கைத்துண்டில் குளத்துநீரை வடிக்கட்டி பானையில் கொடுத்தேன் என்று சொன்னதும் கதிர்வேலுவிற்கு மனம் கலங்கியது. வடிக்கட்டிய பானையை எடுத்து பார்த்தால் சொட்டு தண்ணீர் கூட இல்லை. நான் பெரிய மாபாவி என்று “கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை' என்ற பழமொழியை உரக்க சொல்லி அழுது புலம்பினார். செம்பாக்கம் பொன்னம்பல சுவாமிகள் மிகப்பெரிய மகான் அவர் கொடுத்த ஞான தீர்த்தத்தை அறிவிழந்து துண்டில் வேணும் என்றே நழுவவிட்டேன். தறி நெய்துகொண்டே தீட்சை தருவாரோ? என்று மதிமயங்கி விட்டேன் என்று புலம்பினார். குருவருளை தவற விட்டதை தான் உழைத்து தேடிய பலகோடி செல்வத்தை இழந்தவன் போல அன்ன ஆகாரம் இல்லாமல் கிடந்தார்.

பொழுது விடிந்ததும் செம்பாக்கம் சென்று பொன்னம்பல சுவாமிகளிடத்தில் மீண்டும் தீட்சை பெறுவது உறுதி என எண்ணி மறுநாள் காலை பொழுது விடிவதற்குள் சுவாமிகள் வீட்டு திண்ணையில் காத்திருந்தார். கதிர்வேலை கண்ட சுவாமிகள் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையா? குருவின் மீது நம்பிக்கை அற்றவனின் ஜபம், தீட்சை, விரதம், யாகம், தானம், அனைத்தும் வீண்! உனக்கு வயிறு வலிக்கும் போது குருவென நம்பினாய் நலம் அடைந்தாய். தார் ஊறிய பானை தண்ணீரை தரும்போது குருவின்மீது இருந்த நம்பிக்கையை இழந்தாய். ஞான வாழ்க்கையும் இழந்தாய் என்று கூறிட, கதிர்வேல் கதறி அழுது தொழுது என்னை கடைதேற்ற வேண்டும் என கெஞ்சினார்.

சுவாமிகள் காலம் கனிந்து வரும்போது உனக்கு தீட்சை அளிக்கிறேன் எனக்கூறி அனுப்பிட, குருவருள் அற்ற குருடன் நான் என்று மனம் வெதும்பி பின்னாளில் கதிர்வேல் ஸ்ரீ பொன்னம்பல சுவாமிகளின் அருள் பெற்று திருக்கழுக்குன்றத்தில் கதிர்வேல் சுவாமிகள் என்ற பெயரில் சன்யாசியாக விளங்கினார்.

மலை மருந்து விசேஷம், திரிபுரசுந்தரி தவயோக மாலை, திரிபுரசுந்தரி கட்டளை கலித்துறை மாலை, வேதகிரிஸ்வரர் மஹாலிங்க மாலை என பலநூல்கள் கதிர்வேல் சுவாமிகள் இயற்றினார். இவர் இயற்றிய நூலுக்கு இவர் தன்குருவாகிய செம்பாக்கம் ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் மீது குரு வணக்க பாடல் அருளினார். அப்பாடல் கீழ்வருமாறு:

தந்தையும் நீயே தாயும் மென்னீயே சற்குரு நாதனும் நீயே எந்தையும் நீயே இறைவனாய் வந்து எளியனை யாண்ட நன்மணியே
சிந்தையுந் தருகிதேடி செம்பாக்கத் தேசிகனுருவையுங் கண்டேன்
பைந்தமி ழெழுதலெனக் கருள் பொன்னம் பலவனே பரமதேசிகனே.
கண்ணின் மணியில் கருத்தின் தெளிவை
விண்ணில் நின்று விளங்கும் மெய்யினை
எண்ணி எண்ணி இரவும் பகலுமே
நண்ணு கின்றவர் நான்தொழும் பொன்னம்பலமே.


உளுந்தூர்பேட்டை முத்துசாமி செட்டியாருக்கு அருள் செய்தது

உளுந்தூர்பேட்டை முத்துசாமி செட்டியார் என்ற தனவந்தர் வாழ்ந்து வந்தார். முருகபக்தியில் திளைத்தவர். ஆயினும் அவருக்கு கடுமையான வயிற்றுவலி. வயிறு உப்பி மிகவும் பெரியதாக இருந்தது. இதனால் மிகவும் துன்பப்பட்டார். அப்போது இருந்த சித்த வைத்தியரெல்லாம் அணுகி நாடி பிடித்து பார்த்தும் பயனில்லை. உயர்ந்தரக பஸ்பங்களை தேனில் குழைத்து அருந்தியும் பயனில்லை. மருத்துவர்களும் கைவிட்டனர். சிலர் இது உன் முன் ஜென்மத்து வினைபோலும் அதனால் திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வணங்கி அவன் சன்னதியிலேயே தங்கி அபிஷேக பால் மட்டும் சாப்பிட்டு வந்தால் குணமாகும் என்று உறவினர்கள் அனைவரும் ஒரே கருத்தாய் கூற அவ்வழியே உசிதமானதாக கொண்டு செட்டியார் திருச்செந்தூர் செந்தில் நாதன் திருவடியை சரணடைந்தார். சூரனை பிளந்து தேவரைக் காத்த சண்முகா உன் அருளால் இவ்வியாதி தீர்ந்தால் அன்றி இவ்விடம் விட்டு அகல மாட்டேன்.

அதுவும் ஒருமண்டலத்திற்குள் தீரவில்லை எனில் உன் ஆலயத்திலேயே மாண்டு போவது உறுதி என விரதம் கொண்டு முருகனின் அபிஷேக பாலை அருந்தி சதா சடாச்சர ஜெபம் செய்து வந்தார். வயிற்றுவலியும் உப்புசமும் குறைந்த பாடில்லை. இப்படியே ஒருமண்டலம் நெருங்கியது. தனது வியாதி தீர வில்லையே என மனம் வருந்தி 47-வது நாள் அர்த்த ஜாமபூஜையில் முருகனை தரிசித்து முருகா உன்னை நம்பி வந்தேன் பிணி தீர்ந்த பாடில்லை நாளை கடைசிநாள் நாளை தீரவில்லையானால் நாளை அர்த்த ஜாமத்திற்குள் மரணம் அடைவது உறுதி என தன் கை விரலில் இருந்த வைர மோதிரத்தை பொடி செய்து மடியில் கட்டிக் கொண்டு கோயில் வெளி மண்டபத்தில் படுத்தார்.

அவரது கனவில் பின்தலையில் குடுமி, தலையில் மார்பில் ருத்திராட்சமாலை அணிந்து கொண்டு சித்த வடிவாய் தன் மடியில் இருந்த பொடி டப்பாவை எடுத்து மூக்கில் நாசிகா சூரணத்தை உறிஞ்சியவாறு செட்டியாரை தட்டி எழுப்பி உன் குலதெய்வமான திருப்போரூர் முருகனுக்கு புனுகு காவடியும், வேல் காவடியும் எடுத்து கொண்டு பாதயாத்திரையாக சென்று முருகனுக்கு வேலை சமர்ப்பித்து புனுகு சட்டம் சாத்தி வழிபடு உன்வியாதி தீரும் என்று சொல்லி மறைந்தார்.

கனவில் இருந்து விழித்த செட்டியார் தனக்காக அருள் கூர்ந்து வழிகாட்டியதற்கு மனம் மகிழ்ந்து முருகனை கால (திருப்பள்ளி எழுச்சியிலே) உதய மார்த்தாண்ட பூஜையை தரிசித்து வணங்கி உளுந்தூர்பேட்டை திரும்பினார். திருச்செந்தூரில் நடந்த கனவை தன்வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லி உடனே புனுகு காவடியும், வேல் காவடியும் எடுக்க வேண்டிய நாளும் கோளும் பார்த்து நாள் குறித்து ஏற்பாடு செய்தார். (புனுகை பானையில் நிரப்பி காவடியில்கட்டி எடுப்பது புனுகு காவடி. வேல் காவடி என்பது ஆயிரத்திற்கும் மேலான வேல் செய்து பூஜித்து காவடியில் சொருகிஇரண்டு பெரிய வேல் செய்து காவடியில் கட்டி எடுப்பது) மேற்படி காவடிகளுக்கு அபிஷேக அலங்காராதிகள் செய்து செட்டியார் வேல் காவடியும், அவர் தம்பி முனியாண்டி புனுகு காவடியும் எடுத்துக்கொண்டு பாதயாத்திரையாக திருப்போரூர் கிளம்பினார்கள்.

உளூந்தூர்பேட்டையில் இருந்து ஊர்ஊராக தங்கி விரதம் மேற்கொண்டவாறு சிலநாட்களில் திருப்போரூர் அருகில் உள்ள செம்பாக்கத்தை நெருங்கிய போது மாலை சூரியன் மறைந்து இருட்டாகி விட்டதால் காட்டு வழியே செல்ல வேண்டாம் என செம்பாக்கம் கிராமத்திற்குள்ளே இரவு தங்கி காலை கிளம்பினால் சிலமணி நேரத்தில் திருப்போரூர் முருகன் கோயிலை அடையலாம் எனக் கருத்தில் கொண்டு ஊருக்கு வந்தனர். காவடியோடு வந்திருக்கும் வெளியூர்காரர்கள் தங்க இடம் ஏதென விசாரித்தனர்.

(அப்போது நமது பொன்னம்பல சுவாமிகள் தற்போதுள்ள மண்டபத்தில் நிஷ்டைகூடி அமர்ந்திருந்தார்) சுவாமிகளின் மகனார் சிவலிங்கம் வீட்டில் இருக்க நமது தெருமுனையில் உள்ள இடத்தில் காவடிகளை இறக்கி வைக்க தற்காலிக குடிலை உடனே ஏற்பாடு செய்து கொடுத்து உதவினார். பின்னர் செட்டியார் ஊர் பெருந்தனக்காரரைக் காண வேண்டும் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற அவா ஏற்பட, தெருவாரை விசாரிக்க பெருந்தனக்காரர் சதா நிஷ்டையில் இருப்பார். இந்த இரவில் அவரை காண்பது உசிதமல்ல காலை காண்பது நல்லது என முடிவு கொண்டு காவடியருகில் பெரிய தீ பந்தம் ஏற்றி சிலர் காவல் இருக்க மற்றவர்கள் தெரு திண்ணையில் உறங்கி காலை எழுந்து காலைக்கடனை முடித்து நீராடி காவடிக்கான பூஜையெல்லாம் செய்து வணங்கி காவடியை தூக்கினால் காவடியை எடுக்க முடியவில்லை முருகனின் வேல் காவடியும், புனுகு காவடியும் திருவருளால் பூமியில் வேரூன்றி நிலைத்தது. செட்டியார் செய்வதறியாது திகைத்தார். என் வயிற்றுவலி போதாதென தெய்வ குற்றத்திற்கு மேலும் ஆளாவேன் போல் இருக்கிறதே என்று கலங்கினார். தன் உடன் வந்த பம்பை, உடுக்கை, சங்கு, திருச்சின்னம் எல்லாம் ஊதி உடன்வந்த மாந்திரிக பூசாரி மந்திரங்களை உச்சரித்து பல்வேறு பூசணிக்காய், எலுமிச்சை, தேங்காய் எல்லாம் சுற்றி உடைத்தும் பிரயோசனம் இல்லை.

மாந்திரிகன் இங்கு என் மாந்திரிக சக்தி பலிக்கவில்லை. முருகனின் திருவுள்ளம் யாது என அறிய முடியவில்லை என சொல்லினார் மாந்தரீகர். இந்நிலை கண்ட செம்பாக்கம் ஊர்மக்கள் நீங்கள் இவ்வளவு சிரமப்பட வேண்டாம். பெரிய குளத்தருகில் நமது பெருந்தனக்காரரும், எங்கள் ஊரில் உள்ள எல்லோருக்கும் முதல் காவல் தெய்வமான ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகளை கண்டு இதற்கான வழியை விசாரிப்பது நல்லதென அறிவுரை கூற செட்டியாரும், அவர் தம் தம்பியாரும், மாந்திரிக பூசாரிகளும் சுவாமிகளை காண அங்கு சென்றனர்.

சுவாமிகளின் தவக்குடில் மூடியே இருந்தது. உள்ளே சுவாமிகள் நிஷ்டைகூடி நிர்மலமாய் தவத்தில் திளைத்திருந்தார். இவரையும் காண முடியவில்லையே என செட்டியாருக்கு வருத்தம் மேலிட வயிற்றுவலி இதுவரை கானா அளவுக்கு அதிகமாயிற்று. முருகா! முருகா! என்று அலறினார். கதறி அழுதார். செய்வதறியாது அனைவரும் கலங்கினர். அப்போது தவக்குடிலின் கீத்து கதவை திறந்து வெளியே வந்து நின்றார் சுவாமிகள். அவரை கண்டது தான் தாமதம் செட்டியார் எழுந்து ஓடிச் சென்று குருநாதா என்று அழைத்து என்னை தற்கொலையில் இருந்து காப்பாற்றி திருப்போரூருக்கு காவடி எடுக்கச் சொல்லி கனவில் அருள்புரிந்த சித்தபுருஷர் இவர்தான் என உரக்கச் சொல்லி காலை கெட்டியாக பிடித்து கொண்டார் செட்டியார். மனம் மகிழ்ச்சியில் பொங்க ஆச்சர்யமும், அதிர்ச்சியும் நிறைந்தவராய் செட்டியார் மண்டியிட்டு சுவாமிகளின் முழங்காலை கட்டி அணைத்தார். சுவாமிகள் செட்டியாரின் தலையில் தன் கையை வைத்து ஆசீர்வாதம் செய்து உன்ரோகம் நீங்கி விட்டது என்று சொல்லிட அப்போதுதான் செட்டியார் தன் வயிற்றை தொட்டுப் பார்த்தார். வயிறு உப்புசம் சிலநொடிகளில் குறைந்து நன்நிலையில் வந்தது. வயிற்று வலியும் அறவே இல்லாமல் போயிற்று என்பதை உணர்ந்து நன்றி தெரிவித்தார் செட்டியார். இந்த நிகழ்ச்சியை கண்ட அனைவரின் கண்களும் குளமாகியது. சுவாமிகளின் மகிமையை கண்ட அனைவரும் வணங்கி அருள் பெற்றனர். அப்போது செட்டியார் காவடி என்று பிரச்சனையை சொல்ல ஆரம்பிக்க நடந்தவை அனைத்தும் நான் அறிவேன்.

வேல் காவடி மட்டும் இவ்வூரிலே வேர் ஊன்றி நிலைத்து விட்டன. அவற்றை எடுப்பது வேண்டாம். உன்முன் வினை தீர்த்த சக்திவேல் இவ்வூரில் அவ்விடத்திலே ஸ்தாபித்துவிட வேண்டும். இதுவே முருகன் திருவுள்ளம் என, அன்றே ஸ்ரீ பொன்னம்பல சுவாமிகள் தன் திருக்கரத்தால் ஜீவபிரதிஷ்டை செய்து அருளினார்கள். பின்பு செட்டியார் பொன்னம்பல சுவாமிகளை தன் குருவாக ஏற்று சண்முக சடாட்ச்சர மந்திர உபதேசம் பெற்று சுவாமிகளே தன் கரத்தால் புனுகு காவடியை எடுத்து செட்டியார் தோளில் வைத்து திருப்போரூர் அனுப்பி சுயம்பு முருகனுக்கு புனுகு காவடி சமர்பித்து புனுகு சட்டம் சாத்தி வழிபட்டு அருள்பெற்று அன்று இரவு கோயிலில் தங்கி மறுநாள் செம்பாக்கம் வந்து சுவாமிகள் இல்லத்தில் உணவருந்தி வேல்பிரதிஷ்டை செய்த இடத்தில் சிறிய கோயில் அமைக்க திட்டம் தீட்டி அவ்வப்போது வேலையை காரணமாக காட்டி வேலை வைத்துக்கொண்டு அவ்வப்போது உளுந்தூர்பேட்டை செட்டியார் ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகளை தரிசிப்பது வழக்கமாகியது.

                    உடம்பினை பெற்ற பயனாவ தெல்லாம்
                    உடம்பினுள் உத்தமனைக் காண்.  

                                                                         (ஒளவை குறள்)


திருமேனிலிங்க சுவாமிகள் வரலாறு (பழனி சுவாமி)

கன்னியாகுமரியில் ஒருவர் தனக்கு பிள்ளையில்லை என இறைவனை வேண்டி பிறந்தது ஓர் ஆண்மகவு. அதற்கு திருமேனி என்று பெயரிட்டு வளர்ந்து வரும் பருவத்தில் திருமேனியின் தாய் இறந்தார். அதனால் குழந்தையை கவனிப்பாரின்றி இளம் பிள்ளைவாதம் தாக்கி சற்றே ஒருபாதம் வளைந்து காணப்படும். ஆகையால் ஒருகாலால் சற்று சாய்ந்து நடப்பார். குழந்தையை கவனிக்க திருமேனியின் தந்தை மறு கல்யாணம் செய்து கொண்டு வாழ்ந்தார். ஆனாலும் சிற்றன்னையின் கொடுமையால் விரக்தி அடைந்த திருமேனி கடவுளே தனக்கு தாய் தந்தை என எண்ணி வழிபட்டு வந்தார். ஒருநாள் சிற்றன்னை திருமேனியின் கையில் காசு கொடுத்து கீரை தண்டு வாங்கிவர சொல்லி அனுப்பினார். அவனும் கீரை தண்டை வாங்கி வந்து சிற்றன்னையிடம் கொடுக்க அவளோ முற்றிய கீரைதண்டை பார்த்து கோபம் அடைந்து முற்றிய கீரை தண்டை திருமேனி கையிலிருந்து பிடுங்கி திருமேனிக்கு கீரை தண்டாலே பூசை விழுந்தது. இதனால் விரக்தி அடைந்த திருமேனி வீட்டில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கன்னியாகுமரியை விட்டு நீங்கி சுசீந்திரம் சிவன் கோயிலில் தங்கினார். சில நாட்கள் கழித்து அங்கிருந்து ஊர்ஊராக சேத்திராடனம் செய்து கொண்டே விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலை அடைந்தார். அங்கிருந்து குமாரதேவர் மடத்தில் சில காலம் தங்கி மடத்து காரியங்களை செம்மையாக செய்து வாழ்ந்து வந்தார். பின்னர் திருமேனிக்கு திருவண்ணாமலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

அதனால் திருவண்ணாமலை வீரசைவ மடத்தில் சென்று தங்கி அண்ணாமலையாரையும், உண்ணாமுலையம்மையையும் வழிபட்டு நொண்டிக்காலால் தினமும் கிரிவலம் வந்து தொழுவார். அவ்வாறு வரும் காலத்தில் திருவண்ணாமலை ஈசன் திருமேனியின் கனவில் தோன்றி நீ மைலாப்பூரில் உள்ள வீரசைவ திருமடத்தில் முத்தையா சுவாமிகளிடம் சார்ந்து வீரசைவ தீட்சை பெற்று உய்க எனக்கூற, அவ்வாறே திருமேனி திருவண்ணாமலையில் இருந்து சென்னை மைலாப்பூர் வந்து சேர்ந்து கபாலி கற்பகத்தை வணங்கி ஸ்ரீமத் முத்தையா சுவாமிகளை பற்றி விசாரித்து மைலாப்பூர் குமாரதேவர் திருமடத்தை அடைந்தார்.

ஸ்ரீமத் முத்தையா சுவாமிகளை தரிசித்து சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்து நின்றார். அண்ணாமலையார் அருள் ஆணையால் தம்மை தேடிவந்ததை அறிந்து அந்த சோணாசலம் இந்த சோணகிரியிடம் அனுப்பிய திருமேனி நீதானா வா! என்று ஆசீர்வதித்து மடத்திலேயே தங்கிக்கொண்டு பணி செய்ய பணித்தார். சில காலம் கழித்து சிவதீட்சை செய்வித்து வீர சைவ நெறியை ஏற்று மடத்திலேயே திருத்தொண்டு ஆற்றினார். அச்சமயம் ஸ்ரீமத் முத்தையா சுவாமிகள் சதா எப்போதும் நிஷ்டை கூடி நிர்மலமாய் அன்ன ஆகாரம் இல்லாமல் பேசா அனுபூதி பெற்று நிலைப்பது வழக்கமாயிற்று. அப்போது திருமேனி கனவில் ஒருநாள் சுவாமிகள் நிஷ்டை நீங்கியபோது திருமேனி முத்தையா சுவாமிகளை சேவித்து வாய்பொத்தி குனிந்து நின்று அடியேன் ஞானமார்க்கம் அடைய அருளிட வேண்டும் என்று கேட்க, திருமேனி திருமேனிலிங்கம் ஆக அருள் கேட்கிறாய் என்று சொல்லி நீ எமது சீடனாகிய செம்பாக்கம் பொன்னம்பலத்திடம் ஞானம் அடைய கடவாய் என ஆசீர்வதித்து நாளையே கிளம்பும்படி ஆணையிட்டார்.

அவ்வாறே விழித்து எழுந்த திருமேனி நமது குருநாதர் நிஷ்டையில் இருப்பதால் திருமேனிலிங்கம் மைலாப்பூரில் இருந்து திருவான்மியூர் மருந்தீஸ்வரரை தரிசித்து திருபோரூர் ஸ்ரீமத் சிதம்பரசுவாமிகள் சமாதிமடம் சேர்ந்து வணங்கி தான் ஞானம் அடைய காலம் இன்னும் கனியவில்லை என அழுது தொழுது கந்தசாமியை வணங்கி செம்பாக்கம் விரைந்தார். செம்பாக்கத்தை அடைந்ததும் சுவாமிகளை கண்டதுமே திருமேனி லிங்கத்திற்கு மனதில் இனம் புரியாத சந்தோஷம். காரணம் இன்றி கண்களில் கண்ணீர் பெருகியது. உள்ளம் பூரித்தது. உடல் சிலிர்த்தது. ஞானம் தேடி வந்தோம் என்ற நிலையும் மறந்து வணங்கி நின்றார்.

வந்த காரணத்தை புகன்றார். திருமேனி உனக்கும் எனக்கும் ஒரே குரு அதனால் நாம் இருவரும் ஒரே குலத்தை சேர்ந்தவர்கள் சகோதரர்கள் ஆனாலும் குருநாதர் உனக்கு ஞானவாழ்க்கையை நான் தரவேண்டும் என்று கூறியதால் நீ மிகவும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவாய் அதற்கு நீ தயாராக இருக்க வேண்டும். அது எப்படியெனில் குளவியானது புழுவை எடுத்துக் கொண்டுபோய் மண்கூட்டில் அடைத்துச் சிறிய வழிவிட்டு அவ்விடத்தின் வழியே குளவியானது தனது வால் முள்ளினால் புழுவை பலதரம் குத்தி ரீங்காரமான பிரணவ நாதத்தை ஒலிக்க குளவி குத்திய துன்பத்தை சகித்து மகா துன்பத்துடன் நாத ஒலியை கேட்டிருந்த புழுவானது அந்த வடிவம் நீங்கி குளவி வடிவம் பெறுவது போல நான் உன்னை ஞானவாழ்க்கைக்கு கடுமையான பயிற்சிகளை தந்து மனதை லயப்படுத்தி ஞானபீடம் ஏறும்வரை விட மாட்டேன் எனக்கூற திருமேனிலிங்கம் சம்மதித்து இந்த வினாடிமுதல் தங்களை ஞானவாழ்க்ககைக்கான குருவாக ஏற்று வணங்குகிறேன் என்று வணங்கினார். அப்படியானால் நீ இன்று முதல் பிச்சை எடுத்து உண்ணக்கடவாய். அதுவும் மூன்று வீடுகளில் மட்டுமே பிச்சை எடுக்க வேண்டும். பிச்சையை வாய்திறந்து கேட்காமல் ஒவ்வொரு வீட்டு முன்பும் மௌனமாக நின்று பிச்சை எடுக்க வேண்டும்.

அப்படி நீ பிச்சை கேட்கும் மூன்று வீட்டிலும் உணவு குறைவோ (அ) அதிகமோ அதை மட்டுமே உண்ண வேண்டும். என உரைக்க திருமேனி அவ்வாறே கடைபிடித்து பிச்சை எடுத்து உண்டு வந்தார். அதனால் இவரை செம்பாக்கத்தில் உள்ள மக்கள் ஊமை சாமியார் என்றும், நொண்டி சாமியார் என்றும் அழைப்பது வழக்கமாயிற்று.


சீடர் திருமேனிக்கு திருவண்ணாமலை தரிசனம்

ஒருசமயம் திருமேனிலிங்கத்திற்கு திருவண்ணாமலை
அண்ணாமலையார் கார்த்திகை தீபம் பார்க்க செல்ல வேண்டும் என தனது குருநாதர் ஸ்ரீ பொன்னம்பல சுவாமிகளிடம் கேட்டார்.

ஞானவாழ்க்கை வேண்டும் என்பவனுக்கு திருவண்ணாமலையும், அண்ணாமலையாரும் கார்த்திகை தீபம் உனக்குள்ளே இருப்பதை உணர வேண்டுமே ஒழிய, புறத்தில்போய் தரிசித்து என்ன பயன் என்றார் சுவாமிகள். இந்நிலையில் என்ன சொல்லியும் கேட்காத திருமேனிலிங்கம் தீபத்திருநாள் நெருங்க நெருங்க சுவாமிகளை மிகவும் தொல்லை செய்ய தீபத்திருவிழா தானே நான் உன்னை அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னார் சுவாமிகள்.

தீபத்திருநாளும் வந்தது. தன்னை தீபம் பார்க்க அனுப்பாமலிருப்பதற்காக சுவாமிகளை மனதிற்குள்ளேயே திட்டிதீர்த்தார் திருமேனிலிங்கம். திருமேனியின் மனவருத்தத்தை உணர்ந்த சுவாமிகள் என்ன திருமேனி ஏன் சோகமாய் இருக்கிறாய்? என்று ஒன்றும் தெரியாததுபோல கேட்டார்.

இன்று கார்த்திகை தீபத்தை காண கொடுத்து வைக்கவில்லை என சோகமாக மறுமொழி சொன்னார் திருமேனி. இதற்காகவா கவலைப்படுகிறாய்? அப்படியே என்னை நெருங்கி வந்து என் கண்களை பார் தீபத்தை காண்பாய் என்றார்.

என்ன அதிசயம் சுவாமிகள் சொல்லியபடியே சுவாமிகளின் கருவிழியை நோக்கிட, கார்த்திகை தீப காட்சிகள் கண்முன்னே நிகழ்வன போல காட்சிகள் தெரிய பார்த்துக்கொண்டே தன்னை மறந்து "திருவண்ணாமலைக்கு அரோகரா" என உரக்க உரைத்தார். இது எப்படி சாத்தியமாகிறது? அதோ தீபம் ஏற்றப்படுகிறது. மலைக்கு கீழே இருந்து மேலே சென்ற கூட்டம் கீழ்நோக்கி வரும் காட்சியை கண்டு மெய் சிலிர்த்தார். தான் சுவாமியை மிக சாதாரணமாக நினைத்து விட்டோமே என்று தன் தவறுக்கு வருந்தி வெட்கப்பட்டு நெடுஞ்சாண்கிடையாகி விழுந்தார். "குருவே சர்வலோகானம்” என்ற வார்த்தை சொல்லி வணங்கி மனம் நெகிழ்ந்தார்.


திருமேனிக்கு சுவாமிகள் வைத்த சோதனை

ஒருமுறை திருமேனிலிங்கம் மௌனமாய் மூன்று வீட்டின் முன் நின்று பிச்சை கேட்க, ஒருவீட்டில் மட்டுமே உணவு கிடைத்தது. அதை உண்ண அமர்ந்த போது எங்கிருந்தோ வந்த ஒருநாய் அந்ந உணவில் வாய் வைத்தது. அதை கண்ட திருமேனிலிங்கம் சிறிய கல்லை எடுத்து எறிந்தார். உடனே நாயின் பாதத்தில் பட்டு இரத்தம் சிந்தியது, இதை கண்ட திருமேனி உள்ளம் நொந்தார். இதை தன்குருவிடம் சொல்லி தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும் என சுவாமிகளின் வீட்டிற்கு சென்றார். இப்போது திண்ணையில் அமர்ந்திருந்த பொன்னம்பல சுவாமிகள் பாதத்தில் அடிபட்டு இரத்தம் வருவதை கண்ணுற்று திருமேனி தங்களுக்கு என்ன ஆனது என்று வினவி விசாரித்தபோது நீநாய்மீது எறிந்த கல் என் பாதத்தின்மீது பட்டு இரத்தம் கசிகிறது என்று கூறிட திருமேனிலிங்கம் கதிகலங்கி தங்களையா நான் கல்லால் எறிந்து சிவஅபராதம் செய்தேன் என்று கலங்கி மன்னிப்பு கேட்க, பிறஉயிர்களின் பசியை நீக்கும் பண்பு உயர்ந்த தவம் உடையவருக்கே உரியதாயின் நீ செய்தது நியாயம் இல்லை. உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் துறப்பதே துறவு. அதுவே ஞானம். உனக்கு ஒருவேளை உணவில் ஏன் பற்று வந்தது?

எவனுடைய மனம் அடக்கியாளப்பட முடியவில்லையோ அவன் தன் ஆத்மானுபூதி என்ற பயண இலக்கை சென்றடையாமல், பிறவி பிணியை நீக்கி சிவஞானம் அடைய முடியாது. ஆகையால் நீ மிகவும் கவனமாக நடந்து கொண்டுவருவது அவசியம் எனக் கோபமாக கடிந்து கொண்டார்.

இதனால் பொன்னம்பல சுவாமிகள் எல்லா இடத்திலேயும் உயிரிலும் நீக்கமற நிறைந்து உள்ள தன்மையை கண்டு கொண்டு பிச்சை நேரம் மட்டும் அல்லாது சர்வவியாபியாகவும் எல்லா உயிர்களுக்குள்ளும் நீங்கமற நிறைந்த அந்தர்யாமியாயும் உறையும் தனது குருவே சிவம் என உணர்ந்து, இனி எப்போதும் யாரிடமும் பேசுவதில்லை என முடிவு கொண்டார். தன் ஞான குருவாகிய ஸ்ரீ பொன்னம்பல சுவாமிகளிடம் மட்டுமே வாய்திறந்து பேசுவேன் பிறரிடம் பேச மாட்டேன் என உறுதி கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சுவாமிகள் மீது திருமேனிக்கு பேரன்பு புலப்பட்டது. புறத்தில் குருவின் வடிவில் சிவனே இருப்பதாக உணர்ந்தார். அவரது அசாதரணமான மகாசக்தியையும், ஞான சாதுர்யத்தையும் உணர்ந்தார். சுவாமிகளின் திருவுள்ளத்திற்கு இசைந்த வாழ்வை வாழ்ந்தார். அதனால் மகிழ்ந்து திருமேனிலிங்கத்திற்கு சிவ தீட்சை செய்து வைத்தார்கள் ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள்.

முதல் தீட்சையில்
ரோமத்துவாரங்கள் மூலம் உடலில் உள்ள கெட்ட நீர் வியர்வையாகி கசியும்.

இரண்டாவது தீட்சையில்
வாத, பித்த, சிலேத்தும தோஷம் நீங்கி சமம் அடையும்.

மூன்றாவது தீட்சையில்
பழைய கெட்ட இரத்தம் உடலில் கசியும்.

நான்காவது தீட்சையில்
சரீரத்தில் தோலுரியும்.

ஐந்தாவது தீட்சையில்
சட்டை கழன்று சிவந்த நிறத்தில் தோலுரியும், பஞ்சமூர்த்தியும் அருள் செய்யும்.

ஆறாவது தீட்சையில்
சுழுமுனை திறந்து திரிகால ஞானம் உண்டாகும்.

ஏழாவது தீட்சையில்
சட்டை வெளுப்பாய் கழன்று, தீபம் போல் உடல் ஒளிரும்.

எட்டாவது தீட்சையில்
உடல் லேசாகமாறி காற்றில் மிதப்பர். கூடுவிட்டு கூடுபாயும் சக்தி கிடைக்கும்.

ஒன்பதாவது தீட்சையில்
தேகம் சூரிய பிரகாசமாய் அஷ்டமா சித்தியும் கிட்டி, உலகத்தில் உள்ள அனைத்து தேவ, தேவதைகள் சொன்னதை செய்வார்கள்.

பத்தாவது தீட்சையில்
தேகம் தீபம்போல பிரகாசித்து ஆயுதங்களால் துளைக்க முடியாத சொரூப சித்தியாம். அதாவது பிரணவ தேக சித்தியாம். இத்தகைய நிலையை போதித்து திருமேனிலிங்கத்திற்கு அருள்புரிந்தார்.

தனது குருவின் கருணையால் பல்வேறு தவசித்திகளை அடைந்த திருமேனிலிங்கம் அஷ்டமாசித்திகளும் பெற்று, சதாசிவ யோகத்திலேயே நிர்மலமாய் இருந்தருளினார். தாம் அடைந்த எல்லா யோக சித்திகளுக்கும் தன் முயற்சியைவிட சற்குரு பொன்னம்பல சுவாமிகளின் திருவருளே தன்னை உயர்த்தியது என்ற தெளிவை பெற்று விளங்கியதால், திருமேனிலிங்கம் தான் எப்போதும் சுவாமிகளை விட்டு நீங்காமல் அவ்விடத்திலேயே இருப்பது என முடிவு கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகளும், ஸ்ரீ திருமேனிலிங்க சுவாமிகளும் இரட்டை சித்தர்களாக செம்பாக்கத்தில் விளங்கினார்கள்.

ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் மஹாசமாதி அடைந்த மூன்றாவது நாள் கழித்து ஸ்ரீ திருமேனிலிங்க சுவாமிகளும் ஜீவசமாதி அடைந்தார். தற்போதுள்ள திருமடத்தின் விநாயகர் சன்னதியின் பின்புறம் ஸ்ரீ திருமேனிலிங்க சுவாமிகளின் சமாதி வடக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது.


மயிலாப்பூர் சித்திரகுளம்

ஸ்ரீ முத்தையா சுவாமிகள் அருளிய சின்மய தீபிகை என்ற ஞான நூலை, வடலூர் அருட்பிரகாச வள்ளல் இராமலிங்க சுவாமிகள் பதிப்பாசிரியராக இருந்து மீண்டும் (வழக்கு ஒழுக்கத்தை) பதிப்பித்தார் என்றால், ஸ்ரீமுத்தையா சுவாமிகள் ஞானத்தின் உச்சியில் வீற்றிருந்தார் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை! வள்ளலாரின் ஞானவாழ்க்கைக்கு கைவிளக்காக திகழ்ந்தது "சின்மய தீபிகை" என்பது முற்றும் பொருந்தும்.

திருக்கையிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவண்ணாமலை, துறையூர், திருமுதுகுன்றம் ஸ்ரீகுமாரதேவர் திருமடம் 20-ஆம் பட்டம் ஸ்ரீ சொக்கலிங்க சிவப்பிரகாச சுவாமிகளுக்கு குருவாய் இருந்தவர் ஸ்ரீமத் முத்தையா சுவாமிகள்.

விருத்தாசலம் ஸ்ரீ குமாரதேவர் ஆதின திருமடமாகிய சென்னை திருமயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் உள்ள ஸ்ரீ குமாரதேவர் கிளைமடத்தில் எழுந்தருளி இருந்தார்கள். இவர் இருந்தது கிளைமடமானாலும் வீர சைவத்திற்கு ஆணிவேராய் இருந்தார்.

ஸ்ரீ முத்தையா சுவாமிகளின் முக்கியமான சீடருள் சிறந்தவராய் இல்றைத்திலிருந்தே ஞானவாழ்வில் உயர்ந்தவர் செம்பாக்கம் ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள். அவரோடு ஸ்ரீ திருமேனிலிங்க சுவாமிகள் எப்போதும் சேர்ந்தே இருப்பார்கள். மற்றும் வேளச்சேரியில் வாழ்ந்த ஸ்ரீ பெரிய சிதம்பர சுவாமிகள் என்ற மூவரும் தனது குருநாதர் ஸ்ரீமத் முத்தையா சுவாமிகளை அணுகி சிவானந்த ஞான அனுபவங்களை கைவரப்பெற்றவர்கள் கூடுவிட்டு கூடு தாவுதல் என்ற "பரகாய பிரவேசம்" செய்து மயிலாப்பூர் குளத்தில் நீராழி மண்டபத்தில் கூடுவார்களாம், அதனால் இக்குளத்திற்கு "சித்தர் கூடும் குளம்" என்று பெயர் விளங்கிற்று. இது தற்போது சித்திரகுளம் என அழைக்கப்படுகிறது.

ஒரே நேரத்தில் ஒரே உருவத்தில் பல இடங்களில் உலா வருவது வெவ்வேறு உருவத்தில், வெவ்வேறு இடங்களில் நடமாடுவது. இவர்களுக்கு வழக்கமான சித்தாடல்கள்!


வெள்ளிக்கிழமை தரிசனம்

வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் தன்வீட்டில் பூஜை அறையில் பூஜைமுடித்து ஊர்பொது மக்களின் குறை கேட்டு விபூதி கொடுத்து எல்லா வியாதிகளையும் நீக்கி விடுவார். ஆகையால் வெள்ளிக்கிழமை மாலை வேளையில் சுவாமிகளின் வீட்டில் மக்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள்.


சகல ஜீவராசிகளின் குறை தீர்ப்பவர்

ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் மாடு, ஆடு, குதிரை,நாய், யானை, எறும்பு, குருவி, காகம், பாம்பு, ஆமை, மீன் முதலிய எல்லா உயிர்களிடமும் பேசும் திறம் படைத்தவர் என இளைய சுவாமிகளின் கையேட்டில் படித்திருக்கிறேன். அதுமட்டுமல்ல மரம், செடி, கொடிகளிடம், பேசி அதன் குறையை நீக்கியதாக அந்த ஏட்டில் அறிய முடிந்தது. இவர் பல ஆண்டுகள் உண்ணாமலும், உறங்காமலும் தவத்தில் வாழ்நாள் கழித்ததாக அறிய முடிகிறது.


ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் மகா சமாதி அடைதல்

ஒருவன் உடலில் இருந்த உயிர் பிரியும் தருவாயில் இருக்கும் அவனது ஆத்ம பயணம் அமைதியாகவும், எளிதாகவும் அமைய வேண்டிய உல விஷயத்தில் இருந்து அவன் எண்ணத்தை நீக்கி இறைவனின் (அ) இறைவனின் நாமத்தையே பாராயணம் மற்றும் ஜெபமோ செய்வது நம் வழக்கம். சற்குரு ஸ்ரீ பொன்னம்பல சுவாமிகளுக்கு அத்தகைய உதவி எதுவும் தேவையில்லை என்றாலும் தன்னை சார்ந்த மக்களுக்கு வழிகாட்டும் பொருட்டாக இவ்வழக்கத்தை திருமேனிலிங்க சுவாமிகளிடம் சிவபுராணத்தை பாராயணம் செய்யும்படி ஆணையிட்டார்.

இதனால் சுவாமிகளின் இறுதி காலத்தை அவரே அறிந்தும் அறியாதவர்போல நடந்து கொண்டார் என்பதே உண்மையாகும். தை மாதம் ஒருநாள் திருமேனிலிங்கத்தை சுவாமிகள் அழைத்து மாணிக்கவாசகர் அருளிய ஞானத் தாழிசை உபதேசித்து அருளினார்கள். இதனால் சிவானந்த வெள்ளத்தே முழுகினார்.

மேலும் திருமேனியிடம் மாணிக்கவாசகரின் சிவபுராணத்தை சதா மனதில் ஜெபிக்க உத்தரவிட்டார். இவ்வளவு வருடத்தில் இம் முறைதான் முதலில் ஒருநூலை பாராயணம்செய் என்று சொல்லுவதை உணர்ந்த திருமேனி கேள்வி ஏதும் கேட்காமல் மனதால் பாராயணம் இரவு பகல் பாராமல் செய்து கொண்டே இருந்தார். ஞானத்தாழிசை என்ற ஞானநூல் மாணிக்கவாசகர் ஞானநிலையில் உள்ள அதிதீவிரதர பக்குவர்களுக்கு மட்டுமே உபதேசித்து மற்ற பக்தி கண்டிகளுக்கு உபதேசித்தால் இருக்கும் அரைகுரை பக்தியும் கெட்டு போய்விடும் என்று அக்காலத்தே திருவாசகத்தோடு இதை சேர்த்து பதிப்பாகாமல் மிகுந்த ஞான நிலையில் இருக்கும் சற்குருமார்கள் மட்டுமே இதை ரகசியமாக வைத்துள்ளனர். இளைய சுவாமிகளின் கையேட்டில் கிழிந்து கிடந்த கையெழுத்து பிரதியை அடியேன் படித்துள்ளேன்.

ஞானத்தாழிசையில் அப்படி என்னதான் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால், வடலூர் இராமலிங்க சுவாமிகள் தம் ஆறாம் திருமுறையில் எதை சொல்லி உள்ளாரோ அதுவே ஞானத்தாழிசையில் உள்ளது. ஞானத்தாழிசையை கொண்டுதான் வள்ளலார் ஆறாம் திருமுறையை தம் அனுபவத்தில் கூறி இருக்கிறார்.)

இப்படியே சிலநாட்கள் கடந்த பிறகு, தற்போது நால்வர் திருமடம் உள்ள இடத்தருகில் ஒருபெரிய புளிய மரம் இருந்தது. அதில் எப்போதும் புளியங்காய் காய்ப்பதில்லை! ஆனால் அவ்வருடம் இம்மரத்தில் அமோகமாய் புளியங்காய் காய்த்து தொங்கியது! அதனால் கிராமத்தில் இருந்த மற்ற பெரியவர்கள் சுவாமிகளை பெருந்தனக்காரர் என்ற முறையில் இவ்வருடம் புளியமரத்தை உலுக்கி வந்த பழத்தை நாம் அனைவரும் பிரித்துக்கொள்ள வேண்டும் என முறையிட்டனர். சுவாமி சிறிது மௌனமாய் இருந்து விட்டு வேகமாக சொன்னார் "இந்த வருடம் எவனுக்கும் புளியை பிரித்து கொடுக்க முடியாது." பழத்தை உலுக்கி பொது ஏலம் விட்டு வரும் பணத்தை கிராம பொது செலவுகளை கவனிக்க வேண்டும் இதுவே இறுதியான முடிவாகும் என்று உறுதிபட தெரிவித்தார். உடனே மற்ற ஊர் பெரியவர்களும் பதிலேதும் பேசாமல் சென்றனர்.

மாசி மாதம் ஒருநாள் சுவாமிகள் தன்மகன் சிவலிங்கத்தை அழைத்து திருப்போரூர் கோயிலில் கொடியேற்று விழாவிற்கு நமது உளுந்தூர்பேட்டை முத்துசாமி செட்டியார் அன்னதானத்திற்கு தேவையான அரிசி, பருப்பு போன்ற மளிகை பொருட்கள் தருவதாக சொல்லி இருக்கிறார். அதனால் நேரில் சென்று விழாவிற்கு அழைத்து விட்டு உடனே மளிகை பொருட்களையும் கொடுப்பார் வாங்கி கொண்டு வா என சொல்ல, சிவலிங்க முதலியார் மாட்டு வண்டி கட்டி கொண்டு சிலருடன் உளுந்தூர்பேட்டை கிளம்பினார். மறுநாள் சிவராத்திரி அன்று இரவு முழுவதும் நமது ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகளும், திருமேனிலிங்க சுவாமிகளும் சிவயோகத்தில் ஆழ்ந்த நிஷ்டை கூடி நின்றனர். மறுநாள் காலை ஊர்மக்களும் அவர்தம் சீடர்களும் சுவாமிகளிடத்தில் நமஸ்காரம் செய்து விபூதி பெற்று சென்றனர். அப்போது நமது சுவாமிகள் அடியேன் எப்போது சிவசாயுஜ்யம் அடைவேனோ என்று மனதில் நினைத்த மாத்திரத்தில் "புளிய மரத்தில் புளி உலுக்கினால் சிவகதியாகிய பழம் விழும்" என முத்தையா சுவாமிகளின் அசரீரியை உணர்ந்தார். அதே நேரத்தில் திருமேனிலிங்கமும் இதை உணர்ந்தாராயினும் தான் மட்டும் இவ்விடத்தில் நிலைப்பது நியாயமில்லை, குருவாகிய உங்களிடம் அன்றி வேறொருவரிடம் பேசா நிலையில் நான் இங்கு இருக்க வேண்டா, தங்களுடன் நானும் வரவேண்டும் என வரம் கேட்க, சுவாமிகள் கண்ணிணால் ஆகாயத்தை உற்றுநோக்கி நான் ஒடுக்கமாகி குகை இறங்கிய மறுநாளே உன்னை என்னுடன் அழைத்துச் செல்வேன் எனக்கூற திருமேனிலிங்கம் மகிழ்ந்தார்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு வழக்கம் போல் சிலதினங்கள் கடந்தது அன்று மாசி மாதம் பூர்வபட்சம் உத்தராடம் நட்சத்திரம் அன்று தனது தந்தையார் சமாதிக்கருகில் உள்ள தவக்குடிலில் அதிகாலை நிஷ்டைநீங்கி தன்வீட்டிற்கு திரும்பினார். என்றுமில்லாத மௌனமும் பரம சாந்தமும் தேஜோமயமான முகமுண்டலமும் திகழ்ந்திருந்த வேளையில் ''ஊர்பொது புளியமரத்தில் ஏறி புளியை உலுக்குகிறார்கள்” என்று கூவிக்கொண்டே சுவாமிகளிடம் ஓடிவந்து ஒருவர் சொல்ல அதை காதில் கேட்ட வினாடியே தம் பிராண வாயுவை சூரிய நாடியால் ஊர்த்துவ முகமாய் திருப்பி சாம்பவி யோகத்தில் மஹாசமாதி கொண்டு தனது வலது கையால் விசுத்தியில் ஸ்பரிசம் கொள்ள நில்லா உயிரை உடலில் நிற்க வைக்கும் ஆற்றல் படைத்த இதுவே சோடக்கலையின் மகத்தான வெற்றியாக அறிவித்து பத்மாசனத்தில் சின் முத்திரையோடு அமர்ந்தார். கர்ப்பத்தில் கூடுவிட்டு கூடுபாயும் தொடர் ஓட்டத்தின் உருமாற்றம் என்பது இதில் தடுத்து நிறுத்தப்படுகிறது. மறுபிறவியின் சுழற்சி இதில் நிரந்தரமாக தகர்க்கப்படுகிறது. சர்வசக்தி படைத்த சிவனை போல் எந்த ரூபத்திலும் அரூபத்திலும் கால தேசவர்த்தமானத்தை கடந்து எங்கு வேண்டுமானாலும் சுயவிருப்பப்படி தோன்றி நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது.

சர்வலோகத்தையும் வினாடியிலே திக்விஜயம் செய்ய முடிகிறது. இதுவே ரூபத்தோடு சித்தி அடைகிற மாஹசாம்பவியோக மஹா சமாதி ஆகும். இதையே நம் ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் செய்தார். தொடர் நிஷ்டையில் பல நாட்கள் தொடர் தவம் செய்வது இவரது வழக்கம் என்பதால் மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளமல் சாதாரணமாக நினைத்து அவரவர் வேலைக்கு சென்று விட்டனர்.

திருமேனிலிங்கம் நடந்த விஷயத்தை கேள்வியுற்று சுவாமிகளை கண்டு மனம் நெகிழ்ந்தார். குருநாதரை பிரிந்தும் தான் உயிர் வாழ்வதை நினைத்து மனம் பதைத்து கண்ணீர் உகுத்தார். ஆனால் மற்றவரோ இந்த ஊமைசாமியாரின் கண்ணீர் சொல்லும் அர்த்தத்தை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை, காரணம் சுவாமிகள் நிஷ்டையில் இருப்பதாகவே நம்பினார்கள் மக்கள்.

உளுந்தார்பேட்டை முத்துசாமி செட்டியார் கனவில், நான் சிதம்பர ரகசியத்தை காண பயணம் புறப்பட்டேன், சிவலிங்கத்தை உடனே அனுப்பு எனக்கூற, செட்டியார் விழித்து எழுந்து தேவையான அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் எல்லாம் வண்டியில் ஏற்றி “சுவாமி சிதம்பரம் புறப்படுகிறாராம்" உன்னை உடனே வரச்சொன்னார் எனச்சொல்லி அனுப்பிட 2 நாட்களுக்குள் சிவலிங்க முதலியார் வந்து சேர்ந்தார். அவர் கிராமத்தின் உள்ளே தவக்குடிலை தாண்டும்போதே திருமேனிலிங்கம் பேசாமல் சமிஞ்சை மூலம் சுவாமிகள் சமாதி அடைந்தார் என தெரிவிக்க, ஊரே திரண்டு அழுது நின்றனர். இன்னும் பலர் அன்ன ஆகாரம் இல்லாமல் பட்டினி கிடந்தனர். நம்மை காப்பாற்ற இனி யார் வருவார் எனக் கலங்கினர்.

"யார் என்னிடம் பக்திகொண்டு தன் சமாதியில் சரணடைந்தாலும் அவர்களை நான் காப்பாற்ற தவறுவதில்லை" என்று ஓலைச்சுவடியில் இருந்ததாக இளைய பொன்னம்பல சுவாமிகளின் கையேட்டில் இருந்ததை படித்திருக்கிறேன் இப்போது அதை இவ்விடத்தில் நினைவு கொள்கிறேன்.

(ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 72 மணிநேரம் சிவலிங்க முதலியார் வீட்டிற்கு வரும்வரை சுவாமிகள் தன் இல்லத்தில் மஹாசமாதியில் அமர்ந்திருந்தார்.) ஸ்ரீ சுவாமியின் திருமேனிக்கு மஹாதிருமஞ்சனம் செய்து சகலசோடச உபசாரமும் செய்து பன்னிரு திருமுறைகள் ஓத, நாதஸ்வர மேளதாளத்துடன் ஊர்வலமாகவர எல்லோரும் வெற்றிலை பாக்கு, பழம், தேங்காயுடன் ஆரத்தி காண்பித்து நீண்ட காலம் சுவாமிகள் தவம் செய்த இடத்திலேயே சிவலிங்க முதலியார் கரங்களினால் சடங்குகளை நிறைவேற்ற திருமேனிலிங்க சுவாமிகள் முன்னிலையில் சமாதி கிரியை நடைபெற்றது.


சமாதி கிரியை

அந்தமில் ஞானிதன் னாகந்தீ யினில்
வெந்திடி னாடெலாம் வெப்புத் தீயினில்
நொந்தது நாய்நரி நுகரினுண் செரு
வந்துநாய் நரிக்குண வாகும் வையகமே.

எண்ணிலா ஞானியுடலெரி தாவிடில்
அண்ணல் தங்கோயில் அழலிட்டதாங்கொக்கும்
மண்ணின் மழைவிழா வையகம் பஞ்சமாம்
என்னரு மன்னர் இழப்பார் அரசே.

புண்ணியமாமவர் தம்மைப் புதைப்பது
நண்ணியனல் நோக்கில் நாட்டில் அழிவாகும்
மண்ணி லழியில் அலங்கார பங்கமாம்
மண்ணுல கெல்லாம் மயங்குமனல் மண்டியே.

ஏகமாய் அகண்டமாய் பரிபூரணமாய் நிறைந்து இருக்கிற தனது சொரூபசித்தி அறிந்து அனுபவம் பெற்ற ஞானியின் தேகத்தை தீயினில் வெந்து போகும்படி கவனியாது விட்டால் அப்பகுதி மக்கள் பல தலைமுறைக்கு வறுமையில் அழிய நேரிடும். மண்ணில் மழை விழாது பஞ்சம் ஏற்படும். சிவாலயத்திற்கு தீ வைத்ததற்கு சமமான பாவத்தை அப்பகுதி மக்கள் பெறுவர்.

அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால் அந்தவுடல்தான் குகை செய்திருந்திடில் சுந்தர மன்னருந் தொல்புவியுள்ளோரும் அந்தமில் இன்ப அருள்பெறுவாரே

ஒப்பற்ற ஞானியின் உடலை குகை செய்து அடக்கம்செய்து மெய்யுணர்வோடு வழிபாடு செய்வார்களானால் அப்பகுதி மக்கள் இம்மை, மறுமை இரண்டிலும் நிரந்தரமாக இன்பம் பெறுவார்கள். ஞானியின் உடலை குகைக்குள் அமைக்கும் இடம்பற்றி திருமூலர் கூறியபடியே

தன்மனை சாலை குளக்கரை யாற்றிடை
நன்மலர்ச் சோலை நகரினற் பூமி
உன்னருங் கானம் உயர்ந்த மலைச்சாரல்
இந்நிலந்தான் குகைக் கெய்தும் இடங்களே.

ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் உறக்கமில்லாது தவம் செய்த தன்மனையிலேயே குளத்தின் கரையிலேயே குகை செய்தனர். அதில் ஒன்றேகால் அடி ஆழமுள்ள முக்கோணத்தில் 1 அங்குல கனம் நல்ல விபூதி பரப்பி அதன்மீது நல்நவரத்தினம், பஞ்சலோகம் பதித்து அதன்மீது 1 அங்குலம் விபூதியை பரப்பி, தர்பாசனம் அமைத்து, குகையின் முக்கோணம் வட்டம், சதுரம் ஆகிய உட்புறத்தில் சந்தனம், குங்குமப்பூ, பச்சை கற்பூரம், புனுகு, ஜவ்வாது, அதில் சேர்த்து குழைத்து குழம்பை சுவற்றில் பூசி 6 அடி உயரம் மூன்றரையடி உயரமுள்ள கெட்டியான துணிபை தைத்து பையின் அடியில் மூன்றரை அங்குலம் விபூதி பரப்பி அதில் ஞானயின் உடலை எழுந்தருளச் செய்து குகையின் முக்கோணத்தில் வடக்கு திசை நோக்கி பையை பிடித்து அமர வைத்து பையை பிடித்து உடலை சுற்றி 6 படி விபூதி கொட்டி அதன் மேல் 6 படி உப்பு கொட்டி வயிறு அளவு நிரப்பி 1 கிலோ கட்டி கற்பூரத்தை பொடி செய்து தூவி அதன்மேல் உப்பு விபூதி, செங்கல்பொடி சமஅளவு கழுத்துவரை கொட்டி அதன்மேல் 1 கிலோவிற்கு குறையாது கற்பூர பொடி தூவி அதன்மேல் மஞ்சள்பொடி, உப்பு, விபூதி சமமாய் கலந்து 1 கூடை தூவி அதன்மேல் சிரசில் அரைகிலோ கட்டி கற்பூரம் தூள் செய்து துணியில் முடித்து தலைக்கட்டு கட்டி அதன்மேல் 3 அங்குலம் விபூதி நிரப்பி அதன் பூசைகளை செய்து துணிப்பையின் வாயினை கட்டி சுண்ணாம்பு தளம் அமைத்து

ஆதனமீதில் அரசு சிவலிங்கம்
போதும் இரண்டினில் ஒன்றைத் தாபித்து
மேதகு சந்நிதி மேவுத்தரம் பூர்வங்
காதலிற் சோடசங் காணுபசாரமே.

அதன்மீது சிவலிங்கம் அமைத்து வழிபட வழிவகை செய்தனர். மறுநாள் அன்று இரவு சுவாமிகள் தன்னைவிட்டு சென்றதாக வருந்தி சமாதியிடத்தில் திருமேனிலிங்கம் கலங்கினபோது, ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் சமாதியில் இருந்து அருள் உருக்கொண்டு திருமேனிலிங்கத்தின் ஆத்மையை, அழைக்க திருமேனிலிங்கமும் சமாதியில் அமர்ந்து ஒடுங்கினார். அவருக்கும் மறுநாள் சமாதி குகை செய்து ஊர்மக்கள் நல்லடக்கம் செய்தனர். பின்னர் சிவலிங்கம் ஸ்தாபித்து ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகளின் மடாலயமாக உருவாக்கி சுவாமிகளின் சந்ததியரும், ஊர்மக்களும் தன்னோடு வாழும் தெய்வமாக எப்போதும் வணங்கி வருகின்றனர். 16-வது நாள் ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகளின் சிவசாயுஜ்ஜிய திருமஞ்சனம் செய்து உளுந்தூர்பேட்டை முத்துசாமி செட்டியார் கொடுத்த மளிகை பொருட்களை கொண்டு சுற்றி உள்ள பல கிராம மக்களுக்கு அன்னதானம் செய்தனர்.


                              உடம்பினை பெற்ற பயனாவ தெல்லாம்
                              திடம்பட ஈசனை தேடு

                                                                                             ஔவைக்குறள்


இளைய பொன்னம்பல சுவாமிகளின் வாழ்க்கையும்
அவர் நிகழ்த்திய அற்புதங்களும்

சற்குரு ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகளின் மகன் சிவலிங்கம், சொர்ணம்மாள் தம்பதியரின் இளைய மகனாக ஸ்ரீ பொன்னம்பல சுவாமிகள் 08-12-1914 ஆம் ஆண்டு அவதரித்தார். இவர் இறையருளாலும், தனது தாத்தாவின் குருவருளாலும் சிறுவயதிலேயே சதாசிவ சிந்தனையுடனும், தனது தாத்தாவின் நினைவுடனும் வாழ்ந்து தனது தாத்தாவையே குருவாக ஏற்க வேண்டி மிகுந்த வைராக்கியத்துடன் அவரே தனக்கு தீட்சை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சதா அவரையே நினைந்து, நினைந்து தியானம் செய்து வரும் காலத்தில் ஒருநாள் கண்ணாடியில் தனது தாத்தாவான சித்த புருஷர் காட்சி தந்து ஆசி கூறினார். அதுமுதல் தனது தாத்தாவின் ருத்திராட்சமாலை அணிந்து அவர் பூஜை செய்து வந்த பாணலிங்கத்தையும் தனது தாத்தாவின் காலடி சுவட்டை பின்பற்றி அவருடைய வாழ்க்கை போலவே வாழ்ந்து இறை தொண்டாற்றி மக்கள் சேவையும் செய்து வந்தார். இவரும் தனது குருவை போலவே செங்குந்த மரபின் உறவின்முறை தலைவராக இருந்து நியாயத்தையும், தர்மத்தையும் நிலைநாட்டி சிவானுபவத்தை அனுபவித்து வாழ்ந்தார்.

இவர்தனது அண்ணன் நடேசனாரின் கட்டாயத்திற்கு இணங்கி தனது மாமா மகளான சைதாப்பேட்டை சகுந்தலா அம்மையாரை மணம்புரிந்து வாழ்ந்து வந்தார். இவர் சித்தர் பொன்னம்பல சுவாமிகள் போலவே பல சித்தாடல்களையும் புரிந்து வந்துள்ளார். இவரும் தனது உறவினரும் நண்பருமான சைதை திரு. இராமலிங்கனாரும் அடிக்கடி விருத்தாசலம் குமாரதேவர் மடம் ஆதீனம் 22-ம் பட்டம் சிவப்பிரகாச சுவாமிகளை சந்தித்துவிட்டு திருவண்ணாமலைக்கு சென்று வருவர்.

1. சுவாமிகள் நண்பர் சைதை இராமலிங்கனார் செய்யும் பூஜை முறைகளை செம்பையில் இருந்தபடியே தொலைவிலுணர்தலின் படி உணர்ந்து பூஜை முறைகளை பற்றி கூறுவார்.

2.இளைய சுவாமிகளின் சித்தாடல்களை கேள்வியுற்ற ஆணவம் பிடித்த ஒரு சந்நியாசி இவரை சோதிக்க எண்ணி இவரது வீட்டை அணுகி நீவிர் தான் சித்தரோ? நீவிர் என்னைவிட பெரியவரா எனக்காக சிவனே என்னிடம் வருவார் என ஆணவத்தின் உச்சிக்கே சென்று பேசினார். நமது சுவாமிகள் மௌனமாய் இருந்தவராய் நீவிர் மிகுந்த களைப்புடன் இருப்பீர் போலும் சிறிது நீர் அருந்துங்கள் என சொல்லி, மனைவியிடம் சுவாமிகளுக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வரச்சொல்லி தனது கையில் வாங்கி, அதை சாமியாருக்கு தந்தார் இளைய சுவாமிகள். தண்ணீரை குடிப்பதற்கு முன்னேவாய் கொப்பளித்து நீரை துப்பினார் சாமியார். துப்பும்போது நீருடன் அவரது பற்கள் அனைத்தும் கொட்டியது. பல்போனால் சொல் போகும் என்பதற்கு ஏற்ப அவரின் புண்ணியத்தை இழந்து, ஆணவம் ஒடுங்கி, இளைய சுவாமிகளின் மகிமையை உணர்ந்து அவரை வணங்கி திருநீறு பெற்று ஆசிபெற்றார்.

3. இவரது காலத்தில் திருப்போரூர் அருகிலுள்ள காட்டுக்குளம் பகுதியில் முக்கலம்மன் என்ற சிறுதெய்வம், அச்சாலையில் போகும் மக்களுக்கு துன்பம் செய்து மகிழ்ந்து வந்தது. அதனால் அப்பகுதியில் இரவில் செல்வதற்கு அஞ்சுவர். ஒருநாள் நமது சுவாமிகள் சைதை சென்று திரும்பி வரும்போது அவரது காரின் முன்பு வந்து வந்து மறைந்து போனது, கண்ணாமூச்சி ஆடியது, அதனைக் கண்டு சுவாமிகள் மக்களை துன்புறுத்துவது நீதானா, உனக்கு இன்று முடிவு கட்டுகிறேன் எனக்கூறி, அதை சாந்தப்படுத்தி நல்தேவதையாக்கினார்.

4. ஸ்ரீ பொன்னம்பல சுவாமிகள் நண்பகல் சிவபூஜையிலிருந்த நேரத்தில் தனது வீட்டிற்கு வந்த ஒருவர் உணவை யாசித்தார் சுவாமிகளின் மனைவி சகுந்தலா அம்மையார் உணவு இல்லை போய் வா என்று சொல்லி விட்டார். பூஜையில் இருந்த சுவாமிகள் பூஜை முடிந்து வந்து வந்தது யார்? என்று கேட்டார். நடந்ததை கூறினார்கள். வெளியில் சென்று பார்த்தார் யாருமில்லை. சுவாமிகள் வருத்தப்பட்டு தனது வீட்டு திண்ணையில் சிறிது நேரம் மௌனமாய் இருந்து வீட்டிற்கு வந்தார். உடனே சகுந்தலா அம்மையார் சுவாமிகளை சாப்பிட அழைத்தார். சுவாமிகளும் சரி என அமர்ந்து குண்டோதர மந்திரத்தை உச்சரித்து விட்டு சாப்பிட தொடங்கினார். வீட்டில் இருந்த உணவு தீர்ந்த போதிலும் பசி அடங்கவில்லை மேலும் உணவு வேணும் என்று கேட்கிறார். பிறகு அக்கம் பக்கம் வீடுகளில் இருந்த எல்லா உணவையும் சாப்பிட்ட பின்னரும் பசி அடங்கவே இல்லை. இதை கண்டவர்கள் சகுந்தலாவிடம் நடந்ததை கேட்டு சுவாமிகளிடம் சகுந்தலா அம்மையாரை மன்னிப்பு கேட்க சொல்லி தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு பின்னாளில் பசி என வருவோருக்கு உணவு உபசரித்து வந்தார்.

5. இளைய பொன்னம்பல சுவாமிகள் தம்வாழ்நாளில் ஒவ்வொரு ஆண்டும் மாசி உத்திராடம் மகாகுருபூஜை திருநாளை மிகச்சிறப்பான முறையில் அபிஷேக ஆராதனைகள் செய்து செம்பாக்கம் மற்றும் சுற்றிலும் உள்ள கிராம மக்களுக்கு அழைப்பு விடுத்து மகேஸ்வர பூஜை எனும் அன்னதானத்தை வெகுசிறப்பாக செய்து வந்தார். வறட்சி காலங்களில் பூஜை சிறப்பாக நடைபெறாது என நினைத்த காலத்திலும் குருபூஜை வெகுசிறப்பாக நடைபெற்றது.

6.சற்குரு மகானை போலவே ஊர்மக்கள் அனைவரின் குறைகளை இளைய சுவாமிகளும் திருநீறு தந்து போக்கி வந்தார். எனவே இவரிடம் ஆசிபெற மக்கள் அனைவரும் வெள்ளிக்கிழமைகளில் இவரின் வீட்டிற்கு வந்து ஆசிபெற்று செல்வார்கள்.

7. ஊரின் கோவிலுக்கு பூஜை செய்யும் பூஜகர் ஒருநாள் சுவாமிகளை பார்த்து, சுவாமிகளே எனது வீட்டில் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது அடுத்த வேளை உணவுக்கு கூட அரிசி இல்லாத நிலையில் நாங்கள் இருக்கிறோம் எனக்கு ஏதாவது ஒருவழி கூறுங்கள் சுவாமி என்றார். உடனே சுவாமிகள் சிறிது மௌனமாய் இருந்து பின் பூஜகரிடம், நீ உன் வீட்டிற்கு சென்று அரிசி பானையை பார் என்று சொல்லி அனுப்பினார். அந்த பூஜகரும் வீடு வந்து அரிசி பானையை பார்த்தார். பானையில் அரிசி நிறைந்து இருந்ததை கண்டு குருவின் பெருமையை எண்ணி உள்ளம் பூரித்தார் பூஜகர்.

8. இளைய சுவாமிகள் செம்பாக்கத்தின் முடிசூடா இளவரசராகவும், மகா சித்தரின் வழியில் ஞானியாகவும் வாழ்ந்தவர். இவர் தனது மண்ணுலக வாழ்க்கை முடியும் காலத்தை உணர்ந்து தனது சீடர் சுப்பிரமணி முதலியாரிடம் கூறினார். அதுபோலவே 21-12-1976 அன்று இரவு அவரது சீடர், பேரொளியோடு விண்ணிலிருந்து பல்லக்கு வருவதை கண்ணுற்று, தனது குருவின் வீட்டிற்கு விரைந்தார். நள்ளிரவு சுவாமிகளின் ஆத்மஜோதி சிவத்துடன் கலந்தது.

அவருடைய பூத உடல் பெரிய சுவாமிகளின் ஜீவசமாதி சிவலிங்கத்தின் எதிரில், தற்போது நந்தி உள்ள இடத்தின் கீழ் பெட்டியில் வைத்து வில்வம், விபூதி, உப்பு, மஞ்சள்பொடி சமாதியில் வைத்து அதன்மேல் நந்தியம்பெருமானை பிரதிஷ்டை செய்தனர். இவருக்கும் அவரது வழிவந்த குடும்பத்தினரால் இன்றளவும் மார்கழி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் குருபூஜையும், வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது.

தில்லை சிதம்பரத்தானின் திருவடியைதான் தொழுது அவன் அருளாலே அவனடி சேர்ந்த செம்பை பொன்னம்பல சற்குரு நாதனின் மலரடிக்கு
சரணம் சரணங்களே!


இங்கனம் ஸ்ரீ மத் பொன்னம்பல ஸ்வாமிகள் திருமடாலய நிர்வாகிகள் - செம்பாக்கம்

தொடர்புக்கு

சி. விவேகானந்தன்
செல் : 9094498845

சி . பொன்னம்பலம்
செல் : 9840224400

கோயில் அர்ச்சகர் அலங்கார செம்மல்
நி. குழந்தைவேல் ஐயர்
செல் : 9710124577


 

 

Written by Sivapuranam Mission

Please speak to us (Mobile: 9003059000) or write to us (Email: bc-07@Fhyzics.net) about the Sivan temples in your area so we can come up with articles which will be of immense benefit to Siva devotees. WE DON’T ACCEPT ANY POOJA CONTRIBUTIONS OR DONATIONS. Instead, we encourage you to contact the respective temple management directly.

Leave a Reply

    இதுபோன்று உங்கள் பகுதியில் உள்ள பழமையான சிவன் ஆலயங்களின் வரலாறு உங்களுக்கு தெரிந்திருந்தால் 9003059000 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது bc-07@fhyzics.net என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளவும்.