hero-img1

Sri Megambigai Sametha Sri Meganadeshwarar Temple

In: Tamilnadu
0 Comments

ஸ்ரீமேகாம்பிகை சமேத மேகநாதேஸ்வரர் ஆலயம்

1800 வருடம் பழைமையான சிவாலயம்

வாட்டம் நீக்கி வளங்கள் அருளும் வாசுகி நர்த்தனர் திருக்கோலம்! அபூர்வத் திருக்காட்சி! சென்னை வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் கண்டிகை தாண்டியதும் மேலக்கோட்டையூரில் உள்ளது ஸ்ரீமேகாம்பிகை சமேத மேகநாதேஸ்வரர் ஆலயம். இது தாம்பரத்தில் இருந்து 17 கி.மீ தூரத்தில் உள்ளது

இறைவன் மேகநாதேஸ்வரர் மிக அழகாக கம்பீரமாக சதுர ஆவுடையராக மேற்கு நோக்கி எழுந்தருளி உள்ளார். ஒரு மேற்கு நோக்கிய சிவலிங்க தரிசனம் என்பது ஆயிரம் கிழக்கு நோக்கிய சிவலிங்க தரிசனத்துக்கு ஒப்பானது என்பர். ராவணேஸ்வரன் ஒருநாளில் நூறு மேற்கு நோக்கிய சிவலிங்க தரிசனத்தைக் கண்டபிறகே உணவு எடுத்துக் கொள்வான் என்றும் அதற்காகவே அவன் புஷ்பக விமானத்தை உருவாக்கினான் என்றும் புராணத் தகவல் ஒன்று உண்டு.

சதுர ஆவுடை லிங்கம் என்றாலே அது மிக மிகப் பழைமையான ஆலயம் என்றும் சொல்வது உண்டு. மேலும் சதுர ஆவுடை ரிஷிகளால் ஸ்தாபிக்கப்படுவது என்ற ஐதீகமும் உண்டு. அம்பிகை அழகே வடிவாக நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார். இவளை வழிபட மாங்கல்ய வரமும், பலமும் கிட்டும் என்கிறார்கள்.

blog cover

துர்வாசர் ஒருமுறை வேள்வி எழுப்பிக் கொண்டிருக்கும் வேளையில் வருணன், விளையாட்டாக அந்த வேள்வியை தடுக்கவும், தனது ஆற்றலைக் காண்பிக்கவும் கடும் மழையைக் கொட்டினான். இதனால் கோபம் கொண்ட துர்வாசர், குளிர்ந்த தேகம் கொண்ட வர்ணனுக்கு கடுமையான வெப்பு நோய் வருமாறு சபித்தார். இதனால் உடலெங்கும் வெப்பம் பெருகிய வர்ணன், முனிவரைத் தொழுது சாப விமோசனம் வேண்டினான்.                                                             

முனிவரின் ஆலோசனைப்படி இங்கு வந்த வருணன், இங்கிருந்த ஸ்வாமியைக் கண்டு வணங்குகிறான். இங்கேயே தங்கி இருந்து, அவனுடைய வாகனமான மகரம் எனும் முதலையைக் கொண்டு இங்கு மகரத் தீர்த்தம் உருவாக்கி ஸ்வாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து சாபவிமோசனமும் பெறுகிறான் என்கிறது தலபுராணம். மேகங்களின் தலைவனான வருணன் வழிபட்ட ஈசன் என்பதால் சுவாமி மேகநாதேஸ்வரர் என்ற திருநாமம் கொண்டார். அவரோடு அருள்பாலிக்கும் அம்பிகை மேகாம்பிகை என்றும் திருப்பெயர் கொண்டார் என்கிறது புராணம்.

இன்றும் சீதளம், வெம்மை சம்பந்தமான நோய் கண்டவர்கள் இங்கு வந்து பலன் பெற்று செல்கிறார்கள். கடுமையான தலைவலி, தலைப்பாரம் கொண்டவர்கள் இங்கு வந்து வழிபட நிவர்த்தி பெறலாம் என்கிறார்கள். நோய் தீர்க்கும் அற்புதத் தலமாக மேகநாதேஸ்வரர் கோயில் விளங்கி வருகிறது.

பிறகு ராமாயண காலத்தில் சிவபக்தனான ராவணனின் திருமகன் இந்திரஜித் எனும் மேகநாதன், இங்கு வந்து நீண்ட ஆயுளைப் பெற உதவும், யம பயம் நீக்கும் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமத்தை செய்தான் என்றும் கூறப்படுகிறது. இதனாலும் இந்த ஆலய ஈசனின் திருப்பெயர் மேகநாதேஸ்வரர் என்றானதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த ஆலயத்தின் வரலாற்றுப் பதிவு என்று பார்த்தால், இங்குள்ள நீண்ட கல்வெட்டு ஒன்று பாதி படிக்க முடியாத நிலையில் தேய்ந்து காணப்படுகிறது. படிக்க முடிந்த எழுத்துக்களை வைத்துப் பார்த்தால், இது ராஜராஜ சோழனின் காலத்தில் திருப்பணி செய்யப்பட்ட கோயில் என்று தெரிய வருகிறது. ராஜராஜ கேசரி என்று அந்த குறிப்பில் உள்ளதால் அது நிச்சயம் ராஜராஜனைத்தான் குறிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். மேலும் சில கல்வெட்டு பாறைகள் இங்கு கவனிப்பாரின்றி அழிந்து விட்டது என்கிறார்கள்.

தொண்டை மண்டலம் புலியூர்க் கோட்டம் பிரிவுக்கு கீழ்கொண்டுவரப்பட்ட சுரட்டூர் நாட்டின் ஒரு பகுதி மேலக்கோட்டையூர். அப்போது தாம்பரத்தின் பெயர் குணசீலநல்லூர். அப்போது மேலக்கோட்டையூர், மேகநாதநல்லூர் என்று வழங்கப்பட்டதாம். IMG_20220219_112901-1

புராணத் தொன்மையும் வரலாற்றுப் பெருமைகளும் கொண்ட இந்த ஊரும், ஆலயமும் காலப்போக்கில் சிதைந்து அழிந்து போக, ஊர் மக்களும் சிவனடியார்களும் ஒன்றிணைந்து இந்த ஆலயத்தை புனரமைத்து, 2006-ம் ஆண்டில் குடமுழுக்கு செய்தனர். இங்கு சுப்பிரமணியர், கணபதி, ஐயப்பன், நவகிரங்கள், காலபைரவர் உள்ளிட்ட சந்நிதிகளும் உள்ளன.

சிறப்பினும் சிறப்பாக இங்கு வாசுகி நர்த்தனர் எனும் அபூர்வ சிவவடிவம் ஒன்றும் திருக்காட்சி தருகின்றது. காளிங்க நர்த்தகராக பகவான் கிருஷ்ணரைப் பல ஆலயங்களில் தரிசனம் செய்திருப்போம். ஆனால் 'வாசுகி நர்த்தனர்' எனும் சிவ வடிவத்தை நம்மில் பலரும் தரிசித்திருக்க மாட்டோம். வாசுகி பாம்பின் மீது சிவபெருமான் நர்த்தனமானும் திருக்கோலமே வாசுகி நர்த்தனர் திருக்கோலம்.

தேவர்கள் அமுதம் கிடைக்க வாசுகியையே கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடந்தனர். அமுதமும் பெற்றனர். இதனால் தேவர்களுக்கு அமுதம் கிடைக்க தானே காரணம் என்று எண்ணியதாம் வாசுகி பாம்பு, அதனால் ஆணவத்தில் படம் விரித்தாடி விஷம் கக்கி சகலரையும் அஞ்சச் செய்தது. இது கண்டு பயந்த தேவர்கள் ஈசனை சரண் அடைய, ஈசன் வாசுகியின் தலைமீது தன் திருப்பாதம் வைத்து நாட்டியம் ஆடினார். ஈசனின் வேகத்தால் நிலைகுலைந்த வாசுகி அவரிடம் அபயம் கேட்டது. வேண்டியவருக்கு அருள் செய்யும் விமலானாம் ஈசன், வாசுகியை மன்னித்துத் தன்னுடைய கழுத்தில் அணிந்து கொண்டு நாகாபரணராகத் திருக்காட்சி அளித்தார்.

பத்து திருக்கரங்களோடு வாசுகி மீது திருப்பாதம் தாங்கிப் புன்னகையோடு நிற்கும் நடன மூர்த்தியை நாள் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். இரு கரங்கள் அபய வர ஹஸ்தங்களாக மற்ற திருக்கரங்களில் மான், மழு, யோக முத்திரைகளோடு அருள கம்பீரமாகக் காட்சி தருகிறார் ஈசன். இவரை தரிசித்து வழிபட்டால் நாகதோஷம் விலகும், போட்டி பொறாமைகளில் இருந்து விலகி நலம் பெறலாம். வாட்டத்தை நீக்கும் இந்த வாசுகி நர்த்தனரை வணங்கி சகல கலைகளிலும் தேர்ச்சி பெறலாம் என்கிறார்கள் அன்பர்கள்.
 
இங்கு பிரதோஷ நாள்களில் 108 சங்காபிஷேகம் நடைபெறும். 6 பிரதோஷங்களுக்கு இளநீர், மஞ்சள் பொடி வாங்கிக் கொடுத்து ஈசனை வழிபட்டால் திருமண வரம் கிட்டும் என்கிறார்கள். அதேபோல் தயிர் தந்து வழிபட்டால் மழலைப்பேறும், கருப்பஞ்சாறு தந்து வழிபட்டால் பதவி உயர்வும் கிட்டும் என்கிறார்கள். உடல் நோய்கள் விலக சந்தனாதித் தைலமும் கடன் நிவர்த்தி பெற அரிசி மாவும் அபிஷேகப் பொடியும் வாங்கித் தந்து பலன் பெறலாம் என்கிறார்கள்.

இதையெல்லாம் விட இங்கு ஒரு விசேஷ வழிபாடு ஒன்று உண்டு. அதுதான் ஆயுளை நீடிக்கும் சக்தி வாய்ந்த ஆயுஷ் ஹோமமான மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம். இந்த ஹோமம் இங்கு ஏன் விசேஷம் என்றால், மார்க்கண்டேய மகரிஷி முதன்முதலாக ஜபித்து வழங்கிய 16 மூலமந்திரங்களையும் இங்கு பலமுறை உருவேற்றி ஹோமத்தில் சமர்ப்பித்து நடத்துகிறார்கள். திருக்கடையூர் போன்ற பழைமையான ஆலயங்களில் மட்டுமே முறைப்படி நடத்தப்படும் இந்த ஹோமம் இங்கு வெகு சிரத்தையுடன் நடைபெறுகிறது. இந்த ஹோமத்தில் கலந்து கொண்டால், பூரண ஆயுளும், யம பயம் இல்லாத வாழ்வும் கிட்டும் என்கிறார்கள். நீண்ட ஆயுளும், நிறைந்த ஆரோக்கியமும், நீடித்தப் புகழும், நிறைவான செல்வமும் இந்த ஹோமத்தால் கிட்டும் என்பது நம்பிக்கை.


திருவிழாக்கள்

தை மாதம்: முருகப்பெருமானுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறும்.

மாசி மாதம்: மஹா சிவராத்திரி திருவிழா மிக விமர்சையாக நான்கு கால பூஜைகள் நடைபெறும், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர், மஹா சிவராத்திரி அன்று தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

பங்குனி மாதம்: உத்திரம் நட்சத்திரம் அன்று ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை.

சித்திரை மாதம் - ஒவ்வொரு ஆண்டும் சித்திரை ஒன்றில் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.

வைகாசி மாதம்- முருகனுக்கு பால் குடம் வைபவம் நடைபெறுகிறது.

ஆணி மாதம்: திருமஞ்சனம் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

ஆடி மாதம்: பௌர்ணமி அன்று அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

ஆவணி மாதம்: விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் பெருமானுக்கு 1008 லட்டுகளால் ஸஹஸ்ரநாம அர்ச்சனை நடைபெறுகிறது.

புரட்டாசி: பௌர்ணமி நன்னாளில் அம்பிகைக்கு மஹா சண்டி யாகம் மிக விமர்சையாக நடைபெறுகிறது.

ஐப்பசி: பௌர்ணமி நன்னாளில் அன்னாபிஷேகம் நடைபெறும்

கார்த்திகை: பௌர்ணமி,கார்த்திகை தீபம் மற்றும் கார்த்திகை மாத நான்கு திங்கள்கிழமைகளிலும் சிவபெருமானுக்கு சோம வார 1008 சங்காபிஷேகம் பூஜைகள் ருத்ர ஹோமத்துடன் நடைபெறும்.

மார்கழி: நடராஜருக்கு ஆருத்ரா பூஜைகள் நடைபெறும்.

[ஓவ்வொரு பிரதோஷதிற்கும் சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது]

 

ஆலய பரிவார தெய்வங்கள்

விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், பைரவர், நவ கிரகங்கள், சண்டிகேஸ்வரர், வாசுகி நர்தனர், அன்னதான ஐயப்ப சுவாமி

ஆலயமுகவரி

 

கோயில் திறந்திருக்கும் நேரம் 

திங்கட்கிழமை
7:30–8:30 am, 5:30–7:00 pm

செவ்வாய்க்கிழமை
7:30–8:30 am, 5:30–7:00 pm

புதன் கிழமை
7:30–8:30 am, 5:30–7:00 pm

வியாழக்கிழமை
7:30–8:30 am, 5:30–7:00 pm

வெள்ளிக்கிழமை
7:30–8:30 am, 5:30–7:00 pm

சனிக்கிழமை
7:30–8:30 am, 5:30–7:00 pm

ஞாயிற்றுக்கிழமை
7:30–8:30 am, 5:30–7:00 pm


ஆலய அர்ச்சகர் தொலைபேசி
திரு சிவா குருக்கள் - 99622 67285

ஆலய தர்மகர்த்தா தொலைபேசி

திரு முரளி ஐயா - 9884532898


இத்திருக்கோயிலின் வரலாற்றை கூறிய ஆலய அர்ச்சகர் திரு சிவா குருக்கள் மற்றும் ஆலய தர்மகர்த்தா திரு முரளி ஐயா அவர்களுக்கும் எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.


வரவிருக்கும் விழாக்கள்

Meganadeshwarar Mahasivaratri 2023

Melakottaiyur Sivan Temple Mahasivratri 2023


Written by Sivapuranam Mission

Please speak to us (Mobile: 9003059000) or write to us (Email: bc-07@Fhyzics.net) about the Sivan temples in your area so we can come up with articles which will be of immense benefit to Siva devotees. WE DON’T ACCEPT ANY POOJA CONTRIBUTIONS OR DONATIONS. Instead, we encourage you to contact the respective temple management directly.

Leave a Reply

    Related Post

    இதுபோன்று உங்கள் பகுதியில் உள்ள பழமையான சிவன் ஆலயங்களின் வரலாறு உங்களுக்கு தெரிந்திருந்தால் 9003059000 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது bc-07@fhyzics.net என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளவும்.